உடல் நலம் காப்போம் கட்டுரை

Udal Nalam Katturai In Tamil

இந்த பதிவில் ஆரோக்கியமான வாழ்விற்கு உதவும் “உடல் நலம் காப்போம் கட்டுரை” பதிவை காண்போம்.

உடற் பயிற்சி ஒரு நபரின் உடல் நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது.

உடல் நலம் காப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உடல் நலத்தின் அவசியம்
  3. உடல் நலம் பேணும் முறைகள்
  4. உடற்பயிற்சி
  5. உடல் நலக் கேடு
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் வடிவம், தோற்றம் கொடுப்பது உடல் ஆகும். இவ்வுடல் உயிர் தங்கி இருப்பதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. உடலும் உயிரும் ஒன்றை ஒன்று சேர்ந்து விளங்குகின்றன.

நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமே உடலாகும். இந்த உலகில் நீண்ட நாள் வாழ உடல் நலம் பேணல் வேண்டும். செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது.

இதனால் தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எனக் கூறுவர். மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். உடல் நலப் பாதுகாப்புப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உடல் நலத்தின் அவசியம்

தனக்கும், சமூகத்திற்கும், இறைவனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது.

உயர் பதவி வகிப்பவர்கள், கல்வி ஞானம் உடையோர், நாவன்மைமிக்கோர், உழைப்பாளிகள் போன்றோருக்கு ஆரோக்கியம் இல்லையெனில் அவர்களது கல்வியும், உழைப்பும், நாவன்மையும் இவ்வுலகுக்கு பயன்படாமலேயே போய்விடும்.

அதேபோன்று குழந்தைச் செல்வங்கள்தான் நாளைய உலகை வழி நடாத்துபவர்கள். நோயற்ற குழந்தைகள்தான் கல்வியிலும் மார்க்கத்திலும் உயர்ந்து நின்று சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றிட முடியும். இவ்வுலகில் ஆரோக்கியம் இல்லையெனில் திறம்பட செயலாற்ற முடியாது.

உடல் நலம் பேணும் முறைகள்

உடல் நலன் பேணுவதற்கு அக நலன் பேணுவது மிகவும் அவசியமாகும். மன மகிழ்ச்சி இல்லையெனில், தூக்கம் தொலைந்து போகிறது. தூக்கம் இல்லையென்றால் உடல் நலன் கெடும் சூழ்நிலை உருவாகிறது.

எனவே சரியான தூக்கம், தியானம், யோகா போன்றன மனநலத்தை பேணுவதுடன் பழங்களைச் சேர்த்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் பெறும்.

உடற்பயிற்சி

உடற் பயிற்சி ஒரு நபரின் உடல் நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் தினசரி செய்யும் உடற்பயிற்சி உடலிலுள்ள அத்தனை எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும்.

உடல் நலக் கேடு

உடல் நலக் கேடு ஏற்படுவதற்கு பெரும்பாலும் எமது பழக்கவழக்கங்களே காரணமாக அமைகின்றன எனலாம். போதைப் பொருட்களான மது, புகைபிடித்தல், குட்கா வகைகள், போதை மருந்து போன்றவை உடல் நலப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பதே மிகவும் சிறந்ததாகும்.

மற்றும் துரித உணவுப்பழக்கவழக்கங்களும் உடல் நலத்தைப் பாதிப்படையச் செய்கின்றன. குறிப்பாக சாக்லேட், செயற்கை குளிர்பான வகைகள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

முடிவுரை

உடல் ஆரோக்கியமாக இருந்தால் வாழ்க்கை வசந்தமாகும். நல்ல உடல் நலம் தானாக கிடைக்கக்கூடிய ஒன்று அல்ல. அதை நாம் தான் உருவாக்க வேண்டும்.

எனவே உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து உடல் நலன் பேணி நோயற்ற வாழ்வை வாழ்வோமாக!

You May Also Like :
நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை
சமூக நல்லிணக்கம் கட்டுரை