சமூக நல்லிணக்கம் கட்டுரை

Samuga Nallinakkam Katturai In Tamil

இன்று அனைத்து நாடுகளுக்கும் தேவையான ஒன்றான “சமூக நல்லிணக்கம் கட்டுரை” பதிவை காணலாம்.

சிறுவயதில் இருந்தே நல்லிணக்கம் குழந்தைகள் மனதில் கல்வி ஊடாக வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக நல்லிணக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சமூக நல்லிணக்கத்தின் அவசியம்
  3. சமூக நல்லிணக்கம் தரும் நன்மைகள்
  4. சமூக நல்லிணக்கம் எதிர்கொள்ளும் சவால்கள்
  5. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வழிகள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய உலக நாடுகள் பலவற்றிலும் பேசுபொருளாக காணப்படுவது சமூக நல்லிணக்கம் ஆகும்.

ஒரு நாட்டில் வாழும் சமூகங்களிடையில் இனம், மதம், மொழி, குடும்பம், உறவுகள் என்பவற்றில் உண்டாகும் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு என்பவற்றை சமூக நல்லிணக்கம் எனலாம்.

சமூகம் நல்லிணக்கத்துடன் காணப்பட்டால் தான் நாட்டு மக்கள் இனம், மதம், சாதி, மொழி வேறுபாடுகளைக் களைந்து சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ முடியும். அந்தவகையில் சமூக நல்லிணக்கம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சமூக நல்லிணக்கத்தின் அவசியம்

பல்லின சமூகங்கள் வாழும் இந்திய நாட்டில் சமூக நல்லிணக்கமானது மிகவும் அவசியமான ஒன்றாகும். பல் சமூகத்தில் வாழும் மக்கள் பல வேற்றுமைத் தன்மைகளைக் கொண்டு காணப்படுவர்.

இத்தகைய வேற்றுமையிலும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ சமூக நல்லிணக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு சமூகத்தின் புரிந்துணர்வுகள், சமூக வாழ்வு போன்றவற்றை நிலைநிறுத்த சமூக நல்லிணக்கம் முக்கியமானதாகும்.

சமூக மக்களிடையே அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவும் சமூக நல்லிணக்கம் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. ஒரு நாட்டில் உள்நாட்டு முரண்பாடுகள், கலவரங்கள், வன்முறைகளைத் தவிர்க்க சமூக நல்லிணக்கம் அவசியமாகும்.

சமூக நல்லிணக்கம் தரும் நன்மைகள்

சமூகத்தில் சமாதானத்தையும் அமைதியையும் சமூக நல்லிணக்கம் பெற்றுத்தரும். நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் விட்டுக்கொடுப்பு, பரஸ்பர நம்பிக்கை, ஒற்றுமை, சமாதானம், சகிப்புத் தன்மை என்பவற்றை வளர்த்தெடுத்த நல்லிணக்கம் துணை புரிகின்றது.

வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக வாழ சமூக நல்லிணக்கம் வழியேற்படுத்தித் தருகின்றது. ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் வாழ சமூக நல்லிணக்கம் துணைபுரிகின்றது. நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றது.

சமூக நல்லிணக்கம் எதிர்கொள்ளும் சவால்கள்

இன்று சமூக நல்லிணக்கம் பெரும்பாலான நாடுகளில் பெரும் சவால்களுக்கு உட்படுவதனைக் காணமுடிகின்றது.

குறிப்பாக இந்திய தேசமானது பலகோடி மக்களை கொண்ட நாடாகும். இங்கு மதம், இனம், மொழி, சாதி அடிப்படையில் வேறுபட்ட சமூக கட்டமைப்புகளை கொண்டு காணப்படுவதனால் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இங்கு பல மாநிலங்களை கொண்டு காணப்படுவதால் மக்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள் அனைத்திலும் வேறுபாடு காணப்படுகின்றது. இதனால் புரிந்துணர்வுள்ள மக்களாக அனைவரும் செயற்படுவார்கள் எனக் கூறிவிட முடியாது.

வளப்பற்றாக்குறை, வேலைவாய்ப்பு போன்ற பல பிரச்சினைகளால் மக்கள் இடத்தை விட்டு இடம் மாறுவதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சவாலான ஒன்றாகவுள்ளது.

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வழிகள்

இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பர். இதற்கிணங்க சிறுவயதில் இருந்தே நல்லிணக்கம் குழந்தைகள் மனதில் கல்வி ஊடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்களாவார். எனவே இவர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை போன்றவற்றினை சிறுவயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.

அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணமும் பிறப்பால் அனைவரும் சமம் என்பதும் எல்லோர் மனதிலும் எழவேண்டும். சமூகங்களிடையே சமூக நல்லிணக்கம் பற்றிய விழிப்புணர்வுகள், கருத்தரங்குகள் தவறாமல் நடத்தப்படவேண்டும்.

முடிவுரை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதனை அனைவரும் உணர வேண்டும். நம் இந்திய தேசத்தை வளப்படுத்துவது நமது கடமையல்லவா? ஆகவே சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.

You May Also Like :
தாய் நாடு பற்றிய கட்டுரை
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை