உலக வானிலை தினம்

ulaga vaanilai thinam

உலக வானிலை தினம்மார்ச் 23
World Meteorological DayMarch 23

வானிலை எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறதோ அந்தளவுக்கு தான் மனித இனம் உட்பட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் உயிர் வாழ முடியும்.

21 ஆம் நூற்றாண்டிலும் அதன் பிந்திய காலப்பகுதியிலும் பெரும் சவாலாகப் பதிவாகின்ற விடயமான வானிலை மாற்றமானது இன்றைய தலைமுறைக்குப் பெரும் சவாலாகத் திகழ்கிறது.

குறிப்பாக தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வானிலை மோசமாகும் போது பயணம், சமூகத் திட்டங்கள் மற்றும் நமது பாதுகாப்பைக் கூட வெகுவாகப் பாதிக்கின்றது.

வானிலை எந்தளவிற்குப் பாதுகாப்பாக இருக்கின்றதோ அந்தளவிற்குத்தான் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கும். எனவே வானிலை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு மிகமிக அவசியமான ஒன்றாகும்.

உலக வானிலை தினம்

உலக வானிலை தினம் உருவாக்கப்பட்டதன் வரலாறு

உலக வானிலை அமைப்பு (WMO) 1873 ஆம் ஆண்டில் வானிலை தரவு மற்றும் பரிமாற்றத்திற்கான ஒரு நிறுவனமாக அமைக்கப்பட்டது. இது அரசு சாராத அமைப்பான சர்வதேச வானிலை அமைப்பிலிருந்து உருவானது.

இவ்வமைப்பானது 193 ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டதொரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.

மார்ச் 23, 1950 அன்று உலக வானிலை அமைப்பு மாநாட்டின் ஒப்புதலால் நிறுவப்பட்ட WMO வானிலை (வானிலை மற்றும் காலநிலை), செயல்பாட்டு நீரியல் மற்றும் புவி இயற்பியல் அறிவியலுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அமைப்பாக மாறியது.

உலக வானிலை அமைப்பு (WMO) இன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது.

1961 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பொன்மொழியுடன் அனைத்து நாடுகளிலும் வானிலை அமைப்பு சிறப்பு அமைப்பாக தொடங்கப்பட்ட நாளான மார்ச் 23 ஆம் திகதியை உலக வானிலை தினமாகக் கொண்டாடி வருகின்றன.

உலக வானிலை தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

ஓர் இடத்தின் காலநிலை இன்னோர் இடத்தின் வானிலையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதனால் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய காலநிலை இடைவேளையைச் சீராகப் பராமரித்தல் அவசியமாகின்றது.

இதனைக் கருத்திற் கொண்டு கால நிலை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவற்காகவும், அதன் முக்கியத்துவத்தினை உணர்த்துவதனை நோக்காகவும் கொண்டு உருவாக்கப்பட்டது.

மேலும் பூமியின் வளிமண்டலமும், மனித நடத்தையும் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளது என்பதை நினைவூட்டும் வகையிலும், பூமி எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து உலகளாவிய ரீதியில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போதைய வானிலை குறித்து அறிந்து கொள்ளவும் மற்றும் அவற்றின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பயன்படும் வானிலை நிலவரங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக வானிலை தினம் முக்கியத்துவம்

சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைகளின் இன்றியமையாத பங்களிப்பை வெளிப்படுத்துவது இன்றியமையாததாகும்.

வானிலை, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

அதே போல் வானிலைச் செய்திகள், பூமி வெப்பமடைதல், பனிக்கட்டி உருகுதல், காற்று மாசுபடுதல், ஓசோன் படலம் பாதிப்பு, புயல் அறிவிப்பு, மழை வெள்ளம், கடல் நீர் சீற்றம், சுனாமி அறிவிப்பு, இயற்கைப் பேரழிவுகள் போன்ற பல்வேறு தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள வானிலை ஆய்வு மையம் முக்கிய பங்காற்றுகின்றது.

மீனவர்கள், கடற் பயணிகள், விமானப் பயணங்கள் யாவும் வானிலை அறிக்கையை நம்பியே உள்ளன. ஏன் மனிதனது அன்றாட வாழ்க்கையே வானிலையை நம்பித்தான் உள்ளன என்றால் அதுமிகையல்ல.

You May Also Like :
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் கட்டுரை
உலக வானொலி தினம்