பண்டித ரமாபாய் வரலாறு

pandita ramabai history in tamil

இந்தியாவில் பெண் விடுதலைக்காக போராடிய முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சிறந்த சீர்திருத்தவாதியாகவும் பண்டித ராமாபாய் அவர்கள் காணப்பட்டார்.

இவர் சிறந்த கல்விப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்ற பெண்மணியாகவும் இவர் காணப்படுகின்றார்.

பிராமண குலத்தில் பிறந்து பின் கிறிஸ்தவராக மதம் மாறி வறுமைக் கோட்டில் கஷ்டப்படும் விதவைப் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் பாரிய உதவிகளை வழங்கிய தலைசிறந்த பெண்மணியாகவும் காணப்படுகிறார்.

பிறப்பு1858 ஏப்ரல் 23
தந்தை ஆனந்தசாஸ்திரி டோங்ரே
தாய் லட்சுமி பாய் டோங்கிரே
பிறந்த இடம்கங்கமூலா, கர்நாடகா
குலம்பிராமணர்
பணி சமூக சீர்திருத்த வாதி,
பெண் விடுதலைப் போராளி
இறப்பு1922 ஏப்ரல் 05

ஆரம்ப வாழ்க்கை

இவரது பெற்றோர் ஆரம்ப காலத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தனர். பஞ்சத்தால் பசியால் வாடிய மக்களுக்கு உணவு அளித்தும், பல உதவிகளை தமது சொத்துக்களை ஈடு வைத்து உதவினர். இதனால் தமது சொத்துக்களை இழந்தனர்.

இதன் விளைவாக ராமாபாய் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே இவரையும் தூக்கிக்கொண்டு தேசாந்திரியாக மாறி ஒவ்வொரு புண்ணிய தலங்களுக்கும் சென்று அங்கேயே சில மாதங்கள் தங்கிவிட்டு வேறு தலங்களுக்கு பிரயாணம் செய்தனர்.

இங்கு தங்கும் நாட்களில் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்தும், அதன் பின்னர் ராமாபாயின் தந்தை வேதங்கள் மற்றும் புராணங்களை பாராயணம் செய்வதில் சிறந்த விளங்கியமையால்,

அங்கு வேதம் புராணம் என்பவற்றைப் பாராயணம் செய்ய கற்பித்தும், பொது இடங்களில் அமர்ந்து புராணங்களைப் பாராயணம் செய்தும் அவற்றின் மூலம் வரும் பணத்தைக் கொண்டு பிள்ளைகளின் பசியை நீக்கினார்.

ராமாபாயின் தாயாரும் புராணங்கள் வாசிப்பதில் சிறந்தவராக காணப்பட்டார். இவர்களது காலத்தில் பெண்கள் அடக்குமுறை காணப்பட்டமையினால் பெண்களுக்கான கல்வி முறை காணப்படவில்லை.

ஆனால் ராமாபாய்க்கு அவரது தந்தையும், தாயும் சிறந்த முறையில் சமஸ்கிருத புராணங்கள் வாசிப்பதற்கு கற்றுக்கொடுத்தனர். சமஸ்கிருத புராணங்கள் வாசிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவராகவும் காணப்பட்டார்.

பெரும் பஞ்சம் ஒன்று தென்னிந்தியாவை வாட்டி வதைத்தது. இதில் சிக்கி ராமாபாயின் தந்தையும், தாயும், சகோதரியும் உயிரிழந்தனர். ராமாபாயும் அவரது அண்ணனும் தனித்து விடப்பட்டனர்.

அடுத்து என்ன செய்வது? யாரிடம் உதவி கேட்பது? என்பதை அறியாமல் இருவரும் இந்தியாவின் பெரும் பகுதிகளில் நடந்தே திரிந்தனர்.

கல்கத்தாவில் இவரது பயணம்

ராமாபாயும் அவரது அண்ணனும் இந்தியாவின் முழுநிலத்தையும் கால்நடையாகவே நடந்து, இறுதியில் கல்கத்தா நகரை வந்தடைந்தனர். அங்கிருந்த கற்றுத்தேர்ந்த பிராமணர்களை தொடர்புகொண்டு புராணங்களை படித்து காட்டி ஆகாரமும், உணவும் பெற்றனர்.

சிறு வயதிலேயே பல கஷ்டங்களை அனுபவித்தமையால் அவற்றின் விளைவாக வளர்ந்தபின் ரமாபாய் துணிச்சலான மற்றும் அறிவு நிறைந்த பெண்ணாக காணப்பட்டார்.

இவர் இந்திய பெண்களுக்கு கல்வியறிவு கொடுத்து அவர்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டார். இவை அங்கிருந்த பிராமணர்களை ஆச்சரியப்படுத்தியது.

சமஸ்கிருத மொழியில் சிறந்த புலமை உடையவராக காணப்பட்டமையால் கல்கத்தா பல்கலைக்கழகம் “பண்டித” என்ற சிறப்புப் பெயரையும் இவருக்கு வழங்கி கௌரவித்தது. அத்துடன் பொதுகூட்டங்களில் உரையாற்றுவதற்கு இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கிறிஸ்தவ மதத்தில் பயணம்

கல்கத்தாவிலிருந்த கிறிஸ்தவ விசுவாசிகளுடன் தொடர்புக்கொள்ளும்படியான ஒரு வாய்ப்பு ரமாபாய்க்குக் கிடைத்தது. கிறிஸ்தவ ஆராதனையும், ஊழியமும் அவர்களை அதிக அளவில் கவர்ந்தன.

தனது 22ம் வயதில் வங்காளத்தைச் சேர்ந்த, சிறந்த முறையில் கல்வி கற்றிருந்த ஒரு வாலிபனை அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அவர் ஒரு சட்ட நிபுணராக இருந்தார். தங்களுடைய திருமண வாழ்க்கையை இவர்கள் அஸ்ஸாமில் ஆரம்பித்தனர்.

அவர்களது திருமணம் நடைபெற்ற 19வது மாதத்தில் அவர்களுடைய கணவன் காலராவினால் பாதிக்கப்பட்டு, மரணித்துவிட்டார். அவருடைய திருமண வாழ்க்கை முழுவதிலும் அவர் தனது மனைவியின் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்தார்.

ரமாபாய் தனது மகளாகிய மனோராமாவுடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டு, பூனாவிற்குச் சென்றார்கள். பூனாவில் பாப்டிஸ்ட் மிஷனரியாகிய திரு.ஆலனை ரமாபாய் சந்தித்தார்கள்.

திரு.ஆலன் கிறிஸ்துவைப் பற்றி ரமாபாய்க்குக் கூறினார். ஒருநாள் திரு.ஆலன் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்திலிருந்து சிருஷ்டிப்பின் சம்பவங்களை ரமாபாய்க்கு கூறினார்.

வேதங்களில் தான் படித்திருந்த சிருஷ்டிப்பின் சம்பவங்கள் இவற்றிலிருந்து எவ்வளவு மாறுபட்டவைகளாக இருக்கின்றன என்பதை அவர் கண்டார். இது கிறிஸ்த்தவ மதத்தின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வத்தைத் தூண்டியது.

ஹர்போர்ட் என்ற இன்னொரு மிஷனரி, மராத்திய மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை ரமாபாய்க்கு கொடுத்து, அதை வாசிக்கும் படி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

கிறிஸ்துவைக் குறித்து இன்னும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற வாஞ்சை நாளுக்கு நாள் அவர்களுக்குள் அதிகரித்துக்கொண்டே வந்தது. 1886ம் ஆண்டில் அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு ரமாபாய்க்கு கிடைத்தது. அதற்கேற்ப அங்கு சென்று கிறிஸ்தவ மதம் பற்றி மேலும் அறிந்து கொண்டார்.

சமூகப் பணியும், இவரது சேவைகளும்

சிறுவர்-சிறுமியர்களின் திருமணங்கள் சமுதாயத்தில் மிகுந்த வேதனையை ராமாபாய்க்கு விளைவித்தன. சிறுவயதிலேயே திருமணம் செய்திருந்தவர்களின் கணவன்மார்கள் மரணிக்கும்போது, அவர்கள் விதவைகளாகி விடுகின்றனர்.

அப்படிப்பட்ட சிறுமிகள் அதிக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதாகி விடுகிறது. இப்படிப்பட்ட விதவைகளைப் பராமரிப்பதற்காக சாரதா சதன் என்ற ஸ்தாபனத்தை ரமாபாய் ஏற்படுத்தினார்கள்.

அந்த இல்லத்தின் தேவைகளுக்காக அவர்கள் கிறிஸ்தவ மதத்தத்தையே முழுவதுமாகச் சார்ந்திருந்தார்கள். தாழ்மை, அன்பு, பொறுமை, தன்னலமற்ற மனப்பான்மை ஆகியவற்றுடன் அவர்கள் மனித சமுதாயத்திற்குச் செய்த தொண்டுகள் பலரை கிறிஸ்துவின் பக்கமாகக் கவர்ந்தன.

மக்களுடைய இருதயங்களிலிருந்த காயங்களைக் குணமாக்கும் விதத்தில் அவர்களுடைய தொடுதல் இருந்தது. பல விதமான கைவேலைகளைச் செய்யும் கலையை அந்த ஸ்தாபனத்திலிருந்த மக்களுக்கு அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.

கைவிடப்பட்டவர்களின் இல்லமாக இயங்கிவந்த சாரதா சதன் பல பெண்களால் நிறைந்திருந்தது. முதலாவதாக, இரண்டு வாலிபப் பெண்கள், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டனர்.

பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் இதைக்குறித்து கேள்விப்பட்ட பொழுது, தாங்கள் அதுவரை அந்த இல்லத்திற்குச் செய்துவந்த நிதியுதவியை நிறுத்திவிட்டனர்.

மனிதர்களின் மூலமாக வந்த உதவி நின்றுபோன பொழுது, தேவனை எவ்வாறு சார்ந்திருப்பது என்பதை ரமாபாய் கற்றுக்கொண்டார்கள். அப்படிப்பட்ட வேளைகளில் அவர்கள் ஹட்ஸன் டெய்லர், ஜியார்ஜ் முல்லர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்து விசுவாசத்தில் வளர்ச்சியடைந்தார்கள்.

1895-1896ம் ஆண்டில் பலர் பட்டினியால் மரணித்தனர். நாடு முழுவதிலும் மிகக்கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ஆனால் தான் நடத்தி வந்த இல்லத்திலிருந்த 300 சிறுவர்-சிறுமிகளைப் பராமரிப்பதற்கு ரமாபாயால் இயன்றது.

எல்லாச் சிறுவர்களும் தங்குவதற்கு சாரதா சதனில் போதுமான அளவிற்கு இடமில்லாமலிருந்தது. எனவே பூனாவிலிருந்து 48 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள கோர்கோன் என்ற இடத்தில் ஒரு நிலம் வாங்கப்பட்டு, ஒரு புதிய இல்லம் அமைக்கப்பட்டது. அதற்கு முக்தி என்று பெயரிடப்பட்டது.

இரண்டு இல்லங்களும் வளர்ச்சியடைந்தன. விரைவில் இந்த இரு இல்லங்களிலும் 2000 சிறுவர்-சிறுமிகள் தங்கியிருந்தனர். இங்கிருந்தவர்களுக்கு தையல், நெசவு, பால் பொருட்கள் தயாரித்தல், கயிறு திரித்தல், கேக் செய்தல், தோட்ட வேலை, தானியங்களிலிருந்து மாவு தயாரித்து பலவிதமான உணவுவகைகளைச் செய்தல் போன்ற தொழில்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்த இரண்டு இல்லங்களும் வாலிபப்பருவத்திலிருந்த விதவைகளுக்கு அடைக்கலம் அளித்தன.

1921 ஆம் ஆண்டு தமது மகள் மனோரமாவின் மறைவைத் தொடா்ந்து 1922 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி தமது 64வது வயதில் ராமாபாயும் இயற்கை எய்தினாா்

விருதுகள்

  • சமஸ்கிருத புலமையைப் பாராட்டி பண்டிதா் மற்றும் சரஸ்வதி விருதுகள்
  • 1919 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் பொது சேவையை பாராட்டி வழங்கப்பட்ட “கெய்சா் இ ஹிந்து” (Kaisor – I – Hind)
  • அமெரிக்க எபிஸ் கோபல் கிருத்துவ ஆலயத்தாலும் (5 ஏப்ரல்) இங்கிலாந்து கிருத்துவ ஆலயத்தாலும் (30 ஏப்ரல்) வழங்கப்பட்ட விருதுகள்
  • பெண்கள் முன்னேற்றத்திற்காக இவா் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1989 அக்டோபா் 26 ஆம் நாள் இவா் படத்துடன் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
  • பம்பாய் நகரில் ஒரு சாலைக்கு இவா் பெயரிடப்பட்டுள்ளது.
You May Also Like :
புனித தேவசகாயம் பிள்ளை வாழ்க்கை வரலாறு
கிளியோபாட்ரா வாழ்க்கை வரலாறு