நூலகம் பற்றிய கட்டுரை

Noolagam Katturai In Tamil

நம் அறிவை கூர்மையாக்கிக்கொள்ள உதவும் நூல்களை தன்னகத்தே வைத்திருக்கும் “நூலகம் பற்றிய கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

பல அறிஞர்களை உருவாக்கியதில் நூலகங்களின் பங்கு மிக முக்கியமானது. நாம் அனைவரும் சிறு வயதிலிருந்தே நூலகங்களின் மகிமையை உணர்ந்து கொண்டு அதனை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நூலகம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. அறிமுகம்
  2. நூலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  3. நூலகத்தின் வகைகள்
  4. நூலகத்தின் தேவை
  5. நூலகத்தில் படிக்கும் முறை
  6. முடிவுரை

அறிமுகம்

நூலகம் அறிவின் ஊற்று என்று கூறினால் அது மிகையாகாது. இதனால் தான் “நூல் பல கல்” என்றும் “நூலளவே யாகுமாம் நுண்ணறிவு” என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நம் அறிவு வளரவும்⸴ உயரவும் கல்வி நிலையங்களுக்கு அடுத்தபடியாக நூலகங்களே முதன்மை பெறுகின்றன. அறிஞர்ப் பெருமக்களின் நூல்களை பொதுமக்கள் படித்து பயன்பெற தொகுத்து வைக்கும் இடமே நூலகங்கள் ஆகும்.

ஒவ்வொருவருக்கும் தமக்குத் தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடியாது.

இதனால் தான் அவர்களுக்கு தேவையான நூல்களை இரவல் வாங்கிப் படித்துப் பயன் பெற நூல் நிலையங்கள் அமையப் பெற்றுள்ளன. இந்த நூலகங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

நூலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

நூல் நிலையங்கள் கி.மு நான்காம் நூற்றாண்டிலேயே தோன்றி விட்டன என்று வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

உதாரணமாக தமிழில் மூன்று சங்கங்களிலும் நூல்கள் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அவை தற்போது உள்ள நூல் நிலையங்கள் போலல்ல. ஆரம்பத்தில் களிமண்⸴ ஏடுகளை⸴ ஏட்டுச் சுவடிகளை உள்ளடக்கியதாக இருந்தன.

அதன் பின்னர் அச்சு இயந்திரங்கள்⸴ மற்றும் தாள்களின் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. இதன் பின்னரே நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.

இதன் மூலம் நூல் நிலையங்களும் வளர்ச்சி கண்டன. இன்று நூல் நிலையங்களானவை கல்லூரிகள்⸴ பாடசாலைகள் எனப் பல இடங்களிலும் அமையப்பெற்றுள்ளன.

நூலகத்தின் வகைகள்

நூலகத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன

  • மாவட்ட மைய நூலகம்
  • மாவட்டக் கிளை நூலகம்
  • ஊர்ப்புற நூலகம்
  • தனியார் நூலகம்
  • கல்லூரி நூலகம்
  • பல்கலைக்கழக நூலகம்
  • நடமாடும் நூலகம்
  • மின் நூலகம்

போன்ற பல வகைகள் காணப்படுகின்றன.

நூலகத்தின் தேவை

அறிவின் வளர்ச்சிக்கு நூலகம் இன்றியமையாததாகும். சாதாரண மனிதர்களையும் சாதனையாளர்களாக மாற்றியமைக்க நூல்கள் அவசியமானவை.

அனைத்து நூல்களையும் மாணவர்களால் விலை கொடுத்து வாங்க முடியாது. குறிப்பாக ஏழை மாணவர்களால் அதிக பணம் கொடுத்து வாங்க முடியாது. இதனால் அவர்கள் பயன் பெறுவதற்கு நூலகங்களின் துணை அவசியமாகும்.

நூல்களைப் படித்து பயன் பெற நூல் நிலையங்கள் இன்றியமையாதவையாகும்.

நூலகத்தில் படிக்கும் முறை

  • நூலகங்களில் எப்போதும் நாம் அமைதியாகவே நூல்களைப் படிக்க வேண்டும்.
  • அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் படிக்க வேண்டும்.
  • படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும்.
  • நூல்களை சேதப்படுத்தவோ கிழிக்கவோ கூடாது.
  • படித்து முடித்த பின்னர் மீண்டும் உரிய இடத்தில் வைக்க வேண்டும்.

முடிவுரை

“புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”

என்ற பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நூலக வளர்ச்சியில் அரசு அக்கறை காட்டி வருகின்றது.

தேனிருக்கும் அடத்தை நாடிச் செல்லும் வண்டு போல் நாமும் நூலிருக்கும் இடத்தை நாடிச் சென்று கற்றுப் பயன் பெறுவோம். நூல்கள் பல கற்று சிறந்த மேதையாக நூலகம் துணை செய்கின்றது. நூலகம் தேடிச் சென்று நூல்களைப் படித்து பயன் பெறுவோமாக.

You May Also Like:

கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை
கல்வியின் சிறப்பு கட்டுரை