தமிழர் குடும்ப முறை கட்டுரை

tamilar kudumba murai katturai in tamil

சமூகத்தின் அடிப்படையே குடும்பமாகும். அந்த வகையில் தமிழர் குடும்பமானது சிறப்பிடம் பெற்று திகழ்கின்றது. தொன்மைக் காலம் முதல் குடும்ப அமைப்பை உருவாக்கிய தமிழர் பண்பாட்டை பற்றி இலக்கியங்கள் வாயிலாகவே அறிந்து கொள்ள முடியும். தமிழ் சமூகத்தின் அடையாளத்தை வித்திடுவதாக குடும்ப முறைகள் காணப்படுகின்றன.

தமிழர் குடும்ப முறை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தாய் வழிக் குடும்பம்
  • தந்தை வழிக் குடும்பம்
  • தமிழர் குடும்ப முறைமையில் தனிக் குடும்பத்தின் பங்கு
  • விரிந்த குடும்பம்
  • முடிவுரை

முன்னுரை

பண்டைத் தமிழர்கள் குடும்ப முறையாக வாழ்ந்தவை பற்றி சிறந்த முறையில் இலக்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். தமிழர்களின் குடும்ப முறையானது கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குகிறது.

குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் தமிழர்களின் குடும்ப முறை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

தாய் வழிக் குடும்பம்

தமிழர் குடும்ப முறையானது தாய் வழிக் குடும்ப முறையாக காணப்பட்டது. அதாவது சங்ககாலத்தில் சமூகத்தில் தாய் வழியாகவே குல மரபுகள் பேணப்பட்டு வந்தன.

அதேபோன்று திருமணத்திற்கு பின்னர் மனைவியின் இல்லத்தில் கணவன் வாழ்வதே நடைமுறையாக காணப்பட்டதோடு தாய் வழி முறையிலேயே குடும்பத்தின் சொத்துக்கள் பெண்களுக்கு சென்றன என்பதினூடாக தாய் வழிக் குடும்பமாகவும் தமிழர் குடும்ப முறைமை காணப்பட்டது.

பதிற்றுப்பத்தில் வந்துள்ள சேர நாட்டு மருமக்கள் தாய முறை என்பதனை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

தாய் வழிக் குடும்பத்தில் பெண்களே குலத் தொடர்ச்சியாக காணப்படுவதால் பெண் குழந்தைகளை பெற்றெடுப்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்களாகவே திகழ்ந்தனர்.

தந்தை வழிக் குடும்பம்

தாய் வழிக் குடும்ப முறைமை தமிழர்களிடையே காணப்பட்டது போன்று தந்தை வழிக் குடும்ப முறைமையும் தமிழர்கள் மத்தியில் காணப்பட்டதொன்றாகும்.

அந்த வகையில் ஆண்களை மையமாக கொண்ட சமூகத்தில் பெண்கள் தங்களுடைய திருமணத்திற்கு பின்னர் தனது கணவனின் தந்தையகத்திலே வாழ வேண்டும் என்ற முறைமையானது சங்ககாலத்தில் காணப்பட்டு வந்தது.

தமிழர் குடும்ப முறைமையில் தனிக் குடும்பத்தின் பங்கு

தமிழர்களின் குடும்ப முறைமையானது சங்ககாலத்தில் இருந்து பின்பற்றப்படும் ஓர் குடும்ப முறைமையாகும். தமிழர்கள் தனிக் குடும்ப முறையினை பின்பற்றி வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.

அதாவது ஆதிக் குடிகளின் மிக முக்கியமான குடும்ப முறையாக தனிக் குடும்ப முறையே திகழ்கின்றதோடு இது பண்டைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்றதொரு முறைமையாகும்.

விரிந்த குடும்பம்

தமிழர்களில் குடும்ப முறைகளுள் தனிக் குடும்பம் என்ற அமைப்பை போன்று விரிந்த குடும்ப அமைப்பும் காணப்பட்டது.

தனிக் குடும்ப அமைப்பானது காலப் போக்கில் விரிவடைந்து பெற்றோர் ஒருவருடைய தந்தையும் உடன் வாழுகின்ற அமைப்பில் விரிந்த குடும்ப முறையும் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கணவன், மனைவி, மகள் ஆகியோருடன் தந்தை சார்ந்து வாழும் ஒரு குடும்பமாகவே காணப்பட்டது என்பது புறநானூற்றில் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. மேலும் சங்ககால குடும்ப அமைப்பில் நற்றாய், செவிலித்தாய், தோழி என்பவர்களும் முதன்மை இடத்தை பிடித்துள்ளனர்.

முடிவுரை

தமிழர் குடும்ப முறைமையானது தனிக்குடும்பம், விரிந்த குடும்பம், தந்தை மற்றும் தாய் வழி குடும்பம் என சிறந்த குடும்ப முறைமைகளை கொண்டமைந்தவையாக காணப்படுகின்றன என்பது தமிழர்களின் சிறப்பினையே எடுத்துகாட்டுகின்றது.

தமிழர்களின் குடும்ப முறைமையானது இன்றும் பேணப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாகவே உள்ளது.

You May Also Like:

இன்றைய கல்வி முறை கட்டுரை

ஆரோக்கியமான வாழ்க்கை முறை கட்டுரை