பூணூல் வரலாறு

poonool in tamil

பூணூல் என்பது ஆண்கள் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வழியின் குறுக்கே அணியும் பருத்தியிலான மூன்று இழைகளைக் கொண்ட புனிதத் தன்மை நிறைந்த நூல் ஆகும். இதனை முப்புரி நூல் என்றும் யக்ஞோபவீதம் என்றும் அழைக்கின்றனர்.

இந்நூலின் மூன்று இழைகளையும் ஓரிடத்தில் முடிச்சுட்டு இணைத்திருப்பர். அதில் எப்போதும் மஞ்சள் தடவி காணப்படும்.

ஆரம்ப காலத்தில் அனைவராலும் அணியப்பட்டாலும், தற்காலத்தில் பூணூல் பிராமணர்கள் மாத்திரமே அதிக அளவில் அணிகின்றனர்.

உபநயனம்

இந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய 16 சமஸ்காரங்களான கர்பதானம், பும்சவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்பிரஷாணம், சூடாகரணம், வேதாரம்பம், வானப்பிரஸ்தம், சன்னியாசம், அந்தியேட்டி என்பவற்றுள் உபநயனமும் ஒன்றாகும்.

முதன் முதலில் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என அழைக்கின்றனர். பூணூலை முதன்முதலில் அணிவோர் புதிய ஒரு பிறப்பு பெறுவதாகக் கூறப்படுகிறது.

பூணூல் அணிவதன் மூலமே ஒருவருக்கு உயர்ந்த காயத்ரி தேவியின் மந்திரத்தை உச்சரிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. உபநயனம் மற்றும் புதுபித்தல் நிகழ்வானது ஆவணி மாத அவிட்ட நன்னாளில் மேற்கொள்ளப்படுகிறது.

பூணூலின் மூன்று இழைகள்

பூணூலானது மூன்று இழைகளாலானவை ஆகும். இம்மூன்றும் முறையே ரிஷி கடன், தேவ கடன், பித்ரு கடன் என ஒரு மனிதன் தனது வாழ்நாளில் வைத்துள்ள மூன்று கடன்களையும் குறிக்கின்றன.

ரிஷி கடன் என்பது ரிஷிகள், பூணூல் அணிபவர்களுக்கு வழங்குகின்ற ஞானத்துக்கும், தேவகடன் மற்றும் பித்ரு கடன் இரண்டும் இப்போது அனுபவிக்கின்ற வாழ்க்கைக்குமாக அணியப்படுகிறது.

வேத மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் ரிஷி கடனையும், யாகங்கள் செய்வதன் மூலம் தேவ கடனையும், ஈன்ற பிள்ளையை நன்றாக வளர்த்தல் மற்றும் முன்னோர்களுக்கான சாந்தங்கள் (சிரார்த்தம்) செய்வதன் மூலம் பித்ரு கடனை தீர்க்க முடிகிறது.

மூன்று இழைகள் ஓர் இடத்தில் கட்டப்பட்டு காணப்படும் அதனை பிரம்ம முடிச்சு எனவும் அழைக்கின்றனர்.

அத்துடன் பூணூலின் மூன்று இழைகளும், மூன்று பிரதான நாடிகளான இடா, பிங்கலா, சுஷும்னா என்பவற்றை குறிக்கின்றன.

நாடி என்பது மூச்சு காற்று செல்லும் வளையத்தக்க சிறுகுழாய் அமைப்பை உடையது ஆகும். இடா நாடியானது முதுகெலும்பின் இடப் புறத்தில் இருந்து ஆரம்பித்து இடது நாசியில் இணைக்கப்பட்டு உள்ளது.

பிங்கலா நாடியானது வலது புறத்தில் இருந்து ஆரம்பித்து வலது நாசியில் இணைக்கப்பட்டுள்ளது. சுஷும்னா நாடியானது முதுகெலும்பின் நடுவே செல்கிறது.

பிராணாயாமம் என்பது இடது நாசியினாலும் வலது நாசியினாலும் மாறி மாறி மூச்சு காற்றை உள்ளெடுத்து வெளிவிடும் பயிற்சி ஆகும். இந்த பயிற்சியினை செய்கின்றபோது, மூச்சுக் காற்றானது இடா வழியாக உள்ளே வந்து பிங்கலா வழியாக வெளியே செல்கிறது.

மற்றும் பிங்கலா வழியாக உள்ளே வந்து இடா வழியாக வெளியே செல்கிறது. இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்ற போது நாடிகள் தூய்மை அடைகின்றன.

மேலும் இம்மூன்று இழைகளிலும் மனதிற்குரிய காயத்ரி தேவியும், வாக்கிற்குரிய சரஸ்வதி தேவியும், செய்கைக்குரிய சாவித்ரி தேவியும் உறைவதாக கூறப்படுகிறது.

இதனால் இதனை அணிவோர்கள் எப்போதும் எந்நேரமும் மனம், வாக்கு மற்றும் செய்கையில் தூய்மை உடையவராக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பூணூல் அணிவோர்

முன்னைய காலங்களில் ஏதாவது ஒரு விடயத்தை கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர் பூணூல் அணிந்து அதன் பின்னரே அவ்விடயங்களை கற்றுக் கொண்டனர்.

ஆரம்பத்தில் நகரசெட்டியார்கள், பொற்கொல்லர்கள், தச்சர்கள், சிற்பிகள் அனைவரும் பூணூல் தரித்தனர். தற்காலத்தில் பெருவழக்காக பிராமணர்கள் மாத்திரமே பூணூல் தரிக்கின்றனர்.

பூணூல் அணியும் முறை

ஒவ்வொரு சடங்குகள் மேற்கொள்ளும் போது பூணூல் ஒவ்வொருவிதமாக அணியப்பட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதாவது வழமையான முறையில் இடது தோளிலிருந்து வலது கைப்புறம் – கடவுளுக்கு வழிபாடுகளை மேற்கொள்ளும் போது அணியப்படவேண்டும்.

நெஞ்சின் மீது மாலையாக – இருடிகளுக்கு தர்ப்பணம் கொடுக்கையில், உடலுறவு கொள்கையில் மற்றும் இயற்கை கடன்களை கழிக்கும்போது அணியப்படும்.

வலது தோளில் இருந்து இடதுபுறம் எதிர்மறையாக – இறந்தவர்களுக்கான கருமாதி, திவசம் செய்கையில் அணியப்பட வேண்டும்.

பூணூல் வகைகள்

பூணூலானது கள்ளப்பூணூல், பிரம்மச்சாரி பூணூல், கிருகஸ்தர் பூணூல், சஷ்டி அப்த பூணூல் என நான்கு வகைப்படுகிறது.

ஒருவர் உபநயனவிழா நடத்தி பூணூல் போட்டுவிட்டால் அதனை கழற்றக்கூடாது. உபநயனவிழா நடத்தாமல் ஆவணி அவிட்டம் அன்று மட்டும் சாஸ்திரத்திற்காக போடப்படும் பூணூலை கழற்றி விடலாம். இதையே கள்ளப்பூணூல் என்கின்றனர்.

திருமணமாகாத பிரம்மச்சாரியர்கள் பிரம்மச்சாரிய பூணூல் அணிகின்றனர். திருமணம் முடித்தவர்கள் கிருகஸ்த பூணூலும் அணிகின்றனர். இந்த கிருகஸ்த பூணூலில் ஆறு இழைநூல்கள் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும்.

அறுபது வயதான பின்னர் சஷ்டி அப்த பூர்த்தி என்று அழைக்கப்படுகின்ற பூணூலை அணிகின்றனர். இப்பூணூலில் ஒன்பது இழைநூல்கள் காணப்படுகிறது.

You May Also Like :
திருமங்கை ஆழ்வார் வரலாறு
பாகம்பிரியாள் கோயில் வரலாறு