உணவின் முக்கியத்துவம் கட்டுரை

unavin mukkiyathuvam katturai

இந்த பதிவில் “உணவின் முக்கியத்துவம் கட்டுரை” பதிவை காணலாம்.

உணவினை வீணாக்காமல் சிரத்தையோடு பாதுகாத்து அனைவரும் பசியின்றி வாழ ஆவன செய்ய வேண்டும்.

உணவின் முக்கியத்துவம் கட்டுரை

உணவின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உணவு மூலங்கள்
  • சத்துக்கள்
  • உணவை விரயம் செய்வதின் விளைவுகள்
  • உணவு பாதுகாப்பு
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகத்தில் மனிதன் நிலைபெற்று உயிர் வாழ உணவு மிகவும் அவசியமாகும். மனிதனுடைய வாழ்வே பசியை போக்கி கொள்ளவே தினமும் ஓடி கொண்டிருக்கின்றது.

நாம் உண்ணும் உணவில் இருந்து எமது உடலுக்கு தேவையான சக்தி பிறப்பிக்கப்படுகின்றது. இதன் மூலமாக தான் எமது உடல் இயங்கி கொண்டிருக்கின்றது.

இத்தகைய உணவு எவ்வளவு முக்கியமானது என்பதனை இக்கட்டுரையின் வாயிலாக நாம் காணமுடியும்.

உணவு மூலங்கள்

நாம் அன்றாடம் மூன்று வேளைகள் உணவானது உண்கின்றோம். இந்த உணவு எங்கிருந்து வருகின்றது என்று சிந்தித்திருக்கின்றோமா?

தாவரங்களில் இருந்து பழங்கள், காய்கள், கிழங்குகள், குழைகள், தளைகள், தானியங்கள் போன்றனவும் விலங்குகளில் இருந்து இறைச்சி, பால், முட்டை போன்றனவும் எமக்கு உணவாக கிடைக்கின்றது.

ஆரம்ப காலங்களில் வேட்டையாடி தனது உணவை பெற்று கொண்ட மனிதன் பிற்காலத்தில் பயிர்ச்செய்கை மற்றும் விலங்கு வளர்ப்பில் ஈடுபட்டு தனக்கான உணவை தானே உருவாக்க ஆரம்பித்தான்.

சத்துக்கள்

உணவுகளை எடுத்து கொள்வதனால் தான் எமது உடலின் வளர்ச்சி, இயக்கம் ஆகியவற்றுக்கான ஊட்டச்சத்துக்கள் எமக்கு கிடைக்கின்றன.

அதாவது மாச்சத்து, புரதம், கொழுப்பு, கனியுப்புக்கள், விற்றமின்கள் போன்ற சத்துக்களை உணவுகள் கொண்டிருக்கின்றன. இறைச்சி, மீன், முட்டை, பால் போன்றன அதிகம் புரதம் நிறைந்தவை. பழங்கள், மரக்கறிகள் அதிகம் விற்றமின்களை கொண்டவை. தானியங்கள், கிழங்குகள் அதிகம் மாச்சத்தை கொண்டவை.

இந்த அனைத்து சத்துக்களும் மனித உடலுக்கு தேவையான அளவில் கிடைக்க வேண்டியது அவசியமாகும். இவை அனைத்தும் சீரான அளவில் உள்ளடங்கியுள்ள உணவுகளை நிறையுணவுகள் என்று நாம் அழைக்கலாம்.

உணவை விரயம் செய்வதின் விளைவுகள்

இன்றைய காலத்தில் மனிதர்கள் உணவு விடயத்தில் அதிகம் விரயம் செய்கின்றனர். வசதி படைத்தவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவு கிடைக்கின்றது. மாறாக வசதி குறைந்த மக்கள் தினம் தினம் ஒருவேளை உணவுக்கு கூட போராடி வருகின்றனர்.

இவ்வாறு ஒரு தரப்பினர் விரையம் செய்யும் உணவினால் பல ஏழை மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். இதனையே பாரதியார் “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார்.

உணவின் முக்கியம் அறியாது உலகத்தினர் உணவை விரயம் செய்வதனால் பல அனர்த்தங்கள் எமது உலகில் நிகழ்ந்து வருகின்றன.

உணவு பாதுகாப்பு

நாம் எமக்கு தேவையான உணவை எடுத்து கொண்டு ஏனைய உணவை வீணாக்காமல் இருப்பதுவே ஒரு மிகப்பெரிய புண்ணிய செயலாகும்.

சாதாரணமாக ஒரு பயிர் அறுவடையை செய்ய எத்தனையோ மனிதர்கள் கடினமான உழைக்கின்றனர் என்பதனை உணர்ந்து உணவை விரயம் செய்யாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

பல ஆடம்பரமான விருந்துகளில் அதிகளவான உணவுகள் வீணாக கொட்டப்படுகின்றன. இவற்றை பார்க்கையில் மிகவும் வேதனையாக இருக்கின்றது. உணவை பாதுகாத்தால் பலரின் பசியை இது போக்கும்.

முடிவுரை

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்கிறார் திருவள்ளுவர். இவரது வாக்கிற்கிணங்க உணவின் அவசியத்தையும் மேன்மையினையும் இந்த உலகம் உணர வேண்டும்.

உணவினை வீணாக்காமல் சிரத்தையோடு பாதுகாத்து அனைவரும் பசியின்றி வாழ ஆவன செய்ய வேண்டும். இதுவே இந்த உலக நிலைக்கவும் தழைக்கவும் சிறந்த வழியாகும்.

You May Also Like :
மருந்தாகும் உணவுகள் கட்டுரை
உணவு கலப்படம் கட்டுரை