அறிவே அழகு பேச்சு போட்டி

arive azhagu speech in tamil

நம் முன்னோர்கள் பல விடயங்களை நமக்கு சொல்லி தந்து இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மக்களினதும் வளர்ச்சிக்கும் ஆதாரமாய் இருந்துள்ளனர். இவ்வளர்ச்சிக்கு ஒரு விதத்தில் அவர்களின் அறிவே காரணம்.

அந்த வகையில் நான் உங்கள் முன் கூற வந்துள்ள விடயம் அறிவே அழகு என்பதைப்பற்றியும் அதனை வள்ளுவரின் கருத்துக்களை எடுகோள்களாக எடுத்துரைக்கவும் இங்கு வந்துள்ளேன்.

அதற்கு முன் இங்கு வந்திருக்கும் பெரியவர்களே, தாய்மார்களே, தந்தைமார்களே, என் தோழிகளே, தோழர்களே அனைவருக்கும் என் இனிய காலை வணக்கத்தை கூறி என் உரையை தொடர்கின்றேன்.

அறிவு என்றால் என்ன

நம் உள்ளே நமக்கான ஒரு சிந்தனையை செதுக்கிக் கொண்டு இருப்பதே அறிவு எனலாம். இல்லை என்றால் நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது அறிவு எனலாம். அறிவை பற்றி பல அறிஞர்கள் பல கவிஞர்கள் என எடுகோள்களை முன்னிலைப்படுத்தி வைத்துள்ளார்கள்.

அவற்றில் சில மூவாயிரம் ஆண்டு பழமையான நம் தமிழின் பெருமையை எடுத்து உரைத்த திருக்குறளில் அறிவை பற்றி அறிவுடைமை எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் குறளில் திருவள்ளுவர் கூற வருவது. அதாவது இதன் பொருள் யாதாயினும் ஒரு பொருளை யாரிடம் கேட்டாலும் அதன் உண்மையான பொருளை அறிந்துகொள்ள அறிவு தான் பயன்படும் என்பதாகும்.

“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு” இதன் மூலம் திருவள்ளுவர் கூறவருவது நாம் சொல்ல வருவதை எளியமுறையில் பிறருக்கு எடுத்து கூறுவதும் நாம் எளிய முறையில் எடுத்துக்கொள்வதும் அறிவுடைமை என்கிறார்.

“எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு” வள்ளுவர் இதன் பொருளாக உலகம் எவ்வாறு இயங்குகின்றதே அவ்வாறு உலகத்திற்கு ஏற்ற வகையில் நாமும் நடப்பதே அறிவு என்கிறார்.

அழகு என்பது

அழகு என்பது பார்ப்பவர் பார்வையில் உள்ள ஒன்று. அதாவது தவறான புரிதலை நம் பார்வையில் கொண்டுள்ளோம் என்பதை நான் கூறுகிறேன்.

காரணம் எது அழகு? அழகு என்ற உடன் நம் அனைவரும் கூறுவது நம் முகத்தின் அழகு, அணியும் ஆபரணங்களின் அழகு, உடுக்கும் உடையின் அழகு என நிரந்தரமற்ற அழகைப்பற்றியே பேசிக்கொண்டு உள்ளோம். உண்மையான அழகு எது? ஒருவனின் தற்போதைய வளர்ச்சி நிலைக்கு காரணமான அறிவாகும்.

அத்தகைய அறிவின் அழகையும் அறிவின் ஆழத்தையும் புரிந்து கொள்ளவும் யாரும் இல்லை. காரணம் நம் எல்லோர் மனதிலும் உள்ள தேவைய‌ற்ற இச்சையே காரணம்.

இவர்கள் அறிவில்லாத மானிடருக்கு ஒப்படலாம் இதனை “அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” இதன் மூலம் திருவள்ளுவர் கருதுவது அறிவுடையவரிடம் எதுவுமே இல்லை என்றாலும் அறிவு இருப்பதால் எல்லாம் உள்ளவராகவே இருப்பார்கள் ஆனால் அறிவு இல்லாதவர்கள் எல்லாம் இருந்தாலும் அறிவு இல்லாமல் எந்த பயனும் இல்லை என்பதை விளக்குகின்றது.

அறிவின் அவசியம்

அறிவு ஒரு மனிதனிற்கு ஆற்றலை கொடுக்கும் அதே போல் அறிவு ஒரு மனிதனை இரசிக்க கூடியவனாய் மாற்றும். இது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தில் ஒன்றாகும். அத்தகைய அறிவின் அவசியத்தையும் அறிவுள்ளவனே அறிவான். இது திருவள்ளுவரின் கூற்று ஆகும்.

அதன் அடிப்படையில் திருவள்ளுவர் அறிவின் அவசியம் பற்றி சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவையாவன,

“அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்” என்ற குறளின் மூலம் அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும் அதை போன்று பகைவர்களையும் அழிக்க கூடிய அரண் என்றும் திருக்குறளில் கூறுகின்றார்.

“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு” திருவள்ளுவர் இதன் மூலம் கூறும் கருத்து மனதை செல்லும் இடத்தில் எல்லாம் செல்ல விடாமல் நன்மையான வழிகளில் செல்ல விடுவது அறிவு என்பதாகும் என்கிறார். இவ்வாறு இன்னும் பல கூற்றுக்களை திருவள்ளுவர் முன்வைத்துள்ளார்.

எனவே இதன் மூலம் நான் கூறவருவது என்னவென்றால் அறிவு என்பது ஒருவனின் வாழ்க்கையை அழகாக மாற்ற எமக்கு கிடைத்த வழியாகும்.

இத்தகைய அறிவை நாம் மேலும் மேலும் வளர்ப்பதால் திருக்குறளில் உள்ளது போன்ற சிறந்த மனிதனாகவும் சிறந்த இரசனைக்குரியவராகவும் நம் பாதையை அமைக்க முடியும்.

ஆகவே அறிவு என்பதே அழகு என்ற கூற்று உண்மை என்பதை கூறி நான் உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன். அனைவருக்கும் நன்றி வணக்கம்.

You May Also Like:

மனிதநேயம் பேச்சு போட்டி

அறம் செய்ய விரும்பு பேச்சு போட்டி