முச்சங்க வரலாறு

muchangam varalaru in tamil

உலகில் மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மொழியாக காணப்படுவது தமிழ்மொழி ஆகும். மிகப் பழமையான இலக்கிய, இலக்கண நூல்களை தமிழ்மொழியே கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாக காணப்படுகிறது.

தமிழ்மொழியின் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலமாக சங்ககாலம் விளங்குகிறது. இது கி.மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி ஆகும்.

இக்காலத்தில் வாழ்ந்த சேர, சோழ, பாண்டிய எனும் மூவேந்தர்களும் தமிழ்மொழியை வளர்க்க பல அளப்பரிய பணிகளை புரிந்தனர். அவர்களில் பாண்டிய மன்னர்களே முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என்கின்ற முச்சங்கங்களை அமைத்து தமிழ்மொழி வளர்த்தனர்.

இம்முச்சங்கங்களின் கூட்டாக விளங்கேவதனாலேயே இக்காலம் சங்க காலம் என அழைக்கப்படுகிறது.

முச்சங்க வரலாறு

சங்கம் என்பதன் பொருள்

சங்கம் என்ற சொல்லானது  சங்க இலக்கியத்தில் இடம் பெறவில்லை. இது தமிழ்ச் சொல்லா, வடமொழிச் சொல்லா என்ற வாதங்கள் பல காணப்படுகிறது. சங்கம்  என்னும்  சொல்  பிற்காலத்திய சொல்லாகவே இருக்கவேண்டும் என்பதில் எவ்விதமான  ஐயமும் இல்லை.

இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கூடல், அவை, மன்றம் போன்றவை காணப்படுகிறது. அதாவது சங்கம் என்பது புலவர்களின் கூட்டம் என்பதை அடிப்படையாக கொண்டே அமையப் பெற்றுள்ளது.

முதற்சங்கம்

முதற்சங்கம் “தலைமைச் சங்கம்” எனவும் அழைக்கப்படுகிறது. தலைமைச் சங்கம் இருந்த இடமாக தென்மதுரை காணப்படுகிறது. இங்கு இந்த சங்கத்தை நிறுவியவர் காய்சின வழுதி என்கிற மன்னர் ஆவார்.

காய்சின வழுதி மன்னர் தொடக்கம் கடுங்கோன் மன்னர் வரையாக 89 மன்னர்கள் தலைமைச் சங்கத்தை 440 ஆண்டுகள் சிறப்புற நடத்தினர். இதற்கு சான்றாக இறையனாரின் களவியல் உரைகள் அமைகின்றன.

தலைமைச் சங்ககாலத்தில் 4449 புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களில் 549 புலவர்கள் மாத்திரமே பாடல்கள் பாடி உள்ளனர். அத்துடன் 7 புலவர்கள் மாத்திரமே கவியரங்கு ஏறி பாடல்கள் பாடினர்.

இவர்களுள் அகத்தியர், திரிபுர மெரித்த விரிசடைக கடவுள், முரஞ்சியூர் முடிநாத ராயர், குன்றெறிந்த முருகவேள், நீதியின் கிழவன் ஆகிய 5 புலவர்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்களாகவும் பிரசித்தமானவர்களாகவும் விளங்கினார்கள்.

இச்சங்க காலத்தில் அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு போன்ற நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன.

இடைச்சங்கம்

இடைச்சங்கமானது கபாடபுரத்தில் காணப்பட்டது. இது வெண்தேர் செழியன் என்ற பாண்டிய மன்னனால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தை வெண்தேர் செழியன் தொடக்கம்  முடத்திருமாறன் வரையாக 59 மன்னர்கள் சிறப்புற நடாத்தினர்.

இச்சங்ககாலத்தில் 3700க்கும் அதிகமான புலவர்கள் காணப்பட்டனர். அவர்களில் 59 புலவர்களே பாடல்களை பாடியுள்ளானர். அத்துடன் 5 புலவர்கள் மாத்திரமே கவியரங்கு ஏறி பாடினர்.

இவர்களில் அகத்தியனார், தொல்காப்பியர், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், கீரந்தை, வெள்ளூர்க் காப்பியன், இருங்கையூர்க் கருங்கோழி மோசி போன்ற 7 புலவர்கள் முக்கியமானவர்களாகவும் பிரசித்தமானவர்களாகவும் காணப்பட்டனர்.

இவ்விடைச் சங்ககாலத்தில் இலக்கண நூல்களாக தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதாரணம் போன்றனவும் இலக்கிய நூல்களாக கலி, குருகு, வெண்டோழி, வியாழமாலை, அகவை போன்றனவும் தோற்றம் பெற்றன.

கடைச் சங்கம்

கடைச்சங்கமானது இன்றைய மதுரை காணப்படும் பகுதியில் அக்காலத்தில் முடத்திருமாற மன்னனால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தை முடத்திருமாற மன்னன் தொடக்கம் உக்கிர பெருவழுதி மன்னன் வரையாக 49 மன்னர்கள் சிறப்புற நடாத்தினர்.

இக்கடைச் சங்ககாலத்தில் மொத்தமாக 449 புலவர்கள் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 49 புலவர்களே பாடல்கள் பாடி உள்ளனர். அத்துடன் 3 புலவர்கள் மாத்திரமே கவியரங்கு ஏறியவர்களாக காணப்படுகின்றனர்.

இச்சங்கத்தில் வாழ்ந்த சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடைய அரசனார், பெருங்குன்றூர்க் கிழார், நல்லந்துவனார், இளந்திருமாறன், நக்கீரர் ஆகிய 7 பேர்களும் முக்கிய புலவர்களாக காணப்பட்டனர்.

இக்கடைச் சங்ககாலத்தில் தொல்காப்பிய இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டே நூல்கள் தோற்றம் பெற்றன.

அவ்வாறு தோற்றம் பெற்ற நூல்களாக நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கூத்து வரி, சிற்றிசை, நேரிசை போன்ற நூல்கள் தோற்றம் பெற்றன.

You May Also Like :
உலக தாய்மொழி தினம்
தமிழ் இலக்கிய வரலாறு