தாய் பற்றிய கட்டுரை

Thai Katturai In Tamil

இந்த பதிவில் உறவுகளில் உன்னதமான உறவான “தாய் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வாகும். உலகில் தாய்க்கு நிகராக எவற்றையும் ஒப்பிட முடியாது.

தாய் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தாய்மையின் சிறப்பு
  3. தாயன்பு
  4. தாயின் பெருமை
  5. தாயின் தியாகம்
  6. முடிவுரை

முன்னுரை

உலகின் உறவுகளில் முதன்மையானது தாய் உறவு மட்டுமே. உலகின் தாய் என்பவள் இல்லை என்றால் மனிதப் பிறப்பே இல்லை எனலாம். கடவுள் மனித உருவில் இருக்கின்றான் என்றால் அது தாயாக மட்டுமே இருக்க முடியும்.

அன்னை என்ற ஒரு சொல்லிலேயே இவ்வுலகம் அடங்கிவிடும். உலகை, இயற்கையை இறைவன் படைத்து இருந்தாலும் உலகை ஆட்டிப்படைக்கும் மனிதனைப் படைப்பது அன்னையேயாகும்.

தாயின் அன்பு, பாசம், கருணை, தியாகம் இவற்றிற்கு இணையாக எதையும் ஒப்பிட முடியாது. தாய் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தாய்மையின் சிறப்பு

“தாயிற் சிறந்த கோவிலும் இல்லை…” என்ற வரிகள் தாயின் சிறப்பு, புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்ற அனைத்தையும் எடுத்தியம்புவதாக உள்ளது.

தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வாகும். உலகில் தாய்க்கு நிகராக எவற்றையும் ஒப்பிட முடியாது.

ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, வீட்டில் உள்ளோரை பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களினை வகித்தாலும் தாய் என்ற பாத்திரம் தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.

தாயன்பு

இவ்வுலகில் நமக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் நம்மில் அன்பு காட்டினாலும் அது தாய் அன்பிற்கு ஈடாகாது. ஐந்தறிவு படைத்த மிருகங்களிடம் கூட தாயன்பு கொட்டிக் கிடக்கின்றது.

தாயன்பு நம்மிடம் எந்த ஒரு கைமாறும் எதிர்பார்க்காமல் வாழ்நாள் வரை பொழிந்து கொண்டிருக்கும் அதீத நேசம் ஆகும்.

தன் விருப்பு வெறுப்பை மறந்து தன் சேய்க்காக கசப்பேனும் புசித்து, உயிரையே பறிக்கும் பிரசவ வலியைப் பொறுத்து பூமியிலே தன் சேயைப் பெறுகின்றாள் என்றால் அது தாய் அன்பினால் மட்டுமே ஆகும். தாயன்பு போல் உலகில் வேறொன்றுமில்லை.

தாயின் பெருமை

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதும் தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதும் ஆன்றோர் வாக்கு.

தாய் என்பவள் மனிதர்களுக்கு மட்டுமன்றி சகல ஜீவராசிகளுக்கும் முக்கியமானவள். தாயின் அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது.

சமயக்குரவர்களுள் மூத்தவரான மாணிக்கவாசக சுவாமிகள் “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ..” என்றும் “தாயிற் சிறந்த தயவான தத்துவனே” என்றும் தாயை கடவுளுடன் ஒப்பிட்டுப் போற்றுகின்றார்.

தாயின் தியாகம்

தாயின் தியாகத்திற்கு நிகராக எத் தியாகமும் இல்லை எனலாம். தன் பசி தூக்கத்தை இழந்து நமக்காக பாடுபடும் தியாக ஒளிவிளக்கு அம்மா என்றால் அது மிகையல்ல.

தன் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரியாமலேயே அதன் மீது அன்பு கொண்டு தொப்புள்கொடி வழி உணவூட்டி கருவின் நலனுக்காக தன் விருப்பு வெறுப்பைத் துறந்து வாழ்பவள் அன்னையே.

எந்நேரமும் பிள்ளைகளைப் பற்றிய எண்ணி அவர்கள் நலனுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தியாகி தாயே.

முடிவுரை

தாயை என்றுமே உதாசீனம் செய்யக்கூடாது. தாயானவள் தன் உடலில் பாதியை நமக்கு அளிக்காதுவிடின் இவ்வுலகினை நாம் காண இயலாது. எனவே உயிர் தந்த அன்னையை என்றென்றும் போற்றிக் காப்போம்.

You May Also Like:
அன்பு பற்றிய கட்டுரை
உலக மகளிர் தினம் கட்டுரை