மாணவர் ஒழுக்கம் கட்டுரை

olukkam katturai in tamil

இந்த பதிவில் “மாணவர் ஒழுக்கம் கட்டுரை” பதிவை காணலாம்.

எத்தகைய உயரிய செல்வங்களை கொண்டிருந்தாலும் ஒழுக்கமில்லையேல் அவற்றிற்குரிய மரியாதை இழக்கப்பட்டுவிடும்.

மாணவர் ஒழுக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஒழுக்கத்தின் சிறப்பு
  • ஒழுக்கத்தின் முக்கியத்துவம்
  • மாணவர் ஒழுக்கம்
  • ஒழுக்கமின்மையின் தீமைகள்
  • முடிவுரை

முன்னுரை

ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை மனித ஒழுக்கமானது உயரிய நற்பண்பாகப் பேணப்படுகின்றது. மனிதர்கள் இவ்வுலகில் வாழ்தல் பொருட்டு பல்வேறு வாழ்க்கை முறைமைகளும், கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உருவாக்கபபட்டுள்ளன.

அவை ஒழுக்கத்தை பேணி வாழ மனிதனை வழிநடத்துகின்றன. ஒழுக்கமானது மனிதனை இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ உதவி புரிகின்றது.

சிறப்புக்களை தேடித்தரும் ஒழுக்கப்பண்புகளை அறிந்திருப்பது அவசியமாகும். இக்கட்டுரையில் மாணவர் ஒழுக்கம் பற்றி நோக்கலாம்.

ஒழுக்கத்தின் சிறப்பு

“ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்று குறிப்பிடுகின்றது திருக்குறள். ஒமுக்கமானது அனைவருக்கும் மேன்மையையும் நன்மையையும் பெற்றுத்தருவதனால் அது உயிரை விட சிறந்ததாகக் கருதப்படுகின்றது என்பதே அதன் பொருளாகும்.

ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்களே வாழ்க்கையில் சிறந்து விளங்குகின்றனர். ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதவர்கள் சமூகத்தில் பெரும் அவமானத்தையும் துன்பத்தையும் அடைகின்றனர்.

இதனையே திருவள்ளுவர் “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என்று குறிப்பிகின்றார். இதுவே ஒழுக்கத்தின் சிறப்பாகும்.

ஒழுக்கத்தின் முக்கியத்துவம்

ஒழுக்கமானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிற்கும் இன்றியமையாததாகும். இந்த உலகத்தில் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ ஒழுக்கம் மிக அவசியமானது.

ஒரு மனிதன் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும் எனவும், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது எனவும் ஒழுக்கம் கற்றுத் தருகின்றது.

வாய்மை தவறாமை, மரியாதை செய்தல், இன்சொல் பேசுதல், மது அருந்தாமை, கொலை கொள்ளை போன்ற பாதகச் செயல்களில் ஈடுபடாமை, புறங்கூறாமை, உதவு புரிதல், பணிவுடமை போன்ற எண்ணிலடங்கா நல்லொழுக்கப் பண்புகள் காணப்படுகின்றன.

இவற்றையெல்லாம் வாழ்வில் கடைப்பிடிக்கும் போது மனிதன் மனநிறைவான அமைதியான வாழ்க்கையை வாழ்கின்றான்.

மாணவர் ஒழுக்கம்

குழந்தைகளிற்கு சிறுவயதிலிருந்தே ஒழுக்கமானது ஊட்டி வளர்க்கப்பட வேண்டியதொன்றாகும். அவர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக விளங்க சுயஒழுக்கம் மிகவும் அவசியமாகும்.

குழந்தைகளிற்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் பிரதானமான இடமாக விளங்குவது பாடசாலை. பாடசாலைகள் வெறுமனே அறிவை மட்டும் புகட்டாமல் தனிப்பட்ட வாழ்வில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகளையும் கற்றுத்தருகின்றன.

நேரம் தவறாமை, சுகாதாரப் பழக்கவழக்கங்கள், ஆடை ஒழுக்கம், புரிந்துணர்வு, பொறுமை, ஏனையோரின் கருத்துக்களிற்கு மதிப்புக் கொடுத்தல், உதவி புரிதல் போன்ற நல்லொழுக்கப் பண்புகளை வளர்கின்றன.

சமூகத்தில் சிறந்த மனிதர்களை உருவாக்க மாணவர்களை ஒழுக்கம் மிகுந்தவர்களாக வளர்தெடுப்பது அவசியமாகும்.

ஒழுக்கமின்மையின் தீமைகள்

நல்லொழுக்கம் பல நன்மைகளை தேடித்தரும். அவ்வாறே தீயொழுக்கமானது பல்வேறு சங்கடங்களையும், கெடுதல்களையும் தேடித் தருகின்றது. நாம் ஒழுக்கமற்றவர்களாக வாழும் போது சமூகத்தின் மதிப்பை இழந்து அனைவராலும் வெறுக்கப்படுகின்றவர்களாக மாறுகின்றோம்.

எத்தகைய உயரிய செல்வங்களை கொண்டிருந்தாலும் ஒழுக்கமில்லையேல் அவற்றிற்குரிய மரியாதை இழக்கப்பட்டுவிடும். ஒழுக்கம் தவறும் போது குற்ற உணர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் நம்மை ஆட்கொள்ளும்.

மாணவர்கள் தங்களுடைய ஒழுக்கத்திலிருந்து விலகும் போது பாடசாலையில் தமக்குரிய நன்மதிப்பை இழக்கின்றார்கள்.

தீயொழுக்கமானது கொலை, களவு, போன்ற பல்வேறு சமூக விரோதச் செயல்களை அதிகரித்து பாதுகாப்பற்ற சமூகத்தை உருவாக்குகின்றது.

முடிவுரை

ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர்களால் வலியுறுத்தப்பட்டு வந்த நல்வொழுக்கப் பண்புகள் எங்களுடைய வாழ்வியல் பண்புகளோடு இரண்டறக் கலந்துள்ளன.

அவற்றைப் பின்பற்றுவதே எமக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுத்தரும். மாணவராகிய நாம் சிறுவயது முதலே ஒழுக்கப் பண்புகளைப் பேணி நற்பிரஜையை வாழ்வோமாக.

You May Also Like:
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை
ஒழுக்கம் பற்றிய கட்டுரை