நேசமணி வாழ்க்கை வரலாறு

marshal nesamony history in tamil

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைந்த மிக முக்கியமான தலைவராகவும், கன்னியாகுமரி மக்களின் நம்பிக்கை நாயகமாகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை பல மாற்றங்களை கொண்டு வந்த மக்களின் அரசனாகவும், தமிழ் தேசியத்தின் பிதாமகனாகவும் கொண்டாடப்படுகின்றார்.

பிறப்பு1895 ஜூன் 12
பிறந்த இடம்பள்ளியாடு
தாய்ஞானம்மாள்
தந்தைஅப்பாவு
சிறப்பு பெயர்கள்மார்ஷல், குமரி தந்தை
இறப்பு1968 ஜூன் 01

இளமை பருவம்

நேசமணி அவர்கள் தனது ஆரம்ப கல்வியை திருநெல்வேலி ஸ்காட் கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியிலும், திருநெல்வேலி சி.எம்.எஸ் கல்லூரியிலும் பயின்றார். அதன் பின்னர் திருவனந்தபுரம் மகாராஷ்டிரா கல்லூரியில் தனது உயர் கல்வியான பி.ஏ (B.A) பட்டக்கல்வியை பயின்றார்.

ஒருவருடம் கர்னூல் பிஷப் ஹீபார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் திருவனந்தபுரம் சால்வேஷன் ஆர்மி பள்ளியில் இவர் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

அத்துடன் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியிலும் இணைந்து பி.எல்(B.L) பட்டத்தையும் பெற்றார். பின்னர் 1921இல், நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞராகப் பணியாற்ற தொடங்கினார்.

வழக்கறிஞராக பணியாற்றிய சென்ற முதல் நாள் இடம்பெற்ற சம்பவம்

நாகர்கோவில் நீதிமன்றத்தில் முதன் முறையாக வழக்கறிஞராக நேசமணி அவர்கள் வாதாடுவதற்கு சென்றபோது, அங்கே உயர்சாதி வழக்கறிஞர்கள் அமர்வதற்கு நாற்காலியும், தாழ்சாதி வழக்கறிஞர்கள் அமர்வதற்கு முட்காலியும் போடப்பட்டிருந்தது.

இதனை கண்டு கோபமுற்ற நேசமணி அவர்கள் நீதிமன்றத்தில் காணப்பட்ட அனைத்து முட்காலிகளையும் நீதிமன்றத்திற்கு வெளியே தூக்கி எறிந்து விட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தார். இதனைக் கண்ட ஏனைய வழக்கறிஞர்கள் வியப்பில் ஆழ்ந்து இருந்தனர்.

அத்துடன் நாகர்கோயில் பார் அசோசியேஷனால் (Bar Association) வழக்கறிஞர்கள் குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த நீரானது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒரு பானையிலும், உயர்சாதியினருக்கு இன்னொரு பானையிலும் வைக்கப்பட்டு இருந்தது.

அவை இரண்டையும் அப்புறப்படுத்திவிட்டு வழக்கறிஞர்கள் அனைவருக்கும் சமமான ஒரு குடிநீர் பானையை அங்கே வைத்தார்.

வழக்கறிஞராக இவரது பணி

சாதி பாகுபாடு முறைமையினால் மக்கள் படும் துன்பங்களை கண்டு நேசமணி அவர்கள் தானாக, முன்வந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட சாதி வன்முறைகளுக்கு எதிரான வழக்குகளை எடுத்து வாதாடினார். அத்துடன் குற்றவியல் (Criminal) வழக்குகள் பலவற்றிற்கு எதிராகவும் வாதாடினார்.

அரசியல் பயணம்

1943இல் நாகர்கோவில் பார் அசோசியேசனின் (Bar Association) தலைமைப் பொறுப்பை ஏற்றார். அத்துடன் நாகர்கோவில் நகர சபைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 முதல் 1947 வரை நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் காணப்பட்டார்.

1944 டிசம்பர் மாதம் இவர் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். 1945 முதல் 1947 வரை திருவாங்கூர் சட்டமன்ற திருமூலம் சபையின் உறுப்பினராக செயல்பட்டார்.

1951, 1962, 1967 ஆகிய ஆண்டுகளிலே, நாடாளுமன்றத் தேர்தல்களில் நாகர்கோவிலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் பாராட்டப்பட்டவராகவும் காணப்படுகிறார்.

அப்போதெல்லாம் இவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கில்லியூர் தொகுதியிலும் போட்டியிட்டு இவர் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார்.

அரசியலில் இவரது முக்கிய பங்கு கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைத்தமையாகும்.

கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டமை

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவில் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த சமஸ்தானங்களில் ஒன்று.

மிகப் பழமையானதும், சில தனித்துவ குணங்கள் அமைந்ததுமாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். ஆனால், அங்கு பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது குமரி மாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. திருவாங்கூர் ராஜ வம்சத்தின் ஆட்சியில் மக்களில் உயர்மட்டத்தில் இருந்தோருக்கு நல்ல வசதியும், வாழ்க்கையும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

கீழ் மட்டத்திலிருந்தவர்கள் உரிமைகள் பல பறிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற சமூக அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடத் துவங்கினார்கள்.

கேரளத்தில் நாயர் சேவை இயக்கம் போன்ற அமைப்புகள் இச்சூழ்நிலையில் தோன்றின. இந்த சமுதாய விடுதலை இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும் உருவாயிற்று.

இந்த போராட்டத்தை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பின் சார்பில் மார்ஷல் ஏ.நேசமணி தலைமையில் இந்த போராட்டம் எழுச்சி பெற்றது.

இந்த அமைப்பின் முதல் முக்கிய நோக்கமாக திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சமுதாய அடக்குமுறைகளை எதிர்த்துத்தான் இருந்தது. இதே அமைப்பு பின்னர் அரசியல் இயக்கமாகவும் மாறி உருவெடுத்தது.

இந்த அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்தது. இவர்களுடைய நீண்ட போராட்டத்துக்கு பின், 1956 நவம்பர் 1-இல் மொழி வழி மாகாண பிரிவினையின் போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.

இந்த இணைப்பிலும், சமுதாய நலன் காக்கும் போராட்டத்திலும் மார்ஷல் ஏ.நேசமணியும், பி.தாணுலிங்க நாடாரும் முன்னிலை வகித்து நடத்தினர். அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றது. இந்தியாவின் தென் எல்லை குமரி மாவட்டமாக மாறியது.

சிறப்பு பெயர்கள்

சுப்பிரமணிய பிள்ளை மணி எனும் பி.எஸ். மணி அவர்கள் நேசமணியிடம் “கடந்த 30 ஆண்டுகளாக உங்களை எனக்கு தெரியும். 17 ஆண்டுகளாக உங்களுடன் இணைந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்து இருக்கின்றேன்.

குமரி மாவட்டத்தின் பெரும்பான்மையானோர் உங்கள் மீது மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். நீங்களும் கட்சி சார்பற்ற உயரிய நிலையில் குமரி மாவட்டத்தின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க வேண்டும். என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு” என்று கூறி இவருக்கு “குமரி தந்தை” எனும் பட்டத்தை அளித்தார்.

திருவாங்கூர் தமிழர்களை ஒன்றுபடுத்திய செயலுக்காக இவருக்கு “மார்ஷல்” என்ற அடைமொழி வழங்கப்பட்டு அனைத்து மக்களாலும் மார்ஷல் நேசமணி என அன்புடன் அழைக்கப்படுகிறார்.

You May Also Like:
வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கை வரலாறு
உ.வே.சாமிநாதய்யர் வரலாறு