மாசாணி அம்மன் வரலாறு

masani amman history in tamil

கிராமிய மக்களால் வழிபடப்படும் ஆகமம் கூறும் ஆலயவழிபாட்டினுள் அடங்காத நாட்டார் தெய்வங்களுள் மாசாணி அம்மனும் ஒருவராக காணப்படுகின்றார்.

சாதாரணமாக எல்லா ஆலயங்களிலும் அம்மன் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். ஆனால் மாசாணி அம்மன் மாத்திரம் எல்லா ஆலயங்களிலும் சயன நிலையில் காணப்படுகின்றார்.

இம்மாசாணி அம்மன் வரலாறு பற்றி பல்வேறு கதைகள் காணப்படுகிறது. அவற்றில் சில வரலாற்று கதைகளை நோக்குவோம்.

கதை 1

பொள்ளாச்சிக்கு அருகாமையில் நன்னூர் எனும் செல்வ செழிப்பான நன்னாட்டினை நன்னன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தனது தோட்டத்தில் மாமரம் ஒன்றினை வைத்து அதனை வணங்கினான்.

எங்கு செல்வதாயினும், எது செய்வதாயினும் முதலில் அந்த மாமரத்தை வணங்கி விட்டே செய்தார். அம்மாமரத்தில் காய்க்கும் மாங்கனிகள் பழுத்த பின் அவற்றை பறித்து பூஜை அறையில் வைத்து வழிபாடு ஆற்றிவிட்டு பின்னர் அதனை பிரசாதம் போல் பக்குவமாக உண்டனர் அரசரின் குடும்பத்தினர்.

வேறு எவரேனும் அம்மரத்தில் கனிகளை பறித்தாலோ, உண்டலோ அவர்களுக்கு அரசன் மரணதண்டனை வழங்கினார்.

நன்னூர் அரசனின் படைத்தளபதியாக கோசர் காணப்பட்டார். அவரது மகளான சயனி மிகவும் அழகு பொருந்தியவளாகவும் வாள்சண்டை, கத்தி சண்டை என்பவற்றில் தந்தையை விட தேர்ச்சிப் பெற்றவளாகவும் காணப்பட்டாள்.

திருமண வயதை அடைந்த சயனிக்கு கோசர் சிறந்த வீரனாக விளங்கிய பக்கத்து நாட்டு மன்னனின் மெய்க்காவல் படைத்தளபதியான மகிழனுக்கு திருமணம் செய்து வைத்தார். இருவரும் சிறப்புற மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

சயனியின் பெற்றோர் கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக காணப்பட்ட அவளுக்கு சடங்குகள், விழாக்கள் செய்து, தாய்வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மகிழன் சயனியை பிரிய மனமில்லாதது வழியனுப்பி வைத்தார்.

பிரசவத்திற்காக தாயில்லம் வந்த சயனியை காண, அவளது சிறுவயது தோழிகள் வந்தனர். அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடிய சயனி, அவர்களுடன் ஆற்றுக்கு சென்று நீராட ஆவல் கொண்டாள்.

கோசர் அதனை மறுக்க தாழ்மையாக கேட்டு சம்மதம் பெற்று ஆற்றுக்கு நீராட சென்றாள்.

ஆற்றிலே நீராடும் வேளை, ஓர் மாம்பழம் ஆற்றுநீரில் மிதந்து வருவதை கண்ட சயனி அதனை பிடித்து உட்கொள்ள தயாரானால், இதனை கண்ட அவளது தோழிகள் அதனை உண்ணாது ஆற்றிலே விட்டுவிடுமாறும், அம்மாம்பழம் நன்னன் மன்னனது தோட்ட மாங்கனி அதனை உட்கொண்டால், அரசர் தண்டனைக்கு ஆளாவாய் என கூறவும், அவற்றை பொருட்படுத்தாது உட்கொண்டாள்.

இதனை கண்ட அரண்மனை காவலர்கள் அவளை கைது செய்து அரண்மனைக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த கோசர் உடனே அரண்மனை நோக்கி பயணமானார்.

அரசரிடம் நிறைமாத கர்ப்பிணியான தனது மகளை மன்னித்து விட்டுவிடுமாறு வேண்டினார். ஆனால் மன்னனோ மனமிறங்கவில்லை. தகவலறிந்த மகிழன் ஓடோடி வந்து மன்னனிடம் தனது மனைவியை விட்டு விடுமாறும், அவளது நிறைக்கு நிகராக பொன்னும் பொருளும் தருவதாக கூறினான்.

அவை எதையும் பொருட்படுத்தாது, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராது மரண தண்டனை வழங்கினான். இதை கண்ட கோசர் அதிர்ச்சி தாங்க முடியாமல் அவ்விடத்திலேயே உயிர் நீத்தார்.

ஆத்திரமடைந்த மகிழன் பெரும்படை திரட்டி நன்னன் அரசனுக்கு எதிராக போர் செய்து நன்னன் அரசனை தோற்கடித்து அவனது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தனது கழுத்தையும் அறுத்து உயிரைவிட்டான்.

இதன் பின்னர் நன்னூரில் கடும் வரட்சி, பஞ்சம் என்பன நிலவி பட்டினி, கொடிய நோய் என்பவற்றால் பல மக்கள் உயிரிழந்தனர். அச்சமடைந்த மக்கள் சயனி இறந்து வீழ்ந்த இடத்தில் மண்ணால் ஒரு உருவம் செய்து அவ்வூரை காக்க கூறி மக்கள் மன்றாடி வேண்டினர்.

பின் சயனியின் கோபம் தணிந்து அவ்வூரை காக்கும் காவல் தெய்வமாக மாறினாள் எனவும் ஆரம்பத்தில் சயனி என அழைக்கப்பட்டு பின்னர் மாசாணி அம்மன் என பெயர் மருவியதாகவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

கதை 2

ராமாயண காலத்தில் கௌசிக மன்னராக இருந்து ரிஷியாக மாறிய விசுவாமித்திரர் தவம் செய்து பல வரங்களைப் பெற்றவர். தன் உடலையே திரியாக்கி எரித்து காயத்ரி மந்திரத்தை போதித்தவர்.

இத்தகைய தவசீலர் ராஜரிஷி என்ற பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்ற பெயருடன் விளங்கினார். இவர் ஒரு முறை கனக மலையில் தவம் செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது தாடகை என்ற இராட்சசி அவரது தவத்திற்கு இடையூறு செய்தாள். தாடகை விரதம் இருந்து பல வரங்களையும் படை பலத்தையும் பெற்றவள். மேலும் ராவணனிடம் இருந்தும் பல சக்திகளைப் பெற்றவள்.

விசுவாமித்திரர் தாடகையை அழிக்க தசரதனின் மகன்கள் ராமர் லட்சுமணனை அழைத்துக் கொண்டு வந்து அவளை அழிக்க வேண்டி கூறுகிறார்.

ராமர் அவளை பெண் என்று யோசித்தாலும்‌ அவள் சகலமும் நிறைந்தவள் அவள் பெண்ணே அல்ல அவள் ஒரு ராட்சசி என்று கூறி அவளை வதம் செய்யுமாறு கூறுகிறார்.

அவ்வாறு வதம் செய்வதற்கு முன்பு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஈஸ்வரியை நோக்கி தவம் செய்கிறார். ஈஸ்வரியும் ராமச்சந்திரமூர்த்தி முன் தோன்றி தாடகையை எவ்வாறு வதம் செய்ய வேண்டும் என்று சில சூட்சுமங்களை கூறுகிறார்.

அதாவது முதலில் தன்னை ஒரு மண்ணால் ஈஸ்வரி போல் உருவாக்கி அந்த மண்ணினால் செய்யப்பட்ட விக்கிரகத்தை அழித்துவிட்டு பிறகு தாடகையை வதம் செய்தல் வேண்டும் என்பது ஆகும்.

அதேபோல் ராமச்சந்திர மூர்த்தியும் ஈஸ்வரியை மண்ணால் உருவாக்கி பூஜை செய்து தாடகையை வதம் செய்யச் சென்று விடுகிறார். அந்த நேரத்தில் மண்ணால் செய்த ஈஸ்வரியை அழிக்க மறந்து விடுகிறார்.

தாடகையை வதம் செய்தபின் ஞாபகம் வந்து அதை அழிக்க முற்படும் போது ஈஸ்வரி தோன்றி அதை அழிக்க வேண்டாம் அது அங்கேயே இருக்கட்டும் என்று கூறுகிறார். அவ்வாறு உருவானதுதான் மாசாணி அம்மன் என இன்னுமொரு சாராரும் கூறுகின்றனர்.

இவ்வாறு பல கதைகள் மாசாணி அம்மன் வரலாற்றுடன் தொடர்புபட்ட பல கதைகள் காணப்படுகின்றது. மாசாணி அம்மன் உக்கிரமான தெய்வமாகவும், தம்மை நம்பி வந்த பக்தர்களை காப்பவளாகவும், காவல் தெய்வமாகவும் காணப்படுகிறாள்.

மாசாணி அம்மன் வழிபாடு பெரும்பான்மையாக தென்னிந்தியாவின் பொள்ளாச்சி மாநிலத்தில் சிறப்பாக இடம்பெறுகிறது. இங்குள்ள கோவிலில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் படுத்து கிடப்பார்.

இந்த அம்மனுக்கு மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டு. 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் படுத்து இருந்து மக்களுக்கு அருள் புரிகிறார்.

You May Also Like :
அழகர் கோவில் வரலாறு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்