தைப்பூசம் பற்றிய கட்டுரை

Thaipusam Katturai In Tamil

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் “தைப்பூசம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தைப்பூசம் கொண்டாட பல நம்பிக்கைகளும் தத்துவங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் தமிழ் கடவுளான முருக கடவுளுக்கு விழா எடுப்பதற்காகவே பெரும்பாலனா மக்களால் கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மகிமைகள்
  3. வரலாறு
  4. இந்துசமய தத்துவங்கள்
  5. தமிழர் கலாச்சார பின்னணி
  6. முடிவுரை

முன்னுரை

தமிழ் நாட்டிலே இந்து சமயத்தை பின்பற்றுகின்ற மக்கள் மத்தியில் தைப்பூச நன்நாளானது ஒரு திவ்யத்துவம் நிறைந்த நாளாக பார்க்கப்படுகின்றது.

தமிழ் மக்களை பொறுத்த வரையில் இந்த நாளில் பல புண்ணிய கருமங்களை ஆற்றி வாழ்வில் வெளிச்சம் தருகின்ற நாளாக உள்ளது.

உலக தமிழ்ர்களை பொறுத்தவரையில் தைப்பூச திருநாளை தமிழ் கடவுளான முருகனுக்கு பெரும் விழா எடுப்பதாக கொண்டாடி வருவது வழக்கமாகும்.

இக்கட்டுரையில் தைப்பூச திருநாளின் வரலாறு மற்றும் மகிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக நோக்கலாம்.

மகிமைகள்

ஒரு வருடத்தில் ஒவ்வொரு மாதங்களும் பல்வேறு தனி சிறப்புக்களை கொண்டவையாகும். அந்தவகையில் தமிழர்களுக்கு தை மாதம் தனி சிறப்பு வாய்ந்ததாகும்.

ஒன்று தமிழர் திருநாளான தைப்பொங்கல் அதனை தொடர்ந்து வருகின்ற தைப்பூச திருநாள் என்பன தனி சிறப்பு வாய்ந்தனவாகும்.

தமிழ் கடவுளான முருகனுடைய பிறந்த நாளாக தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. அத்துடன் இந்த உலம் தோன்றிய நாளாகவும் இந்து சமய புராண இலக்கியங்கள் இந்த நாளை அடையாளப்படுத்துகின்றன.

இந்து சமயத்தை பொறுத்தவரையில் தைப்பூசம் என்பது பல மகிமைகள் நிறைந்த நன்நாள் ஆகும்.

வரலாறு

முன்பொரு காலத்தில் சூரபத்தமன் மற்றும் தாரகாசுரன் என்ற அரக்கர்கள் சிவனிடம் வரம் பெற்று உலக மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள்.

இதனை தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அந்த அசுரர்களை அழிக்கும் முகமாக தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு குழந்தைகளை சரவணப்பொய்கையில் தோற்றுவித்தார் இதன் மூலமே ஆறுமுக கடவுளான முருகன் இந்த தைப்பூச நாளிலேயே அவதரித்தார் என்பது வரலாறு.

தனது ஆற்றலால் அசுரர்களை வதம் செய்து இந்த உலகத்தை காத்தருளினார் என்பதனால் தமிழர்கள் நீண்டகாலமாக இந்த நாளிலே முருகனுக்கு விழா எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மற்றும் சிவபருமான் தனது ஆற்றலால் இந்த உலகத்தை படைத்த நாளாகவும் இந்த நாள் பார்க்கப்படுகின்றமை சிறப்பான விடயமாகும்.

இந்து சமய தத்துவங்கள்

தைப்பூச திருநாளில் தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் இந்த நாளை மிகவும் சிறப்பாக விரதம் இருந்து அனுஷ்டிப்பார்கள். ஆறுபடை கோயில்களிலும் தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அசுரர்களை அழித்த தலமாகிய திருச்செந்தூரில் தைப்பூசம் மிக பிரபல்யமானதாகும். இந்துக்களின் படைத்தல், காத்தல், அருளல், அழித்தல் என்கின்ற ஐந்தொழில் தத்துவங்களை எடுத்து விளக்குவதாக இந்த நாள் அமைகின்றது.

இந்த புனித நாளில் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் மக்களிடத்து உருவாக வேண்டும் என்பதுவே இந்த நாளின் மறைமுக நோக்கமாகவும் உள்ளது.

தமிழர் கலாச்சார பின்னணி

தைப்பூச திருநாளுடன் தமிழர் கலாச்சாரமானது இழையோடியுள்ளது. இந்த திருநாளில் பக்தர்கள் முருகனுக்கு வழிபாடு செய்ய காவடி எடுத்து மகிழ்ச்சியாக ஆடி தங்கள் வழிபாடுகளை மேற்கொள்வார்கள். இது ஒரு கலை வெளிப்பாடாக உள்ளது.

மற்றும் இந்த தினத்தில் உழவர்கள் தங்கள் வயல்களில் புதிர் எடுப்பதன் மூலமாக தங்கள் அறுவடையை ஆரம்பிக்கின்ற கால கட்டமாகவும் இது காணப்படுவதனால் உலகத்தின் பசி போக்கும் உழவர்களின் கலாச்சாரம் இந்த நாளில் வெளிப்படுகின்றது.

முடிவுரை

தமிழ் மக்களுடைய வாழ்வானது மிகவும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்தவையாகும். இவை வாழ்வை மேலும் செம்மைப்படுத்தி மேலும் சிறப்பாக்குபவையாக உள்ளன.

அந்த வகையில் இந்த தைப்பூச நன்னாள் உலக தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றமை சிறப்பான விடயமாகும்.

தமிழர்கள் உலகமெங்கும் பரந்து வாழ்வது போல நம் கலாச்சாரமும் உலகமெங்கும் தழைத்தோங்க இந்த தைப்பூச நன்னாள் வழிகோலி நிற்கின்றது என்றால் மிகையல்ல.

You May Also Like:

தமிழர் திருநாள் கட்டுரை
தமிழ் மொழியின் பெருமைகள்