இரட்டை காப்பியங்கள் கட்டுரை

Irattai Kappiyam Katturai In Tamil

இந்த பதிவில் ஐம்பெரும் காப்பியங்களில் அடங்கும் “இரட்டை காப்பியங்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய இரண்டும் காப்பியத் தன்மை மிகுந்து தமிழின்பம் நல்கும் நூல்களாக அமைந்துள்ளன.

இரட்டை காப்பியங்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. இரட்டைக் காப்பியங்களின் பிறபெயர்கள்
  5. இரட்டைக் காப்பியங்களின் சிறப்புக்கள்
  6. முடிவுரை

முன்னுரை

கற்பனை வளம், சிந்தனைத் திறன், சுவை உணர்வு, இலக்கிய நயம் ஆகியவை மிக்க ஓர் உன்னதப் படைப்புத்தான் காப்பியமாகும்.

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெரும் காப்பியங்களாக சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்பன அறியப்படுகின்றன.

இதில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும். இவ்விரு காப்பியங்களும் தமிழ்நாட்டைக் கதைக் களமாக கொண்டவையாகும். இந்த இரட்டை காப்பியங்கள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

சிலப்பதிகாரம்

சிலம்பு – அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது சிலப்பதிகாரம். சிலம்பு காரணமாக விளைந்த கதையானதால் சிலப்பதிகாரம் ஆயிற்று.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் “இளங்கோ அடிகள்” என்பவரால் எழுதப்பட்டது. காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும்.

சிலப்பதிகாரத்தின் கதை மாந்தர்களாக கண்ணகி, கோவலன், மாதவி போன்றோர் முக்கியம் பெறுகின்றனர்.

அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும்.

மணிமேகலை

சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும்.

மணிமேகலைக் காப்பித்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் உள்ளன.

எனினும் மணிமேகலை நியாயப் பிரவேசம் எனும் நூலைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இக்காப்பியத்தின் தலைவியான மணிமேகலை சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள்.

இரட்டைக் காப்பியங்களின் பிறபெயர்கள்

சிலப்பதிகாரம் வேறு பெயர்கள்
  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம்
  • முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம்
  • நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  • தமிழ்த் தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்ட காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சிறப்பதிகாரம்
  • பைந்தமிழ் காப்பியம்
மணிமேகலை வேறு பெயர்கள்
  • மணிமேகலைத் துறவு
  • முதல் சமயக் காப்பியம்
  • அறக்காப்பியம்
  • சீர்திருத்தக்காப்பியம்
  • குறிக்கோள் காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
  • கதை களஞ்சியக் காப்பியம்
  • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
  • பசு போற்றும் காப்பியம்

இரட்டைக் காப்பியங்களின் சிறப்புக்கள்

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற சிறப்பை சிலப்பதிகாரம் பெறுகின்றது. பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார்.

இரட்டை காப்பியத்துள் கிளைக்கதைகள் மிகுந்த நூல் மணிமேகலை ஆகும். மனித வாழ்வு செம்மை அடைவதற்காக அறநெறிகளை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டதே மணிமேகலைக் காப்பியமாகும்.

இக்காப்பியமானது உணவிடும் உன்னதப் பணியினை கூறுகின்றது. திருவள்ளுவரை “பொய்யில் புலவன்” எனவும் திருக்குறளைப் “பொருளுறை” என்றும் முதலில் கூறிய காப்பியம்.

முடிவுரை

இலக்கியங்கள், காலம் காட்டும் கண்ணாடியாகும். இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய இரண்டும் காப்பியத் தன்மை மிகுந்து தமிழின்பம் நல்கும் நூல்களாக அமைந்துள்ளன.

இக்காப்பியங்கள் அறக் கருத்துக்களைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த வழியாக திகழ்கின்றன. இவ் அறக்கருத்துக்களைப் பின்பற்றி வாழ்வில் சிறப்போமாக.

You May Also Like:
காப்பியத்தின் தோற்றம் வளர்ச்சி கட்டுரை
சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி கட்டுரை