உலக புகைப்பட தினம்

சர்வதேச புகைப்பட தினம்

உலக புகைப்பட தினம்ஆகஸ்ட் 19
World Photography DayAugust 19

புகைப்படம் எடுத்தல் என்பது நம் வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது. இது ஒரு கலை வடிவமாகும். கேமராவின் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி இன்று புகைப்படங்களைப் பிடிக்க உதவுகிறது.

செல்ஃபி எடுப்பது முதல் போர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவது வரை மக்கள் பல்வேறு தேவைகளுக்காகப் புகைப்படம் எடுத்தல் பயன்படுகின்றது.

புதிய பரிணாமத்தில் உலகைப் பார்க்க உதவும் மனிதனின் மூன்றாம் கண் கேமரா என்பர். புகைப்படங்கள் கடந்து சென்ற தருனங்களை கண்முன்னே எமக்குக் காட்டுகின்றன.

உலக புகைப்பட தினம்

உலக புகைப்பட தினம் உருவாக்கப்பட்டதன் வரலாறு

உலகில் கேமராவை உருவாக்கும் முயற்சி 13 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. அப்போது கேமரா அப்ஸ்குறா என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறியதும் பெரியதுமாகப் பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மிகப்பெரிய முன்னேற்றம் 1825 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. பிரான்ஸைச் சேர்ந்த Joseph Nicephore Niepce என்பவர் ஒரு கட்டிடத்தின் புகைப்படத்தைத் தனது கருவியில் படமெடுத்தார். ஆனால் அந்த விம்பம் 8 மணி நேரத்திற்குப் பின்னர் அழிந்துவிட்டது.

1839 ஆம் ஆண்டு ஜோன்ஸ் கெர்சல் என்பவர் கண்ணாடியைப் பயன்படுத்தி நெகெட்டிவுக்களை எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இவர்தான் இந்தக் கலைக்கு போட்டோகிராபி (Photography) என்று பெயர் வைத்தார்.

போட்டோகிராபி என்பதற்கு ஒளியின் எழுத்து என்று அர்த்தமாகும். பின்னர் 19ஆம் நூற்றாண்டில் லூயிஸ் டாகுரே (Louis Daguerre) என்பவர் டாகுரோடைப்பைக் Daguerreotype என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தார்.

இம்முயற்சிக்கு பிரெஞ்சு அறிவியல் அகாடமி அனுமதியளித்தது. அதன் பின்னர் 1839 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி டாகுரோடைப்பைக் (Daguerreotype) செயல்பாட்டை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் எனவும் டாகுரோடைப்பின் கண்டுபிடிப்பு உலகிற்கு ஒரு பரிசு (The invention of the daguerreotype was a gift to the world) என்றும் பிரான்ஸ் அறிவித்தது.

எனவே ஆகஸ்ட் 19 ஆம் நாள் உலகம் முழுவதும் புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்

உலக புகைப்பட தினம் புகைப்படக் கலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் நம் வாழ்வில் கேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள புகைப்பட ஆர்வலர்கள் இந்த சந்தர்ப்பத்தில், புகைப்படம் எடுப்பதற்கான கலையை கொண்டாடுகிறார்கள்.

உலக புகைப்பட தினம் புகைப்படம் எடுப்பதை ஒரு பொழுதுபோக்காக அல்லது தொழிலாக தொடர விரும்பும் மக்களை ஊக்குவிக்கும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உலக புகைப்பட தினத்தின் முக்கியத்துவம்

உலக புகைப்பட தினம், கலை, மற்றும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

வரலாற்று நிகழ்வுகளின் ஆவணப்படுத்தலில் இருந்து தனிப்பட்ட நிகழ்வுகளைப் புகைப்படமாக எடுத்து வைப்பது வரை புகைப்படம் எடுத்தல் கலை வடிவத்தைக் கொண்டாட வாய்ப்பளிக்கிறது.

இந்த துறையில் ஆர்வம் காட்டவும், மக்களை ஊக்குவிக்கவும் உலக புகைப்பட தினம் முக்கியமானது.

இந்நாள் புகைப்படக் கலைஞர்களின் ஆர்வத்தையும் திறமையையும் அங்கீகரிக்கும் ஒரு சிறந்த நாளாகும். பல தசாப்தங்களாக உலகை வசீகரித்து வரும் இந்த கலை வடிவத்தைத் தொடர மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். எளிதாக மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் புகைப்படங்களுக்குண்டு.

அதற்குச் சான்றாக 20 ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன.

உதாரணமாக சீன வீரர்களின் இராணுவ பீரெங்கியை எதிர்த்து நின்ற டாங்மான், வியட்னாம் போரை நிறுத்தக் காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994 ஆம் ஆண்டு சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் புகைப்படம் போன்றவற்றைக் கூறலாம்.

இவ்வாறு பல புகைப்படங்கள் வரலாற்றில் மறக்க முடியாதவையாக உள்ளன. உயிரைப் பணையம் வைத்து உயிரினங்களைப் படமெடுக்கும் புகைப்படக் கலைஞர்களையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

அதேபோல கறுப்பு, வெள்ளையில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால் பலரும் பழைய நினைவுகளில் திளைத்துவிடுவர். இவ்வாறு ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கும் என்றால் அதுமிகையல்ல.

You May Also Like :
அறிவியல் வளர்ச்சி கட்டுரை
அறிவியல் ஆக்கங்கள் கட்டுரை