மனிதநேயம் பேச்சு போட்டி

Manithaneyam Speech In Tamil

இந்த பதிவில் சக மனிதர்கள் படும் இன்னல் கண்டு இரக்கம் கொள்கின்ற “மனிதநேயம் பேச்சு போட்டி” பதிவை காணலாம்.

மனிதநேயம் பேச்சு போட்டி

இந்த உலகத்தில் மிக உயர்ந்தது மனிதனின் சிறு இதயம் தான் அதில் இருந்து வருகின்ற அந்த அன்பு தான் மனிதநேயம் என்று சொல்லப்படுகின்றது.

முகவரி தெரியாத இடங்களில் முன் பின் தெரியாத மனிதர்களிடத்து இருந்து கிடைக்கின்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, ஒற்றை புன்னகை, சின்ன உதவி, ஆதரவான வார்த்தைகள் இவை தான் மனிதநேயம் என்று கூறலாம்.

இந்த மனித நேயம் என்ற ஒன்று இருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கின்றது. அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பது தான் உயர்வான செயல். மனிதநேயத்தோடு இருக்க வேண்டுமாயின் நாம் பணக்காரனாகவோ உயர்ந்த அறிவுடையவர்களாக இருக்க வேண்டியதில்லை.

அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அன்பு இருந்தாலே போதுமானது. கடவுள் இங்கே பல மனிதர்களை படைத்திருக்க ஒரு காரணம் இருக்கின்றது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அன்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்.

சக மனிதர்கள் படும் இன்னல் கண்டு இரக்கம் கொள்கின்ற அந்த மனம் இருக்கின்றதல்லவா அது தான் கடவுள் என்பார்கள்.

வாழ்கின்ற அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் சமாக இங்கே வாழ வேண்டும் என்று நினைப்பது தான் இந்த உலகில் உயர்ந்த சிந்தனையாக இருக்க முடியும்.

இதனையே திருவள்ளுவர் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்று கூறுகின்றார்.

இந்த உயரிய மனித நேயத்தினை தான் இங்கு எல்லா சமயங்களும் கற்பிக்கின்றன. மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் மனிதநேயம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். இன்றைய கால கட்டத்தில் மனிதநேயம் என்பது மிகவும் அரிதாகி விட்டது.

பாரதியார் சொன்னதை போல “மனிதர் நோக மனிதர் வாழும்” கலி காலமாக இன்று மாறிவிட்டது. அடுத்தவர்களுடைய துன்பத்தில் குளிர்காய்கின்ற மனித நேயமற்ற மிருகங்கள் இன்று வாழ்கின்றன.

ஏழைகளின் கண்ணீர் சிந்துகின்றனர். பணக்காரர்களோ மிகவும் மகிழ்வாக வாழ்கின்றனர். அதிகாரம் உடையவர்கள் பண பலம் மிக்கவர்கள் எல்லா வசதிகளையும் தாமே அனுபவிக்கின்றனர்.

இவ்வாறு பலர் வேதனையோடு இங்கே காலத்தை கழித்து கொண்டிருக்கின்றமை மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது.

இன்று நாடுகள் எங்கும் யுத்தங்களும் கலவரங்களும் தோன்றுகின்றன. ஏராளமான இழப்புக்கள் ஏற்படுகின்றன. இந்த நிலைகள் மாறவேண்டும். இந்த உயரிய மனிதநேயத்தை தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.

அன்பே சிவம் என்கின்றது இந்து மதம். அடுத்தவர்களை உன்னை போல நேசி என்கிறார் இயேசு கிறிஸ்து. பல ஞானிகளும் அறிஞர்களும் இந்த உலகத்தில் மனிதநேயம் என்கின்ற உயர்ந்த ஜீவகாருண்யத்தை போதித்து சென்றிருக்கின்றனர்.

ஆகவே நாம் மனிதத்தை மதித்து வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். இங்குள் எல்லா மனிதர்களும் மனிதநேயத்துடன் வாழ்வார்களேயானால் இங்கு யாரும் கண்ணீர் சிந்தவேண்டி இருக்காது. எல்லோரும் மகிழ்வாக இங்கே வாழலாம்.

மனிதர்களை நேசிப்போம் இங்குள்ள புல், பூண்டு, பறவைகள், மிருகங்கள் என இந்த இயற்கையையும் நாம் நேசிப்போம்.

இந்த உலகில் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்கு தெரியாத கடவுளை வழிபடுவதும் வீணாகும். நல்ல மனிதர்களாக மனிதநேயம் உள்ளவர்களாக நாம் எப்போதும் வாழ வேண்டும்.

அதுவே நமது மேன்மைக்கு துணையாக இருக்கும் மனிதநேயம் எப்போதும் மனிதர்களை மிக அழகானவர்களாக மாற்றும் மனிதம் காப்போம் மகிழ்வாக வாழ்வோம்.

You May Also Like:

வீரபாண்டிய கட்டபொம்மன்