மருந்தாகும் உணவுகள் கட்டுரை

Marunthagam Unavu Katturai

இந்த பதிவில் “மருந்தாகும் உணவுகள் கட்டுரை” பதிவை காணலாம்.

ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே பழகிக் கொள்வது சாலச் சிறந்ததாகும். இக்கட்டுரையில் மருந்தாகும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.

மருந்தாகும் உணவுகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உணவின் முக்கியத்துவம்
  3. உணவே மருந்து
  4. இயற்கை உணவு
  5. ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

உணவே உயிர் வாழ்வதற்குத் தேவையாகவும், உணவே உடல் நோய்க்கு மருந்தாகவும், அவ்வுணவே பல சமயங்களில் உடல் நோயைக் கொடுக்கும் காரணியாகவும் அமைவதுண்டு.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் போது ஒரு மனிதனின் உடலுக்குத் தனியாக மருந்து என எந்தவொரு தேவையும் இருக்காது, அந்த உணவே மருந்தாகும்.

ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே பழகிக் கொள்வது சாலச் சிறந்ததாகும். இக்கட்டுரையில் மருந்தாகும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.

உணவின் முக்கியத்துவம்

மனிதன் உட்பட ஒவ்வொரு ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும், செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.

குறிப்பாக உணவு இல்லையேல் நம் உடல் சோர்வடைந்து விடும். எந்த வேலையையும் பார்க்க இயலாது. மனிதன் நோயின்றி வாழ ஆரோக்கியமான உணவுகள் அவசியமாகின்றது. சிறந்த உணவுகள் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் மருந்துகளாகும்.

உணவே மருந்து

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என வள்ளுவர் கூறுகின்றார்.

அதாவது முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன.

தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாய் கருதப்படுகிறது.

இயற்கை உணவு

இன்று நாகரீகம் என்ற பெயரில் உடம்புக்கு ஒத்து வராத துரித உணவுகளின் பக்கம் சார்ந்து இயற்கை உணவை மறந்து விட்டோம்.

ஆனால் இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இயைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் நலத்தையும் உள நலத்தையும் நாம் பாதுகாக்க முடியும்.

மேலும் இயற்கை பாரம்பரிய உணவுகள் அதிகளவில் ஊட்டச்சத்து நிறைந்தவையாக காணப்படுகின்றன. தனி மனிதர் நலமும், பொதுநலமும் இயற்கை உணவில் இணைந்து கிடைக்கிறது.

ஆரோக்கிய உணவுப் பழக்வழக்கங்கள்

ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கமே எம்மை நோயின்றி வாழவைக்கும் சத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. எனவே நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.

தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்குத் தேவையான முழு சக்தியையும் காலை உணவே அளிக்கிறது.

இரவு மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இரவு முடிந்தவரை அரிசி சாப்பாடைத் தவிர்த்து, கோதுமை, ரவை, ராகி, சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

முடிவுரை

இன்று உணவே மருந்து எண்ணும் நிலை மாறி, மருந்தே உணவு எண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இளம் வயது பருவத்தை கடக்கும் முன்னேயே உடல்பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய், புற்று நோய் என நோய்களை தேடிக் கொள்கின்றோம்.

அதுமட்டுமின்றி எமது உயிர் உடலோடு கூடிய நிலையில் எப்போதும் புறச்சூழலோடு போராடி வருகிறது. அதை வெற்றியடைவதே உடல் நலமாகும். இவைகளில் இருந்து விழிப்போடு செயல்பட்டு ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

You May Also Like :
உடல் ஆரோக்கியம் கட்டுரை
உடல் நலம் காப்போம் கட்டுரை