தீண்டாமை ஒழிப்பு கட்டுரை

Theendamai Olippu Katturai

மனித குலத்தின் சாபேக்கேடான “தீண்டாமை ஒழிப்பு கட்டுரை” பதிவை பற்றி இதில் காணலாம்.

பிறப்பில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது இல்லை என்பதை உணர்ந்து அனைவரும் மனிதர்கள் என்ற மனநிலையோடு மனிதத்தோடு வாழ வேண்டும்.

தீண்டாமை ஒழிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. அறிமுகம்
  2. தீண்டாமைக் கொடுமைகள்
  3. தீண்டாமைக்கு எதிரான பாரதியின் பங்களிப்பு
  4. காந்தியின் தீண்டாமை
  5. அம்பேத்கரின் பங்கு
  6. முடிவுரை

அறிமுகம்

இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் கடந்த போதிலும் தீண்டாமை ஒழிந்ததா என்றால் இல்லை என்பதே சரியான பதில். அனைவருக்கும் கல்வி⸴ நாட்டின் வளர்ச்சி⸴ சமத்துவம்⸴ ஒருமைப்பாடு என காலம் காலமாக பேசி வந்தாலும் தீண்டாமை ஒழிந்ததாகவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்கள்⸴ ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எனக்கூறி குறிப்பிட்ட மக்கள் இன்றும் தீண்டாமை எனும் பெயரில் ஒதுக்கி வைக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி அவர்களுக்கு எதிரான தாக்குதல்களும் நாடு முழுவதும் அரங்கேறி வருகின்றது.

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்” என்று அவ்வைப் பாட்டி கூறியுள்ளார்.

இவர் தனது கருத்தில் நல்ல எண்ணங்களோடு அடுத்தவர்களுக்கு கொடுத்துதவுபவர்கள் உயர்ந்தவர்கள் என்கின்றார்.

அந்த வகையில் தீண்டாமை ஒழிப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தீண்டாமைக் கொடுமைகள்

சமூகத்தில் உயர்ந்தவர்கள்⸴ தாழ்ந்தவர்கள் என்ற சாதிய வேற்றுமைகளை உருவாக்கி மனிதர்களை இழிவாக நடத்துவதும்⸴ அவர்களுக்கான உரிமைகளை வழங்காமல் அவர்களை அடக்கி ஒடுக்குவதும் சமூகத்தில் நிகழ்கின்றது.

சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் கொடூரமான மனநோய் இந்த சமூகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக அப்பாவி மக்கள் பெரிதும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர்.

பிறப்பால் அனைவரும் சமமானவர்கள் என்ற எண்ணம் நம் சமூகத்தில் இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள்⸴ தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரையைக் குத்தி அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பறித்து கொடுமை செய்கின்றவர்கள் நம் சமூகத்தின் மத்தியில் இருக்கின்றார்கள் என்பது வேதனைக்குரிய நிதர்சனமாகும்.

தீண்டாமைக்கு எதிரான பாரதியின் பங்களிப்பு

“சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்றார் மகாகவி பாரதியார்.

இவர் உயர் குலத்தை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டாலும் அவர் மனிதனாக வாழ்ந்தார் என்ற போற்றுதற்குரியவராவார்.

இவர் தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்தவர் மட்டுமல்ல தீண்டாமைக்கெதிராக முன்னுதாரணமாக தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவராவர். சாதி⸴ பேதமற்ற சமுதாயம் அமைய குரல் கொடுத்தார்.

“ஜாதி மதங்களைப் பாரோம்
வேதிய ராயினும் ஒன்றே அன்றில்
வேறு குலத்தின் ராயினு மொன்றே” என்று தீண்டாமைக்கு எதிராக பாடியுள்ளார்.

காந்தியின் தீண்டாமை

மனிதரில் புனிதராய் வாழ்ந்த காந்திமகான் மனிதரில் தீண்டாமை வேண்டாம் என்றார். தன் வாழ்நாளில் தீண்டாமை ஒழிப்பிற்காக அரும்பாடுபட்டவராவார்.

தீண்டத்தகாதவர்கள் என்று எவரும் கிடையாது என்று கூறிய அவர் தீண்டாமையை கடவுளுக்கு எதிரான பாவச்செயல் என்றார். தீண்டாமை இந்தியாவின் அவமானம் என்றார்.

தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்று “சத்திய சோதனை” என்ற தனது சுயசரிதை நூலில் எழுதியுள்ளார்.

அம்பேத்கரின் பங்கு

தீண்டாமை என்ற சாக்கடையில் வீழ்ந்து கிடந்த இந்திய சமூகத்தை ஓரளவேனும் ஒரு புதிய வழியில் கொண்டு வந்த பெருமை அண்ணல் அம்பேத்கர் அவர்களையே சாரும்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த இவர் பல கொடுமைகளையும்⸴ இன்னல்களையும் கண்டவர். தனது விடாமுயற்சியால் மிகச்சிறந்த மாமேதை ஆனார்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி அதன் மூலம் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியமைத்தார். இந்தியாவின் பின்பற்றப்பட்ட தவறான வழக்கங்கள் படிப்படியாகக் குறைய இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

முடிவுரை

பிரிவினைகளும் அடக்குமுறைகளும் நம் இந்திய தேசத்தை வளர செய்யாது. மனித குலத்தின் சாபக்கேடாகவே தீண்டாமை இருந்து வருகின்றது.

தீண்டாமை ஒழிப்புத் தொடர்பாக எத்தனையோ சட்டங்கள் இருப்பினும் தீண்டாமை ஒழிப்பில் முழுமையாக வெற்றி காண முடியவில்லை.

சாதி பேதங்களை மறந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்று உணர்ந்து ஒருவரை ஒருவர் மதித்து வாழப் பழகிக் கொள்வதே சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மை தரும்.

You May Also Like :

கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை