வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை

Vana Vilangu Pathukappu Katturai In Tamil

வனவிலங்கு பாதுகாப்பு

இந்த பதில் உள்ள “வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை” வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

காடுகளை பாதுகாப்பதிலும் உருவாக்குவதிலும் வனவிலங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே அனைவரும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வனங்களும் வனவிலங்குகளும்
  3. அபாய நிலையில் உள்ள சிற்றினங்கள்
  4. வனவிலங்குகளைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்
  5. முடிவுரை

முன்னுரை

ஆதிகால மனிதனின் வாழ்வியலானது விலங்குகள், காடுகளைச் சார்ந்தே இருந்தது. இவ்வுலகமானது மனிதர்களையும், உயிரினங்களையும் ஒன்றிணைத்து வாழும் வகையிலேயே படைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தேவையான அளவில் மட்டும் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்து வந்தனர். இதனால் வனவிலங்குகள் அழியாமல் நிலைத்து வந்தது.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கைமுறையோ இயந்திரமயமாகி விட்டது. வன விலங்குகள் மற்றும் காடுகளின் மதிப்பானது பலருக்கும் தெரியவில்லை.

அதிகரித்த சனத்தொகையாலும் அதிகரித்த மனிதத் தேவைகளாலும் காடுகள், விலங்குகள் அழிக்கப்படுகின்றன. இதனால் வனவிலங்கு பாதுகாப்பு என்பது அவசியமாகின்றது.

வன உயிரினங்கள் பாதுகாப்பில் உள்ள பிரச்சினைகள், அதனை எதிர்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வனங்களும் வனவிலங்குகளும்

உலகின் நிலைத் தன்மைக்கு ஆதாரமாக விளங்கும் இயற்கை வளங்களில் வனங்களும் ஒன்றாகும்.

உலகின் மிகப்பெரிய வனங்களான அமேசன் மற்றும் ஆபிரிக்க காடுகளில் பல்லாயிரக்கணக்கான விலங்குகள் வாழ்கின்றன. இவற்றின் வாழ்விடங்களுக்கு வனங்கள் ஆதாரமாகத் திகழ்கின்றன.

விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றின் அழிவிற்கு காரணமாக இல்லாமல் இருந்தாலே போதும். வன விலங்குகளும் வனமும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தே உள்ளது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாகவே அழிந்துவிடும்.

அபாய நிலையில் உள்ள சிற்றினங்கள்

இன்று உலக அளவில் பல வனவிலங்குகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றன. அவற்றில் காண்டாமிருகம், திமிங்கலம், ஓநாய்கள், கழுகுகள் மற்றும், மழைக் காடுகளில் உள்ள சில பறவைகளும் அடங்குகின்றன.

சில விலங்குகள் அவற்றின் கொம்புகள், எலும்புகள் அல்லது அவற்றின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்புச் செய்வதற்காகக் கொல்லப்படுகின்றன. பண்டைய காலங்களில் அரசர்கள் வன விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர்.

அது போல் இன்றும் வனவிலங்குகள் வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்படுகின்றன. இமாச்சல பிரதேசத்தில் மிகவும் அழகான பறவைகளில் ஒன்றான மோனல் முற்றிலும் அழியும் நிலையை நெருங்கும் அளவு வேட்டையாடப்பட்டுவிட்டது.

இந்திய அரசாங்கத்தினால் வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யானைகள் பாதுகாப்பு திட்டம், புலிகள் பாதுகாப்புத் திட்டம் முதலை வளர்ப்புத் திட்டம் என்பன அவற்றில் சிலவாகும்.

வனவிலங்குகளைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்

வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும். இன்று வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் நிலை காணப்படுகின்றது.

இதனால் அரசாங்கம் வனவிலங்குகளைப் பாதுகாக்க தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் அமைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இங்கு விலங்குகள் நல்ல முறையில் வளர்க்கப்படுகின்றன.

நமது நாட்டில் சுமார் 500க்கு மேற்பட்ட சரணாலயங்கள் உள்ளன. வனவிலங்கு இழப்புக்கள் இப்போது அபாயகரமான நிலையை அடைந்துள்ளன. இப்பிரச்சினையை உயிர்ப்பன்மை அடிப்படையில் அணுக வேண்டும்.

முடிவுரை

பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. எனவே இதனைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

வனவிலங்கு சட்டங்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எனவே வனவிலங்குகளைப் பாதுகாத்து அதனை மிகப்பெரிய சொத்தாகக் கருதி வளம் மிகுந்த உலகைக் கட்டியெழுப்புவோம்.

You May Also Like:

காற்று மாசுபாடு கட்டுரை

ஓசோன் படலம் கட்டுரை