பாண்டுரங்கன் வரலாறு

pandurangan temple history in tamil

தினமும் 24 மணி நேரமும் கிருஷ்ண பகவானின் நாம சங்கீர்த்தனா ஒலித்துக்கொண்டிருக்கும் திருத்தலமாக பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவில் காணப்படுகிறது. அத்துடன் எந்நேரமும் சந்தனமும், துளசியும் மணக்கும் விஷ்ணு திருத்தலங்களில் இதுவும் ஒன்றாக காணப்படுகிறது.

மூலவர் விட்டலர்
தேவிருக்மணி
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர்

ஆலயம் அமைய பெற்ற வரலாறு

ஜானு தேவர் மற்றும் சத்யவதி ஆகிய இருவரும் மிகுந்த விஷ்ணு பக்தர்கள். இவர்களது மகனான புண்டரீகன் கடவுள் பற்றற்றவராகவே பிறந்தது முதல் காணப்பட்டார்.

திருமண வயதை அடைந்த இவருக்கு ஒரு பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்தனர். திருமணத்தின் பின் புண்டரீகன் மனைவியின் மேல் அதீத அன்பு கொண்டு அவரது மனைவியின் பேச்சைக் கேட்டு அவர்களது பெற்றோர்களை மதிக்காது துன்பப்படுத்தினார்.

அத்துடன் பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி, பல பழிச்சொற்களுக்கும் உள்ளாகின்றார்.

இவரது பெற்றோரும், உறவினர்களும் இவரை நல்வழிப்படுத்த பல வழிகளிலும் முயற்சியினை மேற்கொண்டும். அவை ஒன்றும் பயனளிக்காத காரணத்தால், இவரது பெற்றோர் “விஷ்ணு பகவானே! என் மகனை நீரே, நல்வழிப்படுத்துவீரே” என கூறி, காசிக்கு செல்ல உத்தேசித்து இருவரும் காசிக்கு பயணமானர்கள்.

அதன் பின்னரும் புண்டரீகரின் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லாததால், மேலும் பல பழிச்சொற்கள் இவரை சூழ்கின்றது.

இவரது இச்செயல்களால் மனம் நொந்த புண்டரீகனின் மனைவி, “நாமும் காசிக்கு செல்வோம்” என கூறி புண்டரீகரை சமாதானப்படுத்தி காசிக்கு செல்லப் புறப்படலானார்கள்.

அவ்வாறு செல்கின்ற போது அந்திப் பொழுதாகி இருள் சூழ்கின்றபோது, அவ்வழியின் அருகில் இருந்த குக்கிடமுனிவரின் ஆச்சிரமத்தில் தங்குகின்றனர்.

மறுநாள் அதிகாலை அந்த ஆச்சிரமத்திற்கு மூன்று பெண்கள் அசுத்தமான நிலையில் வந்து அவ்வாச்சிரமத்தை கூட்டி, மெழுகி கோலமிட்டு மேலும் குக்கிடமுனிவருக்கான பல பணிவிடைகளை செய்துவிட்டு,

முனிவரின் ஆசிப்பெற்று மீண்டு வருகையில் கடாட்சம் பொருந்திய தேவதைகளாக வருவதை பார்த்து வியந்த புண்டரீகன், அவர்கள் மூவரின் முன்சென்று அவர்களை முதலில் வணங்கி விட்டு,

“தாங்கள் மூவரும் வருகின்ற போது அசுத்தமாக வந்தீர்கள் இப்போது இப்பணி விடைகள் முடித்து செல்கையில் அசுத்தம் அனைத்தும் நீங்கி இவ்வாறு செல்கின்றீர்கள். இது எவ்வாறு நடைபெறுகிறது? நீங்கள் மூவரும் யார்?” என வினவினார்.

அதற்கு “நாங்கள் மூவருமே கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் ஆவோம். மக்கள் தங்களுடைய பாவங்களையும், அழுக்குகளையும் எம்முள் மூழ்கி நீக்குவதால் நாம் அசுத்தமடைந்து துன்பப்படுகின்றோம்.

அதனால் நாம் மூவரும் இங்கு வந்து இம்முனிவருக்கான பணிவிடைகளை செய்து அவரின் ஆசி பெற்று எமது பாவங்களை நீக்கி செல்கின்றோம்” என கூறினர். அதற்கு புண்டரீகர் “உங்களுடைய பாவங்களை நீக்கும் அளவுக்கு இம்முனிவர் பெரியவரா” என வினவினார்.

அதற்கு “இம்முனிவர் தன்னுடைய பெற்றோர்களை சரிவர அன்புடன் கவனித்து வந்தமையால் எங்களுடைய பாவங்களை நீக்கும் அளவிற்கு சக்தி பெற்றுள்ளார்.” என கூறினார்.

இவற்றை கேட்ட புண்டரீகர் தாம் இதுவரை செய்த தவறை உணர்ந்து மனம் நொந்து அவரது பெற்றோரை தேடி பயணமானார்.

பின்னர் ஆச்சிரமத்தில் தங்கியிருந்த அவரது பெற்றோரை கண்டு பாதங்களில் வீழ்ந்து வணங்கி மன்னிப்பு கோரி அவர்களுடனே தங்கி அவர்களுக்கான பணிவிடைகளை சரிவரச் செய்ய ஆரம்பித்தார்.

புண்டரீகர் தமது பெற்றோர் விரும்பும் ஆலயங்களுக்கும், புண்ணிய நதிகளுக்கும் அவர்களை அழைத்து சென்று அவர்கள் மகிழ்வித்து மற்றும் அவர்களுக்கான பணிவிடைகளையும் சரிவர செய்து வருகின்றார்.

இவரது பெற்றோர் பக்தியை பரிசோதிக்க எண்ணிய விஷ்ணு பகவான், புண்டரீகரும் அவரது பெற்றோரும் மகாராஷ்டிரத்தில் உள்ள சந்திரபாகா நதியில் நீராடி விட்டு, நதிக்கு அருகில் இருந்த ஆச்சிரமத்தில் ஓய்வெடுக்கும் வேளையில், புண்டரீகர் பெற்றோருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார்.

அப்போது புண்டரீகர் பெருமையை உலகுக்கு தெரிய வைப்பதற்காக கிருஷ்ணபகவானும் ருக்மணியும் மாறுவேடத்தில் ஆசிரமத்தின் வாயிலில் வந்து நின்று இவரை அழைத்தனர்.

அப்போது மழை பெய்து வெளியில் சகுதியாக காணப்பட்டது. புண்டரீகர் ஒரு செங்கலை எடுத்து வாசலில் போட்டு “இதில் சற்று நேரம் நில்லுங்கள் நான் எனது பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்து விட்டு வருகிறேன்” என்று கூறி, தனது பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்து விட்டு வெளியே வந்து, அவர்களை இன்முகத்தோடு உபசரித்தான்.

கிருஷ்ண பகவானை காக்க வைத்தமைக்காக கோபம் கொண்ட ருக்மணி, வந்திருப்பவர் கிருஷ்ணர் என்ற உண்மையை புண்டரீகரிடம் கூறினார். அவர் கண்ணீர் ததும்ப அவ்விடத்திலேயே விழுந்து அவரை வணங்கி,

“மன்னிக்க வேண்டும் பகவானே, எனது பெற்றோர் எனக்கு முதல் தெய்வம். எனவே அவர்களுக்கான பணிவிடைகளை முடித்துவிட்டே உங்களை வரவேற்கிறேன்.” என்று கூறுகின்றார்.

கிருஷ்ண பகவான் “உனது இச்செயலைக் கண்டு நாம் வியந்து உனக்கு என்ன வரம் வேண்டும்.” என்று வினவுகிறார். புண்டரீகர் “பகவானே! தாங்கள் எமக்கு காட்சி அடைத்த இவ்விடம் உங்களுக்குரிய புனித தலமாக திகழவேண்டும்.” என்று கூறுகிறார்.

கிருஷ்ணபகவான் ஒப்புக்கொள்கிறார். இதன் விளைவாகவே பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயம் அமைக்கப்பட்டது.

அமைப்பு

இவ்வாலயத்திற்கு நான்கு வாயில்கள் காணப்படுகின்றன. சந்திரபாகா ஆற்றை நோக்கி அமைந்துள்ள கிழக்குவாசல் நாமதேவர் வாசல் என அழைக்கப்படுகிறது.

இவ்வாயிலில் கையில் தம்புராவுடன் இறைவனின் இசையில் மூழ்கியிருக்கும் நாமதேவரின் பித்தளை சிலை இவ்வாயிலில் காணப்படுகிறது.

பிரதான வாயிலின் வழியே உள்ளே செல்கின்ற போது, கருவறைக்கு அழைத்து செல்லும் ஓர் மகா மண்டபம் காணப்படுகிறது. இங்கு தத்ராதையரையும், கணபதியையும் தரிசிக்கலாம்.

இதனை தவிர இன்னுமொரு அழகான மண்டபமும் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் 64 மகாபாரத காட்சிகளை சிற்பங்களாக செதுக்கி உள்ளனர்.

சிறப்புகள்

இவ்வாலயத்தில் மகாபாரத காவியத்தை எழுத்து வடிவில் எழுதிய மிகவும் பழமையான புத்தகம் ஒன்று கண்ணாடிப் பெட்டியில் எல்லோரும் பார்க்கும் வகையில் வைத்துள்ளனர்.

இந்த புத்தகம் அச்சில் இல்லாமல் எழுத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாலய பக்தர்கள் எவ்வித பேதமின்றி விட்டல பகவானின் அருகில் சென்று அவரது திருப்பாதங்களில் தலையை வைத்து வணங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்விக்கிரகம் சாலிக்கிரம கல்லால் உருவாக்கப்பட்டது.

புரந்தரதாஸர், நாமதேவர், துக்காராம், ஞானேஷ்வரர்,சோகாமேளர், சக்குபாய் போன்ற வைணவ அடியவர்கள் இத்தலப் பெருமாள் மீது அபங்கம் எனும் பதிகங்களை பாடி உள்ளனர்.

You May Also Like :
திருமங்கை ஆழ்வார் வரலாறு
பாகம்பிரியாள் கோயில் வரலாறு