திருப்பூர் குமரன் வாழ்க்கை வரலாறு

கொடிகாத்த குமரன் வாழ்க்கை வரலாறு

இந்தியா தேசம் சுதந்திரமடைய பல தலைவர்கள் அரும்பணி ஆற்றினர். அநேகமான மக்களுக்கு இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களாக மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் என்பவர்களையே பொதுவாக தெரியும்.

ஆனால் இவர்களை காட்டிலும் இன்னும் பல தலைவர்கள் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு உயிரை மாய்த்துள்ளனர். அந்த தலைவர் வரிசையில் திருப்பூர் குமரனும் ஒருவராக காணப்படுகின்றார்.

வேறு பெயர்கொடிகாத்த குமரன்
பிறந்த இடம்ஈரோடு சென்னிமலை
பிறந்த ஆண்டு1904 ஜனவரி 04
தந்தைநாச்சிமுத்து
தாய்கருப்பாயி
மனைவிராமாயி
இறப்பு1932 ஜனவரி 11
திருப்பூர் குமரன் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை

திருப்பூர் குமரன் தனது ஆரம்பகால கல்வியை சென்னிமலையில் உள்ள பள்ளியில் படித்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த குமரனுக்கு தொடர்ந்து பள்ளி சென்று படிக்க வசதி இன்மையால் தனது படிப்பை நிறுத்தி விட்டு, பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர்களது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை செய்தார்.

ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

அப்போதெல்லாம் போக்குவரத்துக்கு போதிய வசதிகளோ பேருந்து வசதிகளோ இல்லாத காரணத்தால் இவர் மாட்டு வண்டி அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாக சென்று வியாபாரம் செய்து வந்தார். பின்னர் இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது.

அங்கு குமரன் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார்.

திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினராக சேர்ந்து பொதுப்பணிகளில் ஈடுபட்டார்.

அத்துடன் குமரன் கடவுள் நம்பிக்கை உள்ளவர், எனவே பஜனைப் பாடல்கள், நாடகம் போடுதல், கூட்டம் போட்டுப் பேசுதல் என்று நடவடிக்கைகளில் ஈடுபடலானார்.

அத்துடன் குமரனுக்கு அவருடைய பத்தொன்பதாவது வயதில் பெற்றோர்கள் இராமாயி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

சுதந்திரப் பணி

கதர் இயக்கம் திருப்பூரில் சிறப்பாக நடந்து வந்தது. குமரன் கதர் இயக்கத்தில் கலந்து தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிரஸ் தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார். காந்தியடிகள் திருப்பூர் வருகை தந்திருந்தார்.

1932இல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகி இருந்தது.

பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது. ஆங்கிலேய அரசு அடக்குமுறையை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது.

எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது.

தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்கள் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிலையில் 1932 ஜனவரி முதலாம் நாள் அன்று நடந்த ஆங்கிலேய அரசுக்கான இவ்வெதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது ஆங்கிலேய காவல்துறையினரால் குமரன் தாக்கப்பட்டார்.

தாக்கப்பட்டு கீழே விழுந்த போதிலும் தனது கையில் இருந்த அக்கால சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்த காரணத்தினால் தான் “கொடிகாத்தகுமரன்” என்று அழைக்கப்பட்டார். பின்னர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் உயிரிழந்தார்.

நினைவு

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூரில் “திருப்பூர் குமரன் நினைவகம்” ஒன்றை அமைத்துள்ளது. இங்கு நூலகம், படிப்பகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

அத்துடன் குமரனின் நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நினைவுத் தபால்தலையை இந்திய அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது.

You May Also Like :
கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை
சுதந்திர போராட்ட தியாகிகள் கட்டுரை