டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு

Doctor Radhakrishnan History In Tamil

இந்த பதிவில் ஆசிரியர் பணியினை வெறும் தொழிலாகப் பார்க்காமல் சேவையாகவே பார்த்து பணியாற்றிய “டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு” பற்றி பார்க்கலாம்.

தனது வாழ்நாளில் பல்வேறு சாதனைகள் படைத்து நாட்டுக்குப் பல பணிகள் ஆற்றியவர் டாக்டர் ராதாகிருஷ்ணர் ஆவார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு

பெயர்:சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
பிறப்பு: செப்டம்பர் 5, 1888
பிறப்பிடம்:சர்வபள்ளி கிராமம், திருத்தணி, தமிழ்நாடு
நாட்டுரிமை: இந்தியா
தந்தை:சர்வபள்ளி வீராசாமி
தாய்:சீதம்மா
தொழில்:அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்
இறப்பு: ஏப்ரல் 17, 1975

அறிமுகம்

ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள். அத்தகைய ஆசிரியர்களை வணங்கி அவர்களின் சேவையை நினைவு கூறும் நாள் தான் ஆசிரியர் தினம்.

அந்த வகையில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் மற்றும் நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் திகதி அன்று இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவர் விடுதலை இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும்⸴ இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இந்தியாவில் கல்வியாளர் என்று அறியப்படுபவர்களுள் முக்கியமானவராகவும்⸴ முதன்மையானவராகவும் திகழ்கின்றார். இவர் மிகச் சிறந்த பேச்சாற்றலும்⸴ வாசிப்புத் திறனும் கொண்டவராவார்.

ஆரம்ப வாழ்க்கை

1888ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி திருத்தணியில் சர்வபள்ளி என்னும் ஊரில் வீராசாமி மற்றும் சீதம்மா என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.

இவரது இளமைக்காலத்தை திருப்பதியிலும்⸴ திருத்தணியிலும் கழித்தார். இவரது தாய்மொழி தெலுங்கு மொழியாகும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை திருவள்ளூரிலுள்ள கௌடி எனும் பள்ளியிலும் அதனைத்தொடர்ந்து திருப்பதியிலுள்ள மிஷன் உயர் பள்ளியிலும் பயின்றார். வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின் சென்னையிலுள்ள கிறிஸ்தவ கல்லூரிக்கு மாறினார்.

தத்துவப் பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதால் தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்து அதில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் தனது 16வது வயதில் தூரத்து உறவுமுறைப் பெண்ணான சிவகாமு என்பவரைத் திருமணம் முடித்தார்.

இத்திருமணம் பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட திருமணமாகும். இவர்களுக்கு சர்வபள்ளி கோபால் என்ற ஓர் ஆண் மகனும்⸴ ஐந்து பெண் குழந்தைகளும் பிறந்தனர்.

இவரின் மகனான சர்வபள்ளி கோபால் இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமானவராவார். 56ஆண்டு கால இல்லற வாழ்க்கையின் பின்னர் இவரது மனைவி 1956ஆம் ஆண்டு இறந்தார்.

கல்விக்கு ஆற்றிய பங்களிப்பு

இயற்கையோடு இணைந்த முறையிலான கல்வி முறையை ஆதரித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மனிதனுக்கு கல்வியில் பெரும் திறன் இருப்பது தான் அவனை விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது என்றார்.

இத்தகையவர் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. 1918ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக கடமை புரிந்தார். அதன்பின்பு கல்கத்தாவில் சிறிது காலம் தத்துவ பேராசிரியராகவும் கடமையாற்றினார்.

மேலைநாட்டுக் கல்வி எளிமையான பழக்கவழக்கங்கள் புத்தக விரும்பி என ராதாகிருஷ்ணன் திகழ்ந்தார்.

1921ஆம் ஆண்டு சென்னை பரிடென்சி கல்லூரியில் உதவி பேராசிரியராகக் கடமையாற்றினார். அதனைத்தொடர்ந்து 1931-ல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உயர்ந்தார்.

பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி புரிந்தார். 1946இல் இவரது கல்வி சேவைகளைப் பாராட்டி “யுனஸ்கோ” விற்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இவர் “சர்” பட்டத்தை தனதாக்கிக் கொண்டவர் என்ற பெருமைக்குரியவர்.

அரசியல் வாழ்க்கை

1938ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தி மொழி பாடம் கட்டாயம் என அறிவித்த போது அதனை முழுமையாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

1965ஆம் ஆண்டு மத்திய ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்ட போது அதனையும் வலுவாக எதிர்த்தார். 1949ஆம் ஆண்டு சோவியத் யூனியன் தூதுவராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுடன் ஒரு வலுவான உறவுக்கு வழிவகுத்தது.

1952இல் இந்தியாவின் முதல் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1954இல் இந்திய அரசு இவருக்கு “பாரத ரத்னா விருது” வழங்கி கௌரவித்தது.

1962ல் இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்த காலப்பகுதியில் இந்தியா சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தது. இதில் இவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பெரிதும் உதவியது.

ராதாகிருஷ்ணன் அவர்களினால் எழுதப்பட்ட நூல்கள்

  • முதன்மை உபநிடதங்கள்
  • இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
  • இந்தியத் தத்துவம் தொகுதி 1 & 2
  • கிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்
  • தம்பதம்
  • பகவத் கீதை விளக்க உரை
  • கிழக்கும் மேற்கும்
  • மகாத்மா காந்தி
  • கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு
  • பிரம்ம சூத்திரம் விளக்க உரை
  • இரவீந்திரநாத்தின் தத்துவங்கள்
  • இந்திய சமயங்களின் சிந்தனை
  • இந்துஸ்தானின் இதயம்
  • சமயமும் கலாச்சாரமும்
  • சமகால இந்திய தத்துவம்
  • சமயமும் சமுதாயமும்
  • உண்மையான கல்வி

மொழிபெயர்ப்பு செய்த நூல்கள்

இது தவிர இவர் “ஆசாரியர்” என்ற நிலைக்கு உயர்ந்ததின் முக்கிய காரணம், அவரால் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களாகும். அவ்வகையில் மொழிபெயர்ப்பு நூல்கள் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் மற்றும் பகவத் கீதை ஆகும்.

இறப்பு

1967ஆம் ஆண்டு ஐனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் சென்னையில் குடியேறினார். பல்வேறு சாதனைகள் படைத்து நாட்டுக்குப் பல பணிகள் ஆற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணர் அவர்கள் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி 1975அம் ஆண்டு தனது 86 ஆவது வயதில் காலமானார்.

ஆசிரியர் பணியினை வெறும் தொழிலாகப் பார்க்காமல் சேவையாகவே பார்த்து பணியாற்றியவராவார். எனவே இவர் போன்ற மனிதர்கள் நம் இந்திய நாட்டிற்குக் கிடைத்த பொக்கிஷம் என்று கூறினால் அது மிகையாகாது.

You May Also Like:

கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாறு
அயோத்திதாசர் வாழ்க்கை வரலாறு