ஒரு ஆசிரியராக எனது இலக்கு கட்டுரை

naan oru aasiriyar aanal katturai

இந்த பதிவில் “ஒரு ஆசிரியராக எனது இலக்கு கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் ஆவார். எனவே சிறுவர்களை நல்ல தலைவரிற்குரிய பண்புகளோடு வளர உதவ வேண்டும்.

ஒரு ஆசிரியராக எனது இலக்கு கட்டுரை – 1

சிறுவர்களை நல்லொழுக்கம் மிக்கவர்களாக வளரத்தெடுப்பதில் பெற்றோர்களிற்கு எந்தளவு பங்குண்டோ அந்தளவிற்கு ஆசிரியர்களிற்கும் பங்குண்டு. அந்த வகையில் சிறுவயது முதலே ஒரு ஆசிரியராக வரவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு.

எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் அன்பானவர்களாக, கண்டிப்பு நிறைந்தவர்களாக, தமக்கு தெரிந்தவற்றை எளிதாக கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள். அவர்களை பார்த்தே எனக்குள் இந்த ஆர்வம் தோன்றியது.

நான் ஒரு ஆசிரியராக வந்தால் இந்த சமூகத்திற்கு நான் செய்ய வேண்டும் என்று நினைப்பவைகளை பட்டியல் இட்டுக் கூறுகின்றேன்.

நான் ஒரு ஆசிரியரானால் மாணவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வேன். அவர்களின் மனதில் உள்ள பிரச்சினைகளை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு இனிமையான ஆசிரியராக திகழ்வேன்.

அதிகமாக கோபப்படாமல் புன்னைகையுடனே மாணவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி ஆலோசனை கூறுவேன். ஒரு ஆசிரியராக எனது மிகப்பெரிய இலக்கு என்னவெனின், நல்லொழுக்கம் மிகுந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புதல் ஆகும்.

மாணவர்களிற்கு அவர்கள் சிறுவயது முதலே கற்றொழுக வேண்டிய நற்பண்புகளை வெறுமனே கற்றுத் தருவது மட்டுமின்றி, நடைமுறை வாழ்க்கையில் அதனை பயன்படுத்த கற்றுத்தருவேன்.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் ஆவார். எனவே சிறுவர்களை நல்ல தலைவரிற்குரிய பண்புகளோடு வளர்த்தெடுப்பது ஒவ்வொரு ஆசிரியரினதும் மிகப்பெரிய சமூகப் பொறுப்பாகும்.

சிறுவர்களை குறுகிய நோக்கம் உடையவர்களாக வளர்தெடுக்காமல், அவர்களை பரந்த நோக்கில் சிந்திப்பவர்களாக, எதிர்காலத்தை எதிர்வுகூறத் தெரிந்தவர்களாக வளர்த்தெடுப்பேன்.

ஒரு ஆசிரியராக நான் அடைய விரும்பும் இலக்குகளை அடைவதனை நோக்கமாக கொண்டு வாழ்நாளெல்லாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

ஒரு ஆசிரியராக எனது இலக்கு கட்டுரை – 2

பணிகளுள் சிறந்தபணியாக ஆசிரியப் பணி கருதப்படுகின்றது. அத்தகைய மகத்தான பணிபுரியும் ஒரு ஆசிரியராக வரவேண்டும் என்பதே என் அவா ஆகும். ஒரு ஆசிரியர் இந்த சமூகத்திற்கு செய்வதற்கென பல்வேறு இலக்குகளும் கடமைகளும் காணப்படுகின்றன.

அதில் ஒரு ஆசிரியராக நான் அடைய விரும்பும் இலக்குகளை விபரிக்கின்றேன். கடினமான பாடங்களை மாணவர்களிற்கு எளிய முறையில் கற்பிப்பேன். பாடங்கள் சரியான முறையில் கற்பிக்கப்படாத போது, மாணவர்கள் கல்வியில் தமது நாட்டத்தை இழக்கின்றனர்.

அதனால் நான் ஒரு ஆசிரியரானால் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் விளக்கிக் கொள்ளும் வரை இன்முகத்தோடு கற்பிப்பேன். ஒரு ஆசிரியராக எனது மிகப்பெரிய இலக்கு சமூகத்தில் வருமானத்தில் பின்தங்கிய மாணவர்களிற்கு என்னால் இயன்ற அளவிற்கு கல்வி அறிவை வழங்க வேண்டும் என்பதாகும்.

கல்வியே ஒரு சமூகத்திற்கு சிறந்த செல்வமாக விளங்குகின்றது. எனவே கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்களிற்கு கட்டணமின்றி மேலதிக வகுப்புகள் எடுப்பதோடு, அவர்களின் கல்வி சார்ந்த வேறு தேவைகளிலும் உதவுவேன்.

அனைத்து மாணவர்களையும் சமமாக நடாத்துவேன். கல்வியில் ஆர்வமற்ற மாணவர்கள் மேல் கூடிய கவனம் எடுத்து, அவர்கள் கல்வியில் அக்கறையுடன் செயற்பட ஊக்குவிப்பேன்.

மாணவர்கள் வெறுமனே ஏட்டுக் கல்வியை மட்டும் கற்பது அவர்களை நல்ல மனிதர்களாக மாற்றாது. பாடசாலை கல்வியோடு சேர்த்து, உலக அறிவையும் பெற்றுத் தருவதே அவர்கள் உலகில் வாழ உதவும்.

எனவே மாணவர்களை அரவணைத்து, உலக நடைமுறைகளையும் வெவ்வேறு கலாசாரப் பிண்ணனிகளையும் எடுத்துரைப்பேன்.

உலகின் தலைசிறந்த மனிதர்களாக போற்றப்படும் தலைவர்களின் வாழ்க்கை கதைகளை சிறுவர்களிற்கு கற்றுத் தருவதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்திட வழிவகை செய்வேன்.

You May Also Like:
நான் ஒரு கரிக்கோல் கட்டுரை
அழகிய மாலை வானம் கட்டுரை