மொழி என்றால் என்ன

mozhi enral enna in tamil

மொழி என்றால் என்ன

இறைவனால் இம்மண்ணுலகில் படைக்கப்பட்ட எண்ணற்ற உயிர்களில் மகத்தானதாய் மதிக்கப்படும் உயிரினம் மனிதனாவான்.

மனிதன் முந்திய பழங்காலத்தில் தனது கண்களால் கண்டதை, காதால் கேட்டதை, வாயால் உண்டதை, மூக்கால் முகர்ந்ததை, மெய்யால் உணர்ந்ததை, அறிவால் அறிந்ததை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ள சத்தங்களையும், சைகைகளையும் மட்டுமே பயன்படுத்தி வந்தான்.

காடுகளிலும், மலைக் குகைகளிலும் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்த மனிதன் காலப்போக்கில் நாடோடிகளாய் இடம்பெயர்ந்து சென்று தனக்கென்று ஓர் இருப்பிடத்தையும், இனத்தையும் உருவாக்கிக் கொண்டான்.

முதலில் உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் மாற்றங்கள் பல கண்டான். நாளடைவில் நாகரீக வளர்ச்சி பெற்ற மனிதன் தன்னுடைய எண்ணம், கருத்து, சிந்தனை ஆகியவற்றை அடுத்தவர்களுடன் பகிர்ந்திடவும், அடுத்த தலைமுறைக்கு அதனைப் பதிவு செய்து வைத்திடவும் ஓர் ஊடகமாய் உருவாக்கிக் கொண்டதே மொழியாகும்.

மொழி என்பது மனிதனின் அறிவு நிலைப்பாட்டுள்ளது என்பதற்கான ஓர் அடையாளமாகும்.

மொழி என்றால் என்ன

மனிதன் பேச்சாலும், எழுத்தாலும் தனது கருத்தை பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும்.

அதாவது மனிதன் தனது எண்ணங்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள், தீர்வுகள் என்பவற்றை உருவாக்கவும், பிறருக்கு விளக்கவும் பரிமாற்றுவதற்கும் உபயோகிக்கப்படுகின்ற ஓர் ஊடகமே மொழி ஆகும்.

மொழியின் சிறப்புக்கள்

மனிதர்கள் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் உன்னதமான கலை வடிவம் மொழியாகும். ஐந்தறிவு கொண்ட விலங்குகளையும், ஆறறிவு பெற்ற மனிதர்களையும் வேறுபடுத்துவதும் மொழியாகும்.

மொழி நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றையும், விட்டுச்சென்ற அறிவுக் கருவூலங்களையும் நாம் கண்டறிவதற்கும், நாம் இன்று பெற்றுள்ள அறிவுச் செல்வங்களை நமது வழித் தோன்றல்களை அறிந்து கொள்வதற்கும் மொழி பெருந்துணையாக அமைந்துள்ளது.

மனித வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே மனிதன் தன் கருத்துக்களை பிறருக்குத் தெரிவிக்க முயன்றதன் முக்கிய வளர்ச்சியே இன்றைய மொழியாகும்.

தமிழ் மொழி வரலாறு

உலகத்து மக்கள் தம் கருத்தினை சைகைகளால் உணர்த்திய காலத்தில் இருந்தே தமிழ் மொழி தோன்றி விட்டது.

தமிழ் மொழி எப்போது தோன்றியது என்பதை உலகத்திற்கு தொல்பொருள் ஆய்வாளர்களும் உணர்ந்து உணர்த்திட முடியாத தொன்மை வாய்ந்தது தமிழ் மொழியாகும்.

மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியம், இலக்கணம் பெற்றுள்ளது.

நமது திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் கிமு 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது இன்றையில் இருந்து 2500 ஆண்டுகள் பழமையானது.

தமிழின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாய் பழம்பெரும் இலக்கிய நூலாக கருதப்படும் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் இலக்கிய வடிவில் இருக்கும் ஒரு இலக்கண நூலாகும்.

தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. எனினும் தொல்காப்பியம் கி.மு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்கின்றது.

அதாவது தற்போதையிலிருந்து ஏழாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதனை ஆதாரங்களுடன் வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவினாலும் அதனை ஏற்க பிற ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.

பண்டைய காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாக கருதப்படும் மூன்று தமிழ் சங்கங்களில் இடைச்சங்க காலத்தில் இறுதியில் இந்நூல் எழுதப்பட்டதாக கருதுகின்றனர்.

இதன் அடிப்படையிலும் “இறையனார் களவியல் உரை” எனும் நூலில் காணப்படும் சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும் தொல்காப்பியம் கி.மு ஐயாயிரம் ஆண்டு அளவில் உருவாக்கப்பட்டது என்று நிறுவுகின்றனர்.

You May Also Like:

தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை

தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை