உணவு கலப்படம் கட்டுரை

Unavu Kalappadam Katturai In Tamil

இந்த பதிவில் மக்கள் பரவலாக எதிர்கொள்ளும் பிரச்சனையாக உள்ள “உணவு கலப்படம் கட்டுரை” பதிவை காணலாம்.

இலாப நோக்கத்திற்காக சமூக விரோதிகளால் மேற்கொள்ளப்படும் இந்த செயலால் பல கேடான விளைவுகள் ஏற்பட்டுகின்றன.

உணவு கலப்படம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கலப்படத்தினால் ஏற்படும் பாதிப்பு
  3. இந்தியாவில் உணவுக் கலப்படம்
  4. கலப்படத் தடைச்சட்டம்
  5. நுகர்வேர் உரிமை
  6. முடிவுரை

முன்னுரை

உயிர் வாழ்வதற்காகவும் உடல் நலம் பேணுவதற்காகவும் நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இல்லை என்றால் மிகவும் மோசமான விளைவைச் சந்திக்க நேரிடும்.

இலாப நோக்கத்திற்காக பலர் உணவில் கலப்படம் செய்கின்றார்கள். உணவுக் கலப்படம் என்பது ஒரு பொருளில் அதே போன்று பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பதைக் குறிக்கும். இத்தகைய உணவு கலப்படம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கலப்படத்தினால் ஏற்படும் பாதிப்பு

உணவுக் கலப்படத்தினால் ஏற்படும் தீவிர பாதிப்புகளால் பல்வேறு கேடுகள் மற்றும் வியாதிகள் வரக்காரணமாகிறது. உணவு கலப்படம், நுகர்வோரை ஏமாற்றுவது மட்டுமின்றி, பொருள்களின் தரத்தைக் குறைத்து நுகர்வோருக்கு உடல்நலப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

கலப்பட உணவில் கற்களும், மணலும், இருக்குமாயின் அது பற்களையும், குடலின் உட்பகுதியில் இருக்கும் மெல்லிய சதையையும் பாதிக்கும், அழுக்கு இருந்தால் பாக்டீரியா மூலம் வியாதியை உண்டாக்கும் நுண்ணுயிரியை சுமந்து வரும் டால்க் மற்றும் சுண்ணாம்பு பவுடர் நம்மால் ஜீரணிக்கப்படாமல் செரிமான சக்தியை பாதிக்கும்,

தூய்மையற்ற நீர் பல வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் வரக் காரணமாகும், குளிர்பானங்கள் இனிப்புகளில் அனுமதிக்கப்படாத இரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் ஏற்படுகின்றது.

இந்தியாவில் உணவுக் கலப்படம்

இந்தியாவில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் பாதி கலப்படமானவை என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் நடாத்தப்பட்ட 2017 – 2018 ஆம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு குறித்த சோதனையில் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்கப்படும் உணவுகளில் அதிக கலப்படம் செய்யப்படுகின்றமை வெளியாகியுள்ளது.

பால் பொருட்கள், அரிசி, காபிக்கொட்டைகள், தேன், இனிப்புப்பொருட்கள், குளிர்பானங்கள் போன்ற பல பொருட்களில் உணவு கலப்படம் செய்யப்படுகின்றன.

கலப்படத் தடைச்சட்டம்

இந்தியாவில் 1954ம் ஆண்டு கலப்பட தடைச்சட்டம் அமலாக்கப்பட்டது. பிரிவு 12ன்படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம்.

பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது கலப்படம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூ.1000 – 5000 வரை அபராதமும் விதிக்கப்பட சட்டங்களுண்டு.

நுகர்வோர் உரிமை

உணவுப் பொருட்களை வாங்கும் போது அப்பொருள் காலாவதியாகாத மற்றும் பொருளின் தரம் என்பவற்றைப் பார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொதி செய்யப்பட்ட உணவுகளின் தரத்தினை எளிதில் மதிப்பிட முடியாது எனினும் அதன் காலாவதித் திகதியைப் பார்க்க முடியும்.

அதே போல் இந்திய தரச்சான்றிதழ் குறியீட்டினையும் கவனித்து வாங்க வேண்டும். முடிந்தவரை காய்கறிகளை நாம் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்வது நன்மை தரும்.

முடிவுரை

உணவுக் கலப்படப் பிரச்சினையானது நீண்ட காலமாக தொடரும் பிரச்சினையாகும். இதனைத் தடுப்பதற்குப் பல சட்ட நடவடிக்கைகள் இருப்பினும் பல வியாபாரிகள் அதனை கருத்தில் கொள்ளாமல் சுய இலாபத்திற்காக சட்டவிரோதச் செயல்களைச் செய்கின்றார்கள்.

எனவே உணவுக் கலப்படம் தொடர்பா மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்.

உணவுக் கலப்படம் பற்றி அறிந்தால் உடனடியாகப் புகார் செய்ய வேண்டியது எமது கடமை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

You May Also Like:
மின் சிக்கனம் கட்டுரை
அறிவியலின் நன்மைகள் கட்டுரை