கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை

திருப்பூர் குமரன் பற்றிய கட்டுரை

இந்த பதிவில் திருப்பூர் மண்ணிற்கு பெருமை சேர்த்த “கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இவர் திருப்பூர் மண்ணிற்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாது தமிழர்களையும் தலைநிமிர வைத்தவர் ஆவார்.

கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. திருமணம்
  4. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு
  5. இறப்பு
  6. முடிவுரை

முன்னுரை

ஆலமரம் கீழே விழும்போது அந்த மரம் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதைத் தாங்கிப் பிடித்த விழுதுகள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஓர் மாயைதான் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் நடந்தது.

காந்தியடிகளை நினைவுகூறும் நாம் அவரை சுற்றி அவரை பாதுகாத்து வந்த பலரையும் மறந்துவிட்டோம். அப்படி மறக்கப்பட்ட நபர் தான் கொடிகாத்தகுமரன் ஆவார்.

இவர் திருப்பூர் மண்ணிற்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாது தமிழர்களையும் தலைநிமிர வைத்தவர் ஆவார்.

இத்தகைய கொடிகாத்த குமரன் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு

ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி நெசவாளர் நாச்சிமுத்து கருப்பாயி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் குமாரசாமி ஆகும்.

நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் அங்கிருந்து திருப்பூருக்கு இடம் மாறினர்.

மேலும் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார்.

திருமணம்

தந்தைக்கு உதவியாக அவர் நெய்த துணிகளைத் தலையில் வைத்துக்கொண்டு திருப்பூர் வரை சென்று கொடுத்துவிட்டு வந்து கொண்டிருந்தார்.

தானே சுயமாக தறி நெய்து குடும்பம் நடத்த முடியாமல் போகவே கணக்கு எழுதும் வேலை தேடி திருப்பூருக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார்.

அதன் பின்னர் 1923 இல் தனது 19-வது வயதில் 14 வயது உடைய ராமாயி என்பவரை மணமுடித்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு

கொடிகாத்த குமரன் காந்தியின் கொள்கையால் அதிக ஈடுபாடு கொண்டவர் ஆவார். இதன் காரணமாக நாட்டின் விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.

1932 ஆம் ஆண்டு தேசமும் சுதந்திர வேட்கை சுடர் விட்டுக் கொண்டிருந்த பொழுது மகாத்மாகாந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தை அடக்க பிரிட்டிஷ் போலீஸ் தீவிரம் காட்டியது.

இந்நிலையில் 1932 ஜனவரி முதலாம் நாள் அன்று நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது ஆங்கிலேய காவல்துறையினரால் குமரன் தாக்கப்பட்டார்.

தாக்கப்பட்டு கீழே விழுந்த போதிலும் தனது கையில் இருந்த அக்கால சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்த காரணத்தினால் தான் “கொடிகாத்தகுமரன்” என்று அழைக்கப்பட்டார்.

இறப்பு

ஆங்கிலேய காவல்துறையினரால் தாக்கப்பட்ட குமாரன் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படேடார். எனினும் சிகிச்சை பலனின்றி ஜனவரி 11ஆம் திகதி அன்று இறந்தார்.

இவரது இறுதி ஊர்வலத்தில் பல பொதுமக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். இவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச்சடங்கில் கொள்ளி வைத்தனர்.

முடிவுரை

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூர்குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

இவரது நூற்றாண்டு பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் ஒக்டோபர் 2004ல் சிறப்பு நினைவு தபால் தலை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இளமையின் இனிமையை பாதியளவு கூட அனுபவிக்காது தன்னுடைய இருபத்தி எட்டு வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகத் தன் உயிரையே விலையாக கொடுத்த தியாகியை என்றென்றும் போற்றுவோம்.

You May Also Like :

பகத்சிங் பற்றிய கட்டுரை
தீண்டாமை ஒழிப்பு கட்டுரை