பெற்றோரை மதிப்போம் தமிழ் கட்டுரை

petrorai mathithal in tamil

இந்த பதிவில் சிறுவர்களுக்கான “பெற்றோரை மதிப்போம் தமிழ் கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதனானவன் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ பல்வேறு நற்பண்புகளையும், ஒழுக்க விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பெற்றோரை மதிப்போம் தமிழ் கட்டுரை – 1

மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதற்கிணங்க நம்முடைய வாழ்வில் நாம் முதலில் கண்கண்ட தெய்வங்களாக போற்றப்பட வேண்டியவர்கள் எமது பெற்றோர்களே.

இறைவனை வழிபடுவதைவிட எம்மை பெற்ற தாய் தந்தையை வழிபடுவதே சிறந்தாகும். வாழ்நாளெல்லாம் தமது குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் அவர்களை மதித்து மரியாதை செய்து வாழ்வது எமது தலையாய கடமையாகும்.

குழந்தைகளாக பிறந்த ஒவ்வொருவரும் பெரியவர்களாகி இந்தப் பூமியில் வாழ்வாங்கு வாழ தேவையான நற்பண்புகளையும், நல்லொழுக்கங்களையும் அள்ளி வழங்குகின்றார்கள்.

தாய், தந்தையை மதித்து ஒழுக வேண்டும் என்பதையே காலம் காலமாக இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

“தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்று ஒளவையார் தனது நூலாகிய கொன்றை வேந்தனில் குறிப்பிடுகின்றார்.

பெற்றோர்களிற்கு தகுந்த மரியாதையை அளித்திடல் சிறந்த வாழ்க்கைப் பண்பு ஆகும். பெற்றோர்கள் தாம் ஏழ்மையில் இருந்தாலும் தமது பிள்ளைகள் தம்மைப் போல் இருப்பதனை விரும்புவதில்லை.

தம் பிள்ளைகளை உலகத்தில் சிறந்தவர்களாக உருவாக்க அரும்பாடுபட்டு உழைப்பர். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நாமும் நன்றதாக படித்து அவர்களை பெருமைப்படுத்த வேண்டும்.

பெற்றோரின் சொற்படி கேட்டு நடக்க வேண்டும். அவர்களை அவமானப்படுத்தும் வகையில் அவர்களின் மனதை புண்படுத்தும் வார்தைகளை பேசுதல் கூடாது. அவர்களுடைய அறிவுரைகளை கேட்டால் மட்டுமே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

தம்முடைய இளமைக்காலம் முழுவதும் நமக்காக பாடுபட்ட பெற்றோர்களின் முதுமையில் அவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதியோர் இல்லங்களிற்கு அவர்களை அனுப்பாமல் முதுமையில் அவர்கள் கைபிடித்து, அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து மகிழ்வாக வைத்திருக்க வேண்டும். இது ஒவ்வொரு பிள்ளைகளினதும் தலையாய கடமையாகும்.

பெற்றோரை மதிப்போம் தமிழ் கட்டுரை – 2

மனிதனானவன் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ பல்வேறு நற்பண்புகளையும், ஒழுக்க விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதில் மிகமுக்கியமானதாக கருதப்படுவது, நாம் இவ்வுலகில் பிறப்பெடுப்பதற்கு காரணமாக இருந்த பெற்றோர்களை மதிப்பளித்து நன்றாக பார்த்துக் கொள்ளுதல் ஆகும்.

இதனை ஆதிகாலம் தொட்டு எமது மூதாதையர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். ஔவையார் தனது நூலாகிய ஆத்திசூடியில் “தாய் தந்தை பேண்” என்று குறிப்பிட்டுள்ளார். அதனைத் தவிர கொன்றை வேந்தனில் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று குறிப்பிடுகின்றார்.

தம்மைப் பெற்ற தாய் தந்தையரை எமது முதற்கடவுளாகக் கொண்டு, மதிப்பளித்து அவர்களின் நலன் பேணுதல் அவசியமாகும். தாம் எந்தளவு கடினப்பட்டாயினும் தமது குழந்தைகளை இவ்வூலகம் போற்றும் மாந்தர்களாய் உருவாக்குகின்றார்கள்.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் என கேட்டதாய்” என்று குறிப்பிட்டார் வள்ளுவப் பொருந்தகை.

நாம் நன்றாகப் படித்து சான்றோர்களாக நல்ல அறிவாளிகளாக விளங்கும் போது நம்மை பெற்றதை விட அதிக பெருமை கொள்வாள் நம் தாய் என்பதே அதன் கருத்தாகும்.

பெற்றோர்களை மதித்து அவர்கள் கனவுகளை நனவாக்கி வாழ்வது நமக்கு பெருமையை தேடித்தரும் ஒரு விடயமாகும்.

பெற்றோரின் அறிவுரைகளை கேட்க வேண்டும். அவர்கள் முதுமையில் உடல் உபாதைகளால் அவதிப்படும் போது கூடவே இருந்து முகம் சுழிக்காமல் கவனித்துக் கொள்ளல் வேண்டும்.

எவனொருவன் பெற்றோரின் நல்அறிவுரைகனைளக் கேட்டு, அதன்படி ஒழுகுகின்றானோ, அவன் இவ்வுலகில் உயர்ந்த இடத்தை அடைவான் என்பது நிச்சயமான ஒன்றாகும்.

எனவே சிறுவர்களாகிய நாம் தாய் தந்தையரை மதித்து சிறப்புற்று வாழுவோமாக.

You May Also Like:
நான் ஒரு நூலகம் கட்டுரை
அழகிய மாலை வானம் கட்டுரை