மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை

makkum kuppai makkatha kuppai katturai in tamil

இந்த பதிவில் “மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை” பதிவை காணலாம்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு விதமாக பிரிக்கும் இந்த சிறிய வேலையை நாம் எல்லோரும் செய்தால் மிகப் பெரிய நன்மைகள் சூழலுக்கு கிடைக்கும்.

மக்கும் குப்பை மக்காத குப்பை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மக்கும் குப்பை
  • மக்காத குப்பை
  • மக்கும் குப்பையின் விளைவுகள்
  • மக்காத குப்பையின் விளைவுகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதராகிய நாம் முதலில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இயற்கையோடு இணைந்த வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டிருந்தோம். உலகெங்கும் தொழில் புரட்சி ஏற்பட்டதன் பின்னர் நிறைய தொழிற்சாலைகள் அமைந்தும் பெற்றோலிய பயன்பாட்டினாலும் பிளாஸ்ரிக் பயன்பாட்டினாலும் நிறைய கழிவுகள் உண்டாகின.

இவை பிரதானமாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு வகையானவையாக உள்ளன. இவற்றினுடைய பண்புகள், விளைவுகள் போன்றவற்றை விளக்குவதாக இக்கட்டுரையானது அமைந்துள்ளது.

மக்கும் குப்பை

நாம் தினமும் உபயோகப்படுத்தும் காய்கறி வகைகள், பழங்கள், மற்றும் எல்லா விதமான உணவுப் பொருட்களின் கழிவுகள் அதாவது சாப்பிட்டதன் பின்னர் எஞ்சக் கூடிய உணவு வகைகள், இலைகள், தேங்காய் நாறு, சிரட்டை ஓடுகள், அசுத்தமான காகிதங்கள் சுருக்கமாக சொன்னால் எவையெல்லாம் மண்ணில் போட்டவுடன் மக்கிப்போய் மண்ணோடு மண்ணாகி விடுமோ அந்தப் பொருட்கள் மக்கும் குப்பைகளாகும்.

இவற்றை மக்கிப் போக செய்வதில் பிரிகையாக்கிகளான நுண்ணங்கிகளின் செயற்பாடே பிரதான காரணமாகும்.

மக்காத குப்பை

நுண்ணங்கிகளால் பிரிகையடையச் செய்ய முடியாத பொருட்கள் அனைத்தும் மக்காத குப்பைகள் எனப்படுகின்றன.

அனைத்து விதமான பிளாஸ்ரிக் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள், உலோக குப்பைகள், பொலித்தீன் பைகள், கண்ணாடி பொருட்கள் என்பன அனைத்தும் இவற்றில் அடங்கும்.

குப்பைகளில் உள்ள பொருட்களில் பல பொருட்கள் மறு சுழற்சி எனும் முறையில் மீள பயன்படுத்தப்படுகின்றன.

மக்கும் குப்பையின் விளைவுகள்

நாம் வீட்டிலுள்ள குப்பைகளை வெளியேற்றும் போதே அவற்றை மக்குபவை மக்காதவை என வகைப்படுத்தி விட வேண்டும். இவ்வாறு பிரித்து அனுப்பப்படும் மக்கும் குப்பைகளை சேதன பசளையாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதனால் தோட்டங்களுக்கோ அல்லது வயலுக்கோ செயற்கை உரம் வாங்க வேண்டிய செலவினை குறைத்துக்கொள்ளலாம். எமது வீட்டுக் கழிவுகளில் இருந்தே இலவசமாக இயற்கை உரம் கிடைத்து விடுகின்றது. இதனால் விளைச்சல் நல்ல பயன் தருவதோடு இயற்கை உரத்தினால் விளைந்த பொருட்களால் உடல் நலமும் பாதுகாக்கப்படுகின்றது.

மக்காத குப்பையின் விளைவுகள்

மக்காத குப்பைகளில் ஒரு பகுதி மீள் சுழற்சி பாவனைக்கு உட்படுத்தப்பட்டாலும் கூட எஞ்சியவை பெரிய மேடுகளாக தேக்கி வைக்கப்படுகின்றன. இதனால் மண் வளமானது பாதிக்கப்படுகின்றது.

இவற்றை எரிக்கும் போது வளிமண்டலம் மாசடைவதோடு நுரையீரல் சார்ந்த நோய்களுக்கும் காரணமாகின்றன.

கடலில் கொட்டுவதன் மூலமாக கடல் மாசடைவு ஏற்படுவதோடு கடல் வாழ் உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. ஒட்டு மொத்தமாக இயற்கை சூழல் சமநிலையினை குழப்புவதாக இந்த மக்காத குப்பைகள் காணப்படுகின்றன.

முடிவுரை

இந்த மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தொடர்பில் தனிமனிதர் ஒவ்வொருவருக்கும் கடமைகள் சில உள்ளன.

அதாவது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு விதமாக பிரிக்கும் இந்த சிறிய வேலையை நாம் எல்லோரும் செய்தால் மிகப் பெரிய பலன்கள் நமது வீட்டிற்கும் நமது நாட்டிற்கும் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

You May Also Like :
எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை
குப்பை பற்றிய கட்டுரை