உலக வறுமை ஒழிப்பு தினம்

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

உலக வறுமை ஒழிப்பு தினம்அக்டோபர் 17
International Day for the Eradication of PovertyOctober 17

உலக வறுமை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

“உலகில் பெரும் புரட்சிகளை எல்லாம் முடக்கிப்போட்ட கொடும் ஆயுதம் ஒன்று உள்ளது. அதற்கு பெயர் பட்டினி” என்றார் ஒரு ஆங்கிலக்கவிஞர்.

கொடுமையிலும் கொடுமையானது வறுமை என்பர். இந்த பட்டினியை மனிதன் அரவணைக்க காரணமாக இருப்பது வறுமையே. வறுமை மனிதன் வாழும் காலத்தையே நரகமாக்கிவிடும் என்றால் அதுமிகையல்ல.

வறுமை நிலை என்பது உணவு, சுத்தமான நீர், உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புகள், அடிப்படையான மனித அரசியல் உரிமைகள் ஆகிய நிலைகளை உள்ளடக்கியது.

எனவே, வாழ்வியல் பிரச்சினைகள் அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளியாக வறுமை இருக்கிறது எனலாம்.

உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் வறுமை நிலையில் மக்கள் வாழ்கின்றனர். குறிப்பாக அதிகளவு வறுமையில் வாழும் மக்கள் ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

உலக வறுமை ஒழிப்பு தினம்

உலக வறுமை ஒழிப்பு தினம் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னணி

உலகின் முதன் முதலில் 1987ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் வறுமை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, பயம், வறுமை, வன்முறை என்பவற்றினால் மரணித்தவர்களைக் கௌவிக்கும் விதமாக

சுமார் பத்தாயிரம் மக்கள் “டொர்கேட்ரோ”வின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்று கூடி உலகளாவிய ரீதியில் வறுமை நிலையை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினர்.

இதன் பின்னணியில் வறுமை ஒழிப்பின் அவசியத்தை உணர்ந்து ஐக்கிய நாடுகள் சபை உலக வறுமை ஒழிப்பு நாளைப் பிரகடனப்படுத்தியது.

உலக வறுமை ஒழிப்பு தினத்தின் நோக்கம்

இந்த தினம் வறுமையில் வாழும் மக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், வறுமை காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், வறுமையை ஒழித்து, வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

முக்கியமாகப் பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன் 1992 டிசம்பர் 22ல் ஐக்கிய நாடுகள் சபை உத்தியோக பூர்வமாக, அக்டோபர் 17 ஆம் திகதியை உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் உலக நாடுகளில் வறுமை ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வறுமை ஒழிப்பின் முக்கியத்துவம்

மக்களை பசிக் கொடுமையிலிருந்து வெளிக்கொண்டுவர வறுமை ஒழிப்பு முக்கியமானதாகும். வறுமையை ஒழிப்பது மூலமே மக்களின் பசிக்கொடுமையை தீர்க்க முடியும்.

பட்டினிச் சாவை தடுப்பதற்கு வறுமை ஒழிப்பு இன்றியமையாததாகும். உலகின் பல நாடுகளில் பட்டினிச்சாவு தினம் தினம் நிகழ்ந்து வருகின்றது. இதனைத் தடுத்து மனித உயிர்களைப் பாதுகாத்து அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வறுமை ஒழிப்பு இன்றியமையாததாகும்.

வறுமை ஒரு மனிதனின் திறமையை முடக்குகிறது, மனிதர்களது சீரிய சிந்தனைகளை சிதைக்கிறது, கொலை களவு போன்ற சமூக சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றது, நாடுகளில் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது இவற்றினை இல்லாமல் செய்வதற்கு வறுமை ஒழிப்பு முக்கியமானதாகும்.

வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வறுமை நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்வது அவசியமாகின்றது.

அடுத்த தலைமுறைக்கு வறுமை இல்லாத உன்னதமான சூழலை பரிசளிப்பதற்கு அரசுகளும், சர்வதேச நிறுவனங்களும், உலக நாடுகளும் முன்வர வேண்டும்.

You May Also Like :
உலக மக்கள் தொகை தினம்
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம்