உலக மன்னிப்பு தினம்

சர்வதேச மன்னிப்பு தினம்

உலக மன்னிப்பு தினம்ஜூலை 7
Global Forgiveness DayJuly 7

உலகில் தவறுகள் செய்யாத மனிதர்களே கிடையாது. தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பு என்பது உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தினதும் முக்கிய கொள்கையாக இருந்து வருகின்றது.

பிறர் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு மன்னிப்பு அளிப்பது மட்டுமே சிறந்த வழியாகும். மன்னிப்பைத் தேர்ந்தெடுக்கும் போது அது பலவித நன்மைகளை எமக்களிப்பது மட்டுமல்லாது எம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மையளிக்கின்றது.

நாம் ஒருவரை மன்னிக்கும் போது கோபம், வெறுப்பு, மனக்கசப்பு போன்றவற்றை குறைக்க உதவுகின்றது. இது நமது ஒட்டு மொத்த வாழ்விலும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும். எனவே சிறந்த வாழ்க்கையை உருவாக்க மன்னிக்கும் திறனை வளர்த்துக் கொள்வது இன்றியமையாததாகும்.

உலக மன்னிப்பு தினம்

உலக மன்னிப்பு தினம் வரலாறு

உலகளாவிய மன்னிப்பு தினத்தின் வரலாறு டெஸ்மண்ட் டுட்டு (Desmond Tutu) என்பவரிடமிருந்து ஆரம்பமானது எனலாம். 1993ல், டுட்டு தென்னாப்பிரிக்காவில் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

அணிவகுப்பின் போது, மன்னிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் சிந்திக்கத் தொடங்கினார். அணிவகுப்புக்குப் பிறகு, அவர் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் மன்னிப்புப் பற்றி பேசத் தொடங்கினார். மக்கள் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இதுவே மன்னிப்பு பற்றிய அவசியத்தை வெளிப்படுத்திய ஆரம்பம் எனலாம்.

தேசிய மன்னிப்பு தினம் 1994 இல் CECA (கிறிஸ்துவின் தூதர்களின் கிறிஸ்தவ தூதரகம்) மூலம் நிறுவப்பட்டது. இது முதலில் கனடாவில் (கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியா நகரத்தில்) தொடங்கியது.

விக்டோரியா நகரத்தில் இந்த நாளை அறிவிக்கும் ஒற்றைப் பதாகையை தொங்கவிட்டனர். இது உலகம் முழுவதும் பிரபலமடைந்ததால், இது உலகளாவிய மன்னிப்பு தினம் என மறுபெயரிடப்பட்டது.

உலகளாவிய மன்னிப்பு தினம் ஆண்டு தோறும் ஜூலை 07 அன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று உலகளாவிய மன்னிப்பு தினத்தை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக மன்னிப்பு தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

உலகளாவிய மன்னிப்பு தினம் மக்களிடையே நல்லெண்ணத்தை உருவாக்கவும், அவர்களின் வாழ்க்கையில் பல குற்ற உணர்வுகளையும், வலிகளையும் சுமப்பதை மறக்க அனுமதிக்கும் வகையில் நிறுவப்பட்டது.

உலகளாவிய மன்னிப்பு தினம் என்பது பல்வேறு குழுக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்நாள் உலகளாவிய புரிதலும் மன்னிப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கியத்துவம்

மன்னிப்பு என்பது நமது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கும் முக்கியமானது. இது மனக்காயங்களைக் குணப்படுத்தவும், மக்களிடையே வலுவான உறவுகளை உருவாக்கவும் உதவும்.

வாழ்வை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டு செல்வதற்கு மன்னிப்பு முக்கியமானதாகும்.

சில சுகாதார ஆய்வுகள் மன்னிப்பை வழங்க மறுப்பவர்களைக் காட்டிலும், தங்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ மன்னிப்பு வழங்கத் தயாராக இருப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகின்றன.

மன்னிப்பதன் மூலம் கடந்த காலத்தில் நம்மை காயப்படுத்தியவர்களை எப்படி மன்னிப்பது, சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை எப்படி ஏற்படுத்துவது என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம்.

மோதல்களை தீர்ப்பதற்கு வன்முறையற்ற வழிமுறையாக மன்னிப்பு உள்ளது. மேலும் மோதலை ஏற்படுத்தாது தவிர்ப்பதற்கும் மன்னிப்பு இன்றியமையாததாகும்.

கேட்கப்படாத மன்னிப்புக்கள் பல சமயங்களில் பல பேருடைய வாழ்க்கையையே மாற்றி விடுகின்றன. உறவுகளில் விரிசல்களையும் ஏற்படுத்தி விடலாம். மன்னிப்பு என்பது கடந்த காலத்தை மாற்றாவிடினும் எதிர்காலத்தைச் சிறப்பாக்கும்.

எனவே உலகளாவிய மன்னிப்பு என்பது உலகம் முழுவதும் நாம் பரப்ப வேண்டிய முக்கிய செய்தியாகும். ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் மனித குலத்தின் மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.

You May Also Like :
உலக முத்த தினம்
உலக உடன்பிறப்புகள் தினம்