உலக மக்கள் தொகை தினம்

ulaga makkal thogai thinam

உலக மக்கள் தொகை தினம்ஜூலை 11
World Population DayJuly 11

ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக அளவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில்தான் உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

உலக சனத்தொகை வளர்ச்சியானது கி.பி 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னரே வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கின.

2022 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி உலக மக்கள் தொகை 8.029 பில்லியன் ஆகும்.

உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை தினம் உருவாக்கப்பட்டதன் பின்னணி மற்றும் நோக்கம்

உலக சனத்தொகை பற்றிய காத்திரமான உணர்வு 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் உலக மக்கள் தொகை 5 பில்லியனாகக் காணப்பட்டது.

நாளடைவில் மக்கள் தொகையில் அதிகரித்த வளர்ச்சி நிலவும் என்பதைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியமானது (United Nations Population Fund) ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து (United Nations Development Programme) 1989 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதியை உலக சனத்தொகை தினமாக பிரகடனப்படுத்தியது.

இன்று உலகில் 90ற்கும் மேற்பட்ட நாடுகள் இத்தினத்தினைக் கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகரித்த மக்கள் தொகையால் ஏற்படும் பிரச்சினைகள்

அதிகரித்த சனத்தொகை பெருக்கத்தால் பல நெருக்கடிகளை நாடுகள் எதிர்நோக்குகின்றன. இவற்றைக் கட்டப்படுத்துவதற்காகப் பல வழிமுறைகளையும் மேற்கொண்டுவருகின்றன.

மக்களிற்கான வதிவிட பற்றாக்குறை ஏற்படுகின்றது. மக்களுக்கான இருப்பிடங்கள் குறைவாகவும் மக்கள் ஒரு பிரதேசத்தில் நெருக்கடியாக வாழவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகின்றது. இது அதிகளவில் வளர்முக நாடுகளிலேயே நிகழ்கின்றது.

அதிகரித்த சனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப குடியிருப்புக்கள் தேவைப்படுவதால் காடழிப்பு செய்யப்படுகின்றன. இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு அதிகளவிலான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மேலும் அதிகரிக்கும் மக்கள் தொகையினால் வேலைவாய்ப்பு பிரச்சினை ஏற்படுகின்றது. இதனால் பலர் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன் வறுமை நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

வளர்முக நாடுகளினை பொறுத்தவரை சனத்தொகை அதிகரிப்பினால் மக்களிற்கு போதுமான அளவு உணவு கிடைக்க பெறாத நிலை ஏற்படுகின்றது. நீர் பற்றாக்குறைகள் உருவாக்கம், சூழல் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.

மக்கள் தொகை கட்டுப்பாடு

மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதே மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகும். மக்கள் தொகையின் கட்டுப்பாடு என்பது பண்டைய கிரேக்க காலத்திலேயே நிகழ்ந்ததாக சான்றாதாரங்கள் உள்ளன.

குறிப்பாக, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைக்க சில கிரேக்க நகரங்களில் சிசுக்கொலை மற்றும் கருக்கலைப்பு போன்றவையும் கூட ஊக்குவிக்கப்பட்டன.

இன்றும் கூட பல நாடுகள் மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பல நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

சீனா கட்டாய மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, சீன மக்கள் குடியரசின் ஒரு குழந்தை கொள்கை ஆகும். இத்திட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் சீனாவின் மக்கள் தொகை கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது சனத்தொகை கூடிய நாடாக இந்தியா உள்ளது. எதிர்காலத்தில் மோசமான மக்கள் தொகைப் பெருக்கத்தை எதிர் நோக்காமல் இருப்பதற்கு இந்தியா மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு, அரசு நலத் திட்டங்கள், நகர்புறமயமாதல், கருத்தடை சாதனங்கள் போன்ற பலவற்றையும் ஊக்குவிக்கின்றது.

2060-ம் ஆண்டு உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியாக அதிகரித்தால் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் பெரும் அவலத்தை சந்திக்கும் நிலைமை ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு உலக நாடுகளும் நாட்டு மக்களும் விழிப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

You May Also Like :
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம்
உலக முதியோர் தினம்