நான் ஒரு மகிழுந்து கட்டுரை

பயணம் செய்வதற்கு பல வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன அதனுள் மகிழுந்து முக்கியமானது. அந்த வகையில் ஒரு கற்பனை எண்ணத்தில் இந்த “நான் ஒரு மகிழுந்து கட்டுரை” பதிவு அமைகின்றது.

மகிழுந்து என்பதன் பொருள் மகிழ்ச்சியைத் தரக்கூடிய “தானுந்து” என்பதுவாகும். ஆங்கிலத்தில் கார் (car) என்று அழைக்கப்படுகின்றது. இது இன்று பொதுவாக மகிழுந்து என்பதை விட கார் என்றே அனைவராலும் அறியப்படுகின்றது.

நான் ஒரு மகிழுந்து கட்டுரை – 1

மனித வாழ்க்கையின் முக்கியமான செயற்பாடாக விளங்குவது பயணம் செய்தல். மனிதர்கள் தமது நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்ள ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போக்குவரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

போக்குவரத்தை இலகுபடுத்துவதற்கு பல்வேறுபட்ட போக்குவரத்து சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நான் ஒரு மகிழுந்து ஆவேன். ஜப்பான் நாட்டிலுள்ள மிகப்பெரிய தொழிற்சாலையொன்றில் உருவாக்கப்பட்ட நான் வெவ்வேறு பாகங்களாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டேன்.

இந்தியாவின் பிரபலமான தொழிற்சாலை ஒன்றில் வைத்து பாகங்கள் பொருத்தப்பட்டு அழகிய மகிழுந்தாக உருமாற்றம் செய்யப்பட்டேன். வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களால் வண்ணம் பூசப்பட்டிருந்தேன்.

பார்ப்பதற்கு அனைவரையும் கவரும் வண்ணம் காட்சி அறையொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்னை செல்வந்தர் ஒருவர் அவரது பிரத்தியேக தேவைக்காக கொள்வனவு செய்தார்.

அன்றிலுருந்து இன்றுவரை அவரது பங்களாவில் எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நான் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றேன். என்னை சுத்தம் செய்வதற்கென ஒருவரும், ஓட்டுவதற்காக சாரதியொருவரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

நாளாந்தம் என்னை சுத்தம் செய்து சிறு தூசியும் அண்டாமல் பார்த்துக் கொள்கின்றனர். தினமும் அவரது அலுவலகத்திற்கு என்னிலே பயணம் செய்கின்றார். அதுமட்டுமின்றி விடுமுறை நாட்களில் அவரது குடும்பத்திலுள்ள அனைவரையும் ஏற்றிக் கொண்டு ஊரைச் சுற்றி வருவது அவரது பொழுதுபோக்காகும்.

அனைவரும் ஆனந்தத்துடன் என்மேல் சவாரி செல்வது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தரும். அவர்களின் ஆடம்பரத்தையும் செல்வச் செழிப்பையும் பறைசாற்ற அதிக பணம் கொடுத்து என்னை வாங்கியதால் அவனைவரிடமும் என்னைக்காட்டி பெருமையாக பேசிக் கொள்வர்.

நான் ஒரு மகிழுந்து கட்டுரை – 2

மனிதர்களது போக்குவரத்தை இலகுபடுத்தக் கண்டுபிடிக்கப்பட்ட போக்குவரத்து சாதனங்களான பேரூந்து, புகையிரதம், விமானம், முச்சக்கரவண்டி, மோட்டார் வண்டி போன்ற வரிசையில் நான் ஒரு மகிழுந்து ஆவேன்.

நான்கு சக்கரங்களைக் கொண்ட நான் என் சக்கரங்களைக் கொண்டு வீதிகளில் சுற்றித்திரிவேன். என்னால் பறக்கவோ நீந்தவோ இயலாது. பொதுவாக எரிபொருட்சக்தியைக் கொண்டும், மின் சக்தியைப் பயன்படுத்தியுமே நான் இயங்குவேன்.

தற்காலத்தில் சூரியசக்தியை பயன்படுத்தி இயங்கக் கூடியவகையிலும் என்னை தயாரித்துள்ளார்கள். நவீன கண்டுப்பிடிப்புக்களின் உச்சத்திற்கு நான் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகின்றேன்.

ஆரம்பத்தில் நீராவி இயந்திரத்துடன் கூடியவனாகவே நான் உருவாக்கப்பட்டேன். நாட்கள் செல்ல செல்ல சிறிது சிறிதாக உருமாற்றம் பெற்று இன்றைய நிலையை அடைந்துள்ளேன்.

வெறுமனே போக்குவரத்து செய்வதற்காக உருவாக்கப்பட்ட என்னுள் தற்போது வெப்ப நிலையை மாற்றும் வசதி, பாடல்கள் கேட்கும் வசதி போன்ற பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதனைத் தவிர எந்தளவிற்கு நான் நன்மை பயப்பவனாக இருக்கின்றேனோ அந்தளவிற்கு என்னால் சில தீமைகளும் உண்டு. அதிவேகமாகவும் கவனயீனமாகவும் என்னை ஓட்டும் போது பாரிய விபத்துக்கள் ஏற்படும்.

அந்த விபத்துக்களில் பொருட்சேதம் மட்டுமின்றி உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனைத்தவிர மது அருந்திவிட்டு என்னை ஓட்டி என்னைக் காயப்படுத்துவோரும் உள்ளனர்.

எனவே மிகுந்த அவதானத்துடன் என்னை ஓட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. அத்துடன் இருக்கைப் பட்டி அணிவதும், வீதி ஒழுங்கு விதிகளைப் கருத்தில் கொண்டு பயணம் செய்வது அவசியமாகும்.

என்னுடன் பயணிக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் அனைவரும் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுதல் ஆகும்.

You May Also Like:

நான் ஒரு வானூர்தி கட்டுரை

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை