திருமங்கை ஆழ்வார் வரலாறு

thirumangai alwar history in tamil

களப்பிரர்களது ஆட்சியினால் சைவ, வைணவ சமயங்கள் நலிவுற்ற காலப்பகுதியில் பல நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோற்றம் பெற்று அவர்களுடைய சமயங்களை சிறப்புற வளர்ச்சியடைய செய்தனர்.

அந்த வகையில் விஷ்ணு பகவானை ஆதாரமாகக் கொண்ட வைணவ சமயத்தை மீட்டெடுத்து வளர்ச்சி அடைய செய்த 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வாரும் ஒருவராகக் காணப்படுகிறார்.

12 ஆழ்வார்களில் இவர் தான் அதிக பெருமாள் தலங்களுக்கு சென்று மங்களாசாசனம் செய்துள்ளார். இருப்பினும் அவர் பிறந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோவிலை மட்டும் மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாக காணப்படுகிறது.

பிறந்த இடம்திருவாளியூரின்,
திருக்குறையனூர் பகுதி
பிறந்த காலம்எட்டாம் நூற்றாண்டு
பிறந்த நட்சத்திரம்கார்த்திகை நட்சத்திரம்

ஆரம்ப வாழ்க்கை

திருமங்கையாழ்வாரின் தந்தை குல மரபுப்படி திருமங்கை ஆழ்வாருக்கு நீலன் என்றே பெயர் சூட்டி வளர்த்தார். இளம் வயதிலேயே நீலன் கல்வி கேள்விகளிலும், யானையேற்றம், குதிரையேற்றம், வாள், வில், வேல் போன்ற பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றவராக சிறந்து விளங்கினார்.

அவரது தந்தையார் காலமான பின், இவரது தோல்வலிமை, பெருமை, திறமை என்பவற்றை அறிந்த சோழ அரசன் அவனுக்கு மேலும் ஒரு நாட்டையும், வேண்டிய படைகளையும் கொடுத்து அரசனாக்கினான்.

அரச வாழ்வில் ஈடுபட்ட நீலன் இறைநிலையில் பற்றின்றி உலக இன்பங்களில் மிகுந்த பற்று உள்ளவனாக காணப்பட்டார்.

நீலனது வைணவ மத மாற்றமும் திருமணமும்

திருநாங்கூரில் வாழும் பக்தன் ஒருவன் திருவாளி எனும் இடத்திற்கு வந்து அங்குள்ள பெருமாள் ஆலயம் சென்று வணங்கும் சமயம் அங்கே, ஒரு மங்கை கண் இமைக்காமல், கால்கள் தரையில் படாமல் தனியாக இருந்தாள்.

அவளை கண்டு வியந்து அவளைப் பற்றி வினவிய போது, அந்த கன்னிகை தேவலோகத்தில் இருந்து தினமும் விமானம் ஏறி மற்றைய தேவலோக பெண்களுடன் திருவாளி வந்து,

பொய்கையில் நீராடி குமுத மலரை கொண்டு திருவாளிநாதரை தரிசித்து விட்டு, விண்ணுலகம் செல்வது அவர்களது வழமையான செயல் என்றும், அன்றைய தினம் ஏனைய கன்னியர்கள் அவளை விட்டு விட்டு விண்ணுலகம் சென்றனர் என்பதையும் அறிந்து கொண்டார்.

பின்னர், அந்த பக்தர் அக்கன்னிகையை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அன்புடன் வளர்த்து வந்தார். குமுத மலர் கொண்டு இறைவனை பூசித்தமையால் குமுதவல்லி எனவும் அவளுக்கு பெயரிட்டனர்.

குமுதவல்லி தினமும் பொய்கையில் நீராடி குமுத மலர் கொண்டு திருவாளியூர் நாதரை தரிசித்து வந்தார். இவர் வளர்ந்து திருமண வயதை அடைந்ததும் இவளது அழகை கண்டு வியந்த ஆடவர்கள், செல்வந்தர்கள் அவளை திருமணம் செய்ய முயற்சி செய்தனர்.

ஆனாலும் அவர்கள் அனைவரையும் அவள் மறுத்துவிட்டாள். இவற்றை அறிந்த நீலன் திருமால் அடியாரை அணுகி, குமுதவல்லியை தனக்குத் திருமணம் முடித்துத் தருமாறு வேண்டினார்.

நீலனது அழகையும், பேச்சையும் கண்டு மயங்கிய குமுதவல்லி அவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இருப்பினும் இரண்டு கட்டளைகளையும் விதித்தார்.

ஒன்று வைணவர் தவிர வேறு எவரையும் மணம் முடிக்க இயலாது எனவே திருமண்காப்பு தரித்து வைணவராக வேண்டும். மற்றையது ஓராண்டு காலம் நாள்தோறும் 1008 திருமால் அடியாருக்கு விருந்து கொடுத்து, அவர்களது திருப்பாத தீர்த்தமும் பிரசாதமும் கொள்ளல் வேண்டும் என்பவையாகும்.

நீலனும் அதற்கு இசைந்து சைவசமய கோலத்தை கலைந்து திருமண்காப்பு, திருத்துழாய்மாலையை அணிந்து திருநாராயணனை விரும்பும் வைணவராக மாற்றம் பெற்று, 1008 பாகவதர்களுக்கு விருந்தமுது கொடுத்து, திருப்பாத தீர்த்தமும் பிரசாதமும் உட்கொண்டார்.

ஓராண்டு காலம் முடிந்தபின் குமுதவல்லியும், அவளது பெற்றோரும் அகம் மலர்ந்து நன்னாளில் நீலனுற்கும் குமுதவல்லிக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் இருவரும் இணைந்து பாகவதர்களுக்கு விருந்தமுது படைக்கும் பணியை சிறப்புற செய்து வந்தனர்.

சோழ மன்னனுக்கு கப்பம் செலுத்தியமை

நீலன் ஆட்சி செய்த பிரதேசங்கள் சோழ மன்னனின் பேராட்சிக்கு உட்பட்டு இருந்ததால், இவர் சோழ அரசனுக்கு கப்பம் செலுத்தி வந்தார். பாதவதர்களுக்கு விருந்தமுது வழங்கும் பணியில் கப்பம் செலுத்த மறந்தார்.

இதனால் சோழ அரசன் தனது தூதர்களை அனுப்பி நீலனிடம் கப்பம் பெற்று வருமாறு கூறினார். நீலன் தன்னிடம் இருந்த செல்வங்களை கொண்டு பாகவதருக்கு விருந்தமுது படைத்து விட்டேன். இப்போது என்னிடம் கப்பம் செலுத்துவதற்கு ஏதுமில்லை என்று கூறி திருப்பி அனுப்பினார்.

இதனால் சோழ அரசன் நீலன் மீது படையெடுத்தான். நீலனும் சிறந்த முறையில் போர் புரிந்து அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தார்.

பின்னர் கடும்கோபங் கொண்ட சோழ அரசன் பெரும் படையினருடன் சென்று நீண்ட நாட்கள் அவனுடன் போர் புரிந்து நீலனை கைது செய்து அவனது நாட்டிலேயே சோழ அமைச்சர்கள், படைத்தளபதிகளது காவலில் வைக்கப்பட்டார்.

காவலில் பட்டினியில் கிடந்த நீலனது கனவில் இறைவன் தோன்றி “காஞ்சிபுரத்திற்கு வந்து வேண்டிய செல்வம் பெற்று செல்” என்று கூறி மறைந்தார்.

நீலன் இதனை சோழ அரசனுக்கு தெரிவித்து அவரது உத்தரவுடன் காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாளை வணங்கிவிட்டு, வேகவதி ஆற்றுக்கு சென்று அங்கே புதையலைத் தோண்டி எடுத்து கப்பப் பணத்தை செலுத்தினார். மீதி இருந்த செல்வத்தைக் கொண்டு அவர்களுக்கு உணவளித்தார்.

வழிப்பறி செய்து பக்தர்களுக்கு விருந்தமுது படைத்தமை

தான் பெற்ற புதையல்களையும், சோழ மன்னனது அன்பளிப்புகளையும் கொண்டு பாகவதர்களுக்கு விருந்தமுது படைத்த நீலன் தன்னிடமிருந்த செல்வங்கள் அனைத்தையும் இழந்தார்.

பாகவதர்களுக்கு உணவளிக்காமல் விடுவது பாவம் எனக் கருதினார். எனவே எப்படியாவது அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதுவே தர்மம் என்று கருதி, சில துணைவர்களை இணைத்துக் கொண்டு வழிப்பறி செய்து அவர்களுக்கு உணவளிக்க தீர்மானித்தார்.

காடுகளின் ஊடாக வரும் வழிப்போக்கர்களை மறித்து அவர்களுக்கு அன்றைய தினம் தேவையான உணவுப் பொருட்கள், ஆடைகளைத் தவிர்த்து ஏனைய பொருட்கள் அனைத்தையும் சூறையாடி அவற்றைக் கொண்டு பாகவதர்களுக்கு உணவளித்து வந்தார்.

விஷ்ணு பெருமானின் தரிசனம் பெற்றமை

வழிப்பறி செய்த பக்தர்களின் பசியைப் போக்கும் நீலனது செயலை கண்ட விஷ்ணு பெருமான் அவருக்கு அருள் பாலிக்க எண்ணம் கொண்டு, விஷ்ணுவும் லட்சுமி தேவியும் மானிடராய் திருமணக்கோலத்திலும், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் உட்பட அனைவரும் மானிட வேடம் தரித்து காட்டு வழியே சென்றனர்.

நீலன் அவர்களை வழிமறித்து அவர்களிடம் உள்ளவற்றைப் பறித்து ஒரு மூட்டையில் கட்டி அதனை தூக்க முயன்றார். ஆனால் அதனை தூக்க இயலாமல் நீலன் அவதிப்பட்டார்.

பின் அவர்களை நோக்கி “நான் இதனை தூக்காமல் இருக்க மந்திரம் ஏதும் செய்து விட்டீர்களோ? இப்போது அந்த மந்திரத்தை எனக்கு கூற வேண்டும் இல்லையெனில் இக்கூரிய வாளினால் உங்களைத் தாக்கி விடுவேன்” என மிரட்டினார்.

இனியும் நீலனை சோதிக்க வேண்டாம். என எண்ணி “ஓம் நமோ நாராயண” என்று கூறி விஷ்ணு பகவான் உட்பட ஏனைய தேவர்கள் அனைவரும் தமது சுய ரூபத்தை வெளிப்படுத்தி நீலனுக்கு காட்சியளித்து நின்றனர்.

அவர்களின் சுய வடிவைக் கண்டு வியந்த நீலன் விழுந்து வணங்கி தரிசித்து விட்டு, தனது இறைவனிடமே வழிப்பறி செய்யவும், கொலை மிரட்டல் விடவும் துணிந்த இவ்வுயிர் வேண்டாம் என்று எண்ணி தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

அவரை விஷ்ணு பகவான் தடுத்தாட்கொண்டு, பின்னர் “இவை அனைத்தையும் உன் நலனுக்காக அல்லாமல் என் சேவைக்காகவே புரிந்துள்ளாய். இது திருத்தொண்டு இதை உலகுக்கு விளக்கவே உன்னைக் கொண்டு இவ்வாறு செய்தோம்” என்று கூறி அவரது பிறவிப்பிணியை தீர்த்தார்.

பின்னர் “அஞ்ஞானம் போக்கி மெய்ஞானம் பெற உலகில் விசிட்டாத்வைதத்தை பரப்பும் வேத பாசுரங்களைப் பாடி, காலம் சென்ற பின் வைகுண்டம் வாரும்” என்று கூறி மறைந்தார்.

மங்கள சாசனம்

108 திருப்பதிகளில், இவர் தனியாக சென்று 46 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் 36 கோயில்களையுமாக மொத்தம் 82 கோயில்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார்.

இலக்கிய பணி

இவர் 1137 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளாவன

  • திருமங்கையாழ்வாரின் சிலை ஆழ்வார்திருநாகரி திருக்கோவில்
  • திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் – 47 அடிகள்)
  • சிறிய திருமடல் (ஒரு பாடல் – 155 அடிகள்)
  • பெரிய திருமடல் (ஒரு பாடல் – 297 அடிகள்)
  • திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
  • திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)
  • பெரிய திருமொழி (1084 பாடல்கள்)
You May Also Like :
சீத்தலை சாத்தனார் வாழ்க்கை வரலாறு
பாகம்பிரியாள் கோயில் வரலாறு