தஞ்சை பெரிய கோவில் பற்றிய கட்டுரை

Thanjai Periya Kovil Katturai In Tamil

இந்த பதிவில் தமிழர்களினதும் நம் முன்னோர்களினதும் பெருமைகளை பறைசாற்றும் “தஞ்சை பெரிய கோவில் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தஞ்சை பெரிய கோவில் பற்றிய கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர்
  3. வேறு பெயர்கள்
  4. தலவரலாறு
  5. தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்புக்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இந்திய நாட்டிலே சிறப்புமிகு கோவில்களுக்குப் பஞ்சம் இல்லை என்று கூறும் வகையில் பல கோவில்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலும் ஒன்றாகும்.

இந்த கோவிலானது தஞ்சாவூரிலுள்ள சோழநாட்டுக் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இது இந்தியாவிற்கு மட்டுமன்றி உலக பாரம்பரியச் சின்னமும் ஆகும்.

இந்திய நாட்டின் மிகப் பெரிய கோவில்களில் தஒன்றான பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட தஞ்சைப் பெருங்கோவில் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர்

சோழப் பேரரசின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான முதலாம் ராஜராஜசோழன் என்றழைக்கப்பட்ட சோழ மன்னன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவித்தார்.

கி.பி 985 முதல் கி.பி 1014 வரை ஆட்சி செய்த இம்மன்னன் ராஜகேசரி வர்மன், மும்முடிச் சோழன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றார்.

காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாயநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவரவே அதனை போல் ஒர் கோவிலைக் கட்ட வேண்டும் என எண்ணி இந்த பிரமாண்ட கோவிலை கட்டுவித்தார்.

வேறு பெயர்கள்

தஞ்சை பெருவுடையார் கோவில் என்பதன் வடமொழியாக்கம் பிரகதீசுவரர் கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலானது ராஜராஜேஸ்வர கோவில், ராஜராஜேஸ்வரம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் இக்கோவில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது.

17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் பிரகதீசுவரம் என்று மராட்டிய மன்னர் ஆட்சிக் காலப்பகுதியில் அழைக்கப்பட்டு வந்தது.

தலவரலாறு

யாரும் கட்டாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என நினைத்து கட்டிய கோவில் தான் தஞ்சை பெரிய கோவில் ஆகும். கட்டுவதற்கு வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தரையிலிருந்து 216 அடி உயரத்தில் கோபுரம் உள்ளது. கோபுர கலசத்தில் உள்ள நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் கட்டடக்கலை வல்லுனர்கள் பார்த்து வியந்த கோவிலாகத் தஞ்சை பெரிய கோவில் புகழ் பெற்றதாகும்.

தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சிறப்புகள்

இவ் ஆலயமானது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இன்றும் விளங்குவதுடன் இந்து மதத்தின் அடையாளச் சின்னமாகவும் உள்ளது. உலகின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகவும் “யுனெஸ்கோ” அறிவித்துள்ளது என்பது இதன் மற்றுமொரு சிறப்பு.

நுழைவு வாயிலில் அமைந்துள்ள மிகப்பெரிய நந்தி சிலையானது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.

இக்கோவிலில் பொறித்து வைக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் இந்தக் கோவிலானது குஞ்சரமல்லன் எனும் ராஜராஜ பெருந்தச்சன் என்னும் கட்டடக் கலை நிபுணரால் கட்டப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்பெரிய கோவிலானது நூற்றுக்கணக்கான சுரங்கப் பாதைகளைக் கொண்டது என்றதோர் கருத்தும் நிலவுகின்றது. இதில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளது என சொல்லப்படுகின்றது. இக்கோவிலின் மேற்கூரையானது மிகப்பெரிய கல்லாலானது.

முடிவுரை

சைவசமய சிறப்புமிக்க தஞ்சை பெருங்கோவிலானது உலகப் புகழ்பெற்ற கோவிலாகும். தமிழர்களின் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் அதிசயங்களை தன்னகத்தே கொண்ட இக்கோவிலின் புனிதத் தன்மையினை நாம் காக்க வேண்டும். அதனைப் போற்றி வழிபட்டு வளம் பெறுவோமாக.

You May Also Like:

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்