எனது நண்பன் சிறுவர் கட்டுரை

Enathu Nanban Katturai

இந்த பதிவில் “எனது நண்பன் சிறுவர் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.

நட்பு என்பது உறவுகளில் சிறந்த உறவாகவும் நெருக்கமான உறவாகவும் அனைவரும் விரும்பும் உறவாகவும் விளங்குகின்றது.

எனது நண்பன் சிறுவர் கட்டுரை – 1

உறவுகளை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் போது மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே எம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதற்கேற்ப இந்த வரிசையில் எனது நண்பனையும் நான் சேர்த்துக்கொள்வேன்.

ஏனெனில் என் நண்பன் எனது வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் பெறுகின்றான். எனது நண்பனின் பெயர் குணா. பெயருக்கு ஏற்ற வகையில் குணத்தில் சிறந்தவனாக இருப்பதே அவனிடம் எனக்கு பிடித்த விடயம்.

எனக்கு அவனை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவிற்கு எனது பெற்றோருக்கும் அவனை பிடிக்கும். சிறுவயதில் இருந்து ஆரம்பித்த எங்கள் பழக்கம் நாட்கள் செல்ல செல்ல நட்பாக மாறி இன்று வரை தொடர்கின்றது.

எங்கள் இருவரிடமும் உள்ள குணாதிசயங்கள் பல ஒத்துப் போவதால் எங்கள் நட்பு மிகவும் நெருக்கமானதாக காணப்படுகின்றது. பள்ளியில் இருவரும் ஒரே வகுப்பில் தான் கல்வி பயில்கின்றோம்.

மாலை நேரங்களில் ஒன்றாகவே விளையாடுவோம். பாடசாலை செல்லும் போதும் வீடு திரும்பும் போதும் ஒன்றாகவே சென்று வருவோம்.

எங்களுடைய ஓய்வு நேரங்களை மிக பயனுள்ளதாக கழிக்க நூலகம் சென்று புத்தகம் வாசித்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தல், ஆலயத்திற்கு செல்லுதல் போன்ற காரியங்களை ஒன்றாகவே செய்வோம்.

என் நண்பன் பாடசாலை வராத நாட்களில் நான் தனிமையை உணர்வேன். எனது நண்பன் நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பதனால் அவனுடன் இருக்கும் பொழுதுகள் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

இன்று போல் என்றும் எங்கள் நட்பு தொடர வேண்டும் என்பது எங்கள் இருவரினதும் விருப்பம் ஆகும்.

எனது நண்பன் கட்டுரை – 2

எனது நண்பனின் பெயர் சந்துரு. எங்கள் இருவரின் வீடுகளும் அருகில் இருப்பதாலும் எங்களது குடும்பத்தினரிடயே பழக்கம் இருப்பதனாலும் நாங்கள் சிறு வயது முதல் நட்புடன் உறவாட வாய்ப்பாக இருந்தது. எனது நண்பன் என்னை விட உயரமானவனாகவும் கபில நிற கண்களை உடையவனாகவும் காணப்படுகின்றான்.

அவனது தோற்றமே அவனது அடையாளமாக உள்ளது. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் பாடசாலை வட்டாரத்தில் எம் நட்பு மிக பிரபல்யமானதாக காணப்படுகின்றது.

எனது நண்பன் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் உள்ளவன். குறிப்பாக கிரிக்கட், கால்பந்து என்பவற்றை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் மைதானத்தில் விளையாடுவதற்கும் அதிக நேரத்தை செலவிடுவதையும் வழக்கமாக கொண்டவன்.

அதற்காக அவன் தனது தினசரி கடமைகளை செய்வதற்கோ கல்வி கற்பதற்கோ நேரம் ஒதுக்குவதற்கு தவறியதில்லை. மாலை நேரங்களில் இருவரும் ஒன்றாகவே விளையாடுவோம்.

நேரம் கிடைக்கும் போது ஒன்றாக பத்திரிக்கை வாசிப்பதனை வழக்கமாக்கி கொண்டோம். அத்துடன் அவனது தாத்தாவுடன் உரையாடுவதன் மூலம் அவரின் வாழ்க்கை அனுபவங்களையும் அறிவுரைகளையும் கேட்போம்.

எனது நண்பனுக்கு தான் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாகி பல சாதனைகளை புரிய வேண்டும் என்ற கனவு உள்ளது.

அதற்கு அவன் பெரியவனாகும் போது பல பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பல போட்டிகளில் ஈடுபட்டு வெற்றிகளை பெற்று தனது குடும்பத்தினருக்கு பெருமை தேடி தர வேண்டும் எனவும் கூறுவான்.

ஒரு சிறந்த கனவினை கொண்டிருக்கும் அவனுடன் பழகுவதில் நான் பெருமை கொள்வதுடன் அவனது கனவு நனவாக வேண்டும் எனவும் விரும்புகின்றேன்.

You May Also Like:
அழகிய மாலை வானம் கட்டுரை
நான் ஒரு தொழிலதிபர் ஆனால் கட்டுரை