பாகம்பிரியாள் கோயில் வரலாறு

bagampriyal temple history in tamil

ஆலயம் என்பது ஆன்மா லயப்படும் இடமாகும். அந்த வகையில் அம்பிகையின் அற்புத திருத்தலங்களில் பாகம்பிரியாள் கோவில் ஒரு தலமாக காணப்படுகிறது.

தீராத நோய்களும் இறை அணுகிரகத்தின் மூலம் தீர்ந்துவிடும் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக இவ்வாலயம் அமைந்துள்ளது.

மூலவர்பாகம்பிரியாள்
தீர்த்தம்வாசுகி தீர்த்தம்
ஊர் திருவெற்றியூர்
மாவட்டம்ராமநாதபுரம்

அமைவிடம்

தென்னிந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் எனும் இடத்தில் அருள்மிகு பாகம்பிரியாள் கோயில் காணப்படுகிறது.

புராணக் கதை

பூவுலகை மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். இவர் வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். இதனால் குடிமக்கள் மன்னனிடம் அதிக பாசம் வைத்திருந்தனர்.

மக்கள் அவனை தங்கள் துன்பங்களை நீக்கவல்ல கடவுள் என வழிபடலாயினர். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களையும் கடவுளர்களையும் மதிக்காமல் வாழத் தொடங்கினான்.

இதனை அறிந்த நாரதர் நேராக திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வணங்கி மகாபலி சக்கரவர்த்தி பற்றி முறையிட்டார்.

அதற்கு பதில் அளித்த சிவபெருமான் “முற்பிறவிகளில் என்னுடைய சன்னிதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டாமணி விளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டி விட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல” என்று கூறினார்.

இதனைக் கேட்ட நாரதர் திருமாலிடம் தனது கோரிக்கையை கொண்டு சென்றார். இதனை ஏற்ற திருமால் வாமன உருவம் கொண்டு மகாபலி மன்னனிடம் யாசிக்க சென்றார்.

மன்னனிடம் தான் யாகம் நடத்த 3 அடி இடம் வேண்டும் என்றார். நன்கொடை பெருமையால் முகமும் அகமும் மலர “மூவடி தந்தேன்” என்றான் மன்னன். ஆகாயத்திற்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு, தனது நீண்ட கால்களால் உலகை இரண்டடியால் அளந்தார்.

மூன்றாம் அடி எங்கே வைப்பது என்று கேட்டபோது, வந்தவர் யார் என்பதை அறிந்த மன்னன் பணிவுடன் தன் தலையை காண்பித்து, “எனது தலையில் மூன்றாம் அடியை வையுங்கள்” என்று கூறினார்.

மகாவிஷ்ணு மகாபலி மன்னனின் தலையில் மூன்றாம் அடியை வைத்து அளந்தார். மகாபலி பிறவிப்பயனை முடித்து அதல பாதாளத்தில் மறைந்தார்.

இதனை அறிந்த தர்மதேவதை தனது மகனை இழந்த துன்பம் ஏற்பட்டது போல துடிதுடித்துப்போனாள். சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். மகாபலியின் தலையில் மூன்றாம் அடி அளந்த மாதவன் காலில் புற்று ஏற்படுமாறு சபித்தார் சிவபெருமான்.

செருக்குற்றவனை அழித்த தனக்கு புற்றால் ஏற்படும் வேதனை குறித்து சிவபெருமானிடம் சென்று மகாவிஷ்ணு புலம்பினார்.

இதனைக் கேட்ட சிவபெருமான் மகாவிஷ்ணுவிடம் “18 தீர்த்தங்களில் நீராடி சில ஆலயங்களை வணங்கி திருவாடனை என்னும் திருத்தலத்தில் உள்ள ஆதிரெத்தினேஸ்வரனை தரிசிக்கவேண்டும் ” என்று கூறினார்.

மகாவிஷ்ணுவும் தரிசித்து விட்டு இரவு அங்கே துயில் கொண்டார். இரவில் துயில் கொள்ளும் போது சிவபெருமான் கனவில் தோன்றி ” இந்த இடத்திற்கு தெற்கில் திருவெற்றியூர் எனும் தலம் உள்ளது. அங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி லிங்கத்தை தழுவி வழிபட்டால் உன் புற்று நீங்கும்.” என்று கூறி மறைந்தார்.

கங்கா தேவியை, சிவபெருமான் அழைத்து “தர்மதேவதை திருமாலுக்கு புற்றுநோய் வருமாறு செய்து வேதனைபடுத்துகிறாள். தர்ம தேவதையின் கோபத்தை அடக்க நீதான் தகுதியானவள். மஹாவிஷ்ணுவுக்கு நீ தான் உதவி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

திருவெற்றியூர் வந்த மகாவிஷ்ணு வாசுகி தீர்த்தத்தில் நீராட கங்கா தேவி உதவி புரிந்தார். மகாவிஷ்ணுவும் நீராடி விட்டு சிவனை வழிபாடு செய்தார்.

சிவபெருமான் பார்வதிதேவியருடன் பிரியாமல் இருவரும் ஒன்றாக காட்சியளித்து அருள்பாலிக்க புற்றுநோயும் மாயமாய் மறைந்துவிட்டது.

அன்று முதல் சிவபெருமானுக்கு ” பழம்புற்று நாதர்” என்றும் உடன் உள்ள பார்வதிக்கு “பாகம்பிரியாள்” என்றும் பெயர் வரலாயிற்று. அன்று முதல் இவ்வாலயம் பாகம்பிரியாள் ஆலயம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

சிறப்பு

பெண்களின் பிரார்த்தனைகளுக்கான பிரதான பிரார்த்தனை தலமாக இத்தலம் காணப்படுகிறது. திருமணம், குழந்தைபாக்கியம், ஆரோக்கியம் என எதற்காகவும் இங்கு சென்று வேண்டிக் கொள்ளலாம்.

இங்கு வழிபடும் பக்தர்கள் தங்கி வழிபடுதல் என்னும் சடங்கை செய்கிறார்கள். வியாழன் அன்று மாலையில் அம்பிகையை வணங்கி விட்டு அங்கே கோவிலிலேயே தங்கி விடுகின்றனர். பின்னர் மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர்.

அத்துடன் கொடிய புற்று நோய்களை தீர்க்கும் தலமாகவும் இத்தலம் காணப்படுகின்றது.

புற்றுநோய் தீர அம்பிகையை வணங்கி நம்பிக்கையுடன் வாசுகி தீர்த்தம் வாங்கி குடித்துச் செல்லலாம். இதன் மூலம் புற்று நோய் தீர்கிறது என மக்களால் நம்பப்படுகிறது.

திருவிழா

சித்திரையில் பிரம்மோற்சவம் நடக்கிறது. இவ்வாலயத்தில் பூச்சொரிதல் விழா ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு விசேஷ பூஜையும் நடக்கிறது. அத்துடன் ஆடி கடைசி திங்களன்றும் நள்ளிரவில் அம்பிகைக்கு பூச்சொரிதல் விழாவும் நடக்கிறது.

You May Also Like :
நேசமணி வாழ்க்கை வரலாறு
சீத்தலை சாத்தனார் வாழ்க்கை வரலாறு