சுற்றுப்புற தூய்மை கட்டுரை

Sutrupura Thuimai Katturai In Tamil

இந்த பதிவில் சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்விற்கான “சுற்றுப்புற தூய்மை கட்டுரை” பதிவை காணலாம்.

சுற்றுச்சூழல் மாசடைந்தால் அது நேரடியாக மனிதனையும், உயிரினங்களையும் பாதிக்கும்.

சுற்றுப்புற தூய்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுற்றுப்புற தூய்மையின் முக்கியத்துவம்
  3. சுற்றுச்சூழல் தூய்மையின்மையால் ஏற்படும் பாதிப்புக்கள்
  4. சுற்றுச்சூழல் தூய்மை விழிப்புணர்வு
  5. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

சுத்தம் சுகம் தரும். இப்பழமொழி தூய்மையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. மக்கள் அனைவரும் தூய்மையான சூழ்நிலையையே விரும்புகிறார்கள்.

தன்னையும் தன் வீட்டையும் மட்டும் தூய்மையாக வைத்துக்கொண்டால் போதாது. தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றான தூய்மையான சுற்றுப்புறம் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

சுற்றுப்புற தூய்மையின் முக்கியத்துவம்

மனித உயிர் வாழ்க்கைக்கும், மற்றும் ஏனைய ஜீவராசிகளின் உயிர் வாழ்க்கைக்கும் இயற்கை ஆதாரமாகும். இத்தகைய இயற்கையின் பாதுகாப்பிற்கு சுற்றுப்புறத் தூய்மை முக்கியம் பெறுகின்றது.

நோய்கள் அண்டாமல் இருப்பதற்கு சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பது அவசியம். சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால்தான் நாடு தூய்மையாக இருக்கும்.

மனதிற்கு அமைதியை ஏற்படுத்துவதற்கும், மனமகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கும் சுற்றுச்சூழல் தூய்மையாக இருப்பது முக்கியமாகின்றது.

சுற்றுச்சூழல் தூய்மையின்மையால் ஏற்படும் பாதிப்புக்கள்

அபிவிருத்தி நோக்கிய மனித நடத்தையினால் இன்று சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது. சுற்றுச்சூழல் அசுத்தமாக இருந்தால் நோய்க் கிருமிகள் உருவாகி மக்களை பாதிக்கும்.

புதிய புதிய நோய்கள் உருவாவதற்கு வழி ஏற்படும். தொற்று நோய்கள் பரவி உடல் நலத்தைப் பாதிக்கச் செய்துவிடும்.

நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றம், கைத்தொழில் மயமாக்கல், நகரமயமாக்கல், குடித்தொகைப் பெருக்கம் ஆகிய காரணங்களினால் சூழல் பல வகையாக மாசடைகின்றது.

நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்கின்றது. இதனால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை.

பிளாஸ்டிக் பாலிதீன் (நெகிழி) போன்றவைகளினால் நிலம் மாசடைகின்றது. இதனால் விவசாயம் அதிகம் பாதிப்பை சந்திக்கின்றது.

சுற்றுச்சூழல் தூய்மை விழிப்புணர்வு

சுற்றுச்சூழலின் விழிப்புணர்வின் நோக்கமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தி அவர்கள் பங்களிப்புடன், வளமான சுற்றுச்சூழலை எதிர்கால சந்ததியர்களுக்கு விட்டுச் செல்வதாகும்.

சுற்றுச்சூழல் மாசடைந்தால் அது நேரடியாக மனிதனையும், உயிரினங்களையும் பாதிக்கும். நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்ததால் ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்றைய மனிதன் சுற்றுச் சூழலை மாசடையச் செய்து கொண்டிருக்கிறான். சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருந்தால் தான் நாம் மட்டுமன்றி அடுத்த தலைமுறையும் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய எதிரி நெகிழி ஆகும். இவற்றின் உற்பத்தியைத் தடை செய்யவேண்டும் அல்லது குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டுக் கழிவுகள் எதையும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கலக்கக்கூடாது என்பது சட்டம் ஆக்கப்பட வேண்டும்.

வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று தனியாகப் பிரித்து அகற்ற வேண்டும்.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றில் சிறு குழுக்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

முடிவுரை

நம் முன்னோர்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கினார்கள். இதனால் சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணி வந்தனர்.

ஆனால் நாம் இன்று அதனைக் கவனத்தில் கொள்ளாதது சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்தி வருகின்றோம்.

சுற்றுப்புறம் மனித வாழ்வை சுகமானதாக பாதுகாக்கும் காவலன் என்பதனை உணர்ந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

You May Also Like:
சுத்தம் சுகாதாரம் கட்டுரை
சுத்தம் சுகம் தரும் கட்டுரை