உலக மகளிர் தினம் கட்டுரை

Magalir Thinam Katturai In Tamil

இந்த பதிவில் பெண்களை பெருமைப்படுத்தும் “உலக மகளிர் தினம் கட்டுரை” பதிவை காணலாம்.

பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மகளிர் தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வரலாறு
  3. பெண் கல்வி
  4. பெண்களின் பெருமை
  5. பெண்மையைப் போற்றியவர்கள்
  6. முடிவுரை

முன்னுரை

பெண்மையை போற்றிய புனித மண் நம் பாரத புண்ணிய மண். மண்ணில் சேவை செய்து விண்ணளவு புகழ் பெற்றவர் அன்னை தெரசா. விண்வெளியில் கால் பதித்து மண்ணில் நிலைத்த பெருமை பெற்றவர் கல்பனா சாவ்லா.

உலக மகளிர் தினமானது ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும்.

பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வரலாறு

பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.

1920 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.

பெண் கல்வி

சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட, குடும்பத்தை திறம்பட நிர்வகிக்க, உலகத்தை பேணிக் காக்க, பொருளாதார நிலை மேம்பட, பெண் கல்வி அவசியமாகிறது.

ஒரு பெண் கல்வி கற்றவளாக இருந்தால் பிரச்சினைகளை அறிதல், ஆராய்தல், தீர்வு காணல், மாற்று வழிகளை கண்டறிதல்,நேரத்திட்டமிடுதல் போன்ற பல நன்மைகளை பெற முடிகிறது.

பெண் கல்வி மூலம் நடைமுறை அறிவு பெறச்செய்தல், தொழில் திறமையினை வளர்த்தல், தன்னம்பிக்கையை உருவாக்குதல், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தல் போன்றவற்றினை மேம்படுத்தலாம்.

பெண்களின் பெருமை

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர்.

புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும் நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் பலர் போற்றுகின்றனர்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன.

பெண்களைத் தெய்வமாக போற்றுவதனால் தான் நதிகளுக்கு கூட கங்கை, காவேரி, யமுனா, சரஸ்வதி என பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத்தியிருக்கின்றனர்.

பெண்மையைப் போற்றியவர்கள்

உலக அளவில் நாட்டின் ஆன்மிக தத்துவ ஞானத்தை, உணர்த்திய வீரத்துறவி சுவாமி விவேகானந்தரும் பெண்மையை போற்றியவர்களில் தலைசிறந்து விளங்குகிறார்.

மகாகவி பாரதியார் பெண்மையை போற்றுவதை தன் மனைவியிடமிருந்தே தொடங்கினார்.

“செல்லம்மா எனக்கு சமமாக பக்கத்தில் அமர்ந்து கொள். உடலமைப்பில் மாறுபட்டாலும் ஆணையும், பெண்ணையும் சமமாகவே இறைசக்தி படைத்துள்ளது. எண்ணங்களும், உணர்வுகளும் ஒன்றே ஆகும்” என கூறிப் பெருமைப்படுத்தினார்.

முடிவுரை

பெண்கள் பல சாதனைகள் படைத்து வெற்றி நடைபோட்டாலும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களும் தொடர்ந்தவண்ணமே இருப்பது வருத்தத்திற்குரியதாகும்.

எனவே இவற்றை ஒழிக்க நம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு பெண்மையைப் போற்றுவோம். பெண்மையைக் கொண்டாடுவோம்.

You May Also Like:
அன்பு பற்றிய கட்டுரை
சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை