ஆடி கிருத்திகை வரலாறு

aadi krithigai history in tamil

ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குரிய சிறப்புத் தினங்களாக அனுஷ்டிக்கப்பட்டாலும் ஆடிக் கிருத்திகை முருகப்பெருமானுக்குரிய சிறப்பு விரத நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளாக வழிபடப்படும் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றம் பெற்ற செல்வப் புதல்வனாக காணப்படும் முருகப்பெருமானுக்குரிய வழிபாடு செய்ய உகந்த காலங்களுள் கிருத்திகை நாளும் ஒன்றாகும்.

இத்தினங்களில் அடியவர்கள் முருகப் பெருமானை நோக்கி விரதம் அனுஷ்டித்து வழிபடுவதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறுவர் என புராணங்கள் கூறுகின்றன.

ஆடி கிருத்திகை வரலாறு

கிருத்திகையின் வகைகள்

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் வருகின்றது. இருப்பினும் பின்வரும் மூன்று கிருத்திகைகள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த கிருத்திகை என ஆச்சார்ய பெருமக்கள் கூறுகின்றனர். அவையாவன,

உத்தராயண காலத்தின் தொடக்க காலமான தை மாதத்தில் வருகின்ற கிருத்திகை, தைக்கிருத்திகை நன்னாள் ஆகும். இன்னாளில் முருகப் பெருமானுக்கு விஷேட பூசைகள் நடைபெறுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாள். இந்நாள் திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும் அழைக்கப்படுகிறது.

தட்சிணாலய புண்ணிய காலமான ஆடிமாதம். இந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேடமானது.

ஆடி கிருத்திகை வரலாறு

சிவனிடம் வரம் பெற்ற நரகாசூரன், அதிக மமதை கொண்டு தேவர்களை துன்புறுத்தினான். நரகசூரனது பெரும் துன்பங்களை அனுபவிக்க இயலாது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

இக்கொடிய சூரனை அழிக்க முருகப் பெருமானை தோற்றுவிக்கும் முகமாக, சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து பாரிய தீப்பொறி தோன்றி ஆறாக பிரிந்து கங்கை வாயுவின் உதவியுடன் சரவணப் பொய்கையில் வீழ்ந்தது. பின்னர் அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன.

இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எனும் ஆறு பெண்களே வளர்ப்பு அன்னையாக அந்த ஆறு குழந்தைகளுக்கு இருந்து சிறப்புற வளர்த்தனர். இவர்களால் வளர்க்கப்பட்டதை அடையாளப்படுத்தும் விதமாகவே முருகப்பெருமான் கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுகின்றார்.

சிவபெருமான், “கார்த்திகைப் பெண்களுக்குரிய கிருத்திகை நட்சத்திர நன்னாளில் முருகப் பெருமானை நோக்கி விரமிருந்து வழிபடுபவர்களுக்கு முருகப் பெருமானின் திருவருள் கிடைக்கும்.” என வரமளித்தார்.

அன்று கிருத்திகை நன்னாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிக் கிருத்திகை கார்த்திகை பெண்களுக்குரிய சிறப்பு நாளாகவும் காணப்படுகிறது.

ஆடி கிருத்திகை சிறப்பு

நாரத முனிவர் ஆடிக் கிருத்திகை நாளில் விரதம் ஆரம்பித்து 12 ஆண்டுகள் கடைப்பிடித்து முருகப்பெருமானை நினைத்து தவம் இருந்தார்.

இதனால் முருகப்பெருமானின் அருளையும் வரத்தையும் பெற்றார். இதன் பயனாக முனிவர்களில் முதன்மையானவர் என்றும், நாரத மாமுனி என்றும் உயர்நிலைகளை பெற்றார்.

ஆடி கிருத்திகை வழிபாட்டு முறை

ஆண், பெண் இருபாலரும் ஆடிக் கிருத்திகை விரதத்தை அனுஷ்டிக்கலாம். இந்தியாவின் தமிழகத்தில் உள்ள சிறப்புத் தலங்களான பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணிகை, வடபழனி, திருச்செந்தூர் முதலான முருகப்பெருமான் குடி கொண்ட கோயில்கள் அனைத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேட வழிபாடுகளும் நடைபெறும்.

ஆடிக் கிருத்திகை நாளில் ஆலயம் செல்ல இயலாதவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி சுவாமி அறையை சுத்தம் செய்து முருகப் பெருமானது திருவுருவ படத்திற்கோ அல்லது முருகப்பெருமானது உருவச்சிலைக்கோ செவ்வரளி மாலை சாத்தி மானசீகமாகவும், ஆத்மார்த்தமாகவும் பூஜை செய்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அருகில் உள்ளவர்களுக்கு வழங்கி இறையருளை பெறலாம்.

இத்தினங்களில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் கோவிலுக்கு சென்று 27 முறை கோவிலை மனமுருக வேண்டி சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும். அத்துடன் அகல் நெய் விளக்கு தீபம் ஏற்றியும் அடியவர்கள் வழிபாடு செய்கின்றனர்.

ஆடி கிருத்திகை பலன்கள்

முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்தின் கடவுளாக காணப்படுவதனால் ஆடிக் கிருத்திகை நன்னாளில் முருகப் பெருமானை விரதமிருந்து மனதார பிரார்த்தனை செய்வோருக்கு செவ்வாய் தோஷங்கள் நீங்கும், திருமணத் தடை அகலும், பாரம்பரிய சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும், உயர்ந்த பதவிகள் தேடி வரும், நினைத்த காரியம் நிறைவேறும் என இந்து ஐதீகங்கள் கூறுகின்றன.

You May Also Like :
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
தைப்பூசம் பற்றிய கட்டுரை