எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை

enathu kuppai enathu poruppu katturai in tamil

இந்த பதிவில் எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை பதிவை காணலாம்.

வீடுகளிலும், பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளை கண்டபடி வீசாமல் முறையாக அகற்ற வேண்டும்.

எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • குப்பைகளின் வகைகள்
  • கழிவுப்பொருள் மேலாண்மை
  • நமது பொறுப்பு
  • எனது குப்பை எனது பொறுப்பு
  • முடிவுரை

முன்னுரை

குப்பை என்பது மனிதன் பயன்படுத்திய கழிவுகள் ஆகும். குப்பை எந்த வகையான பொருளிலிருந்தும் கிடைக்கும் வீணான பகுதி ஆகும். குப்பை இன்று சர்வதேச பிரச்சினையாக உள்ளது.

எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தெருக்களில், ஆறு, ஏரி, குளம், குட்டை, கடல் என அனைத்து நீர் நிலைகளிலும் கொட்டிவிடுகின்றோம். இதனால் நம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு மற்ற உயிரினங்களுக்கும் பேரின்னலை விளைவிக்கின்றன.

குப்பைகளின் வகைகள்

திடக் குப்பைகளை நான்கு வகையாக பிரிக்கலாம். இலத்திரனியல் கழிவுகள், சமையல் அறையிலிருந்து வரும் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் என்பவையாகும்.

இவை அனைத்தையும் பிரிக்காமல் ஒரே இடத்தில் கொட்டுவதால் நாட்கள் செல்ல செல்ல இவை ஒன்றாக இணைந்து இவற்றிலிருந்து ஒரு விதமான இரசாயனம் வெளியேறும் இது அந்த இடத்தில் உள்ள நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாதபடி செய்து விடும்.

கழிவுப்பொருள் மேலாண்மை

கழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை சேகரித்தல், கொண்டு செல்லுதல், பாதிப்பில்லாத இடத்திற்கு மாற்றுதல், மீள் சுழற்சிக்கு உள்ளாக்குதல் அல்லது நீக்குதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும்.

கழிவுப் பொருள் நிர்வாகத்தில் திண்ம, திரவ, வாயு கழிவுகளையும் கதிரியக்க கழிவுகளையும் கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஒவ்வொரு வகை கழிவுகளையும் அதற்கேற்ற தனித்துவமான முறைகளில் அகற்ற வேண்டும்.

நமது பொறுப்பு

கழிவுப்பொருள் மேலாண்மையானது அரசாங்கத்தினுடைய கண்காணிப்பில் பல நிறுவனங்களின் கீழ் கட்டண அடிப்படையிலும் இலவசமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

இருப்பினும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது தொடர்பில் சில பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. குறிப்பாக கழிவுப் பொருளினை நாம் வீட்டினுள் சேகரிக்கும் பொழுது அவற்றை வகைப்படுத்தியவாறு நாம் களஞ்சியப்படுத்த வேண்டும்.

அரச நிறுவனங்கள் கழிவுகளை சேகரிக்க வரும்போது அவர்களின் வேலையை இலகுவாக்குவதோடு முறையான கழிவகற்றல் செயற்பாட்டிற்கும் நாம் வழங்கும் சிறந்த ஒத்துழைப்பாகவும் இருக்கும்.

எனது குப்பை எனது பொறுப்பு

கழிவுப்பொருள் மேலாண்மையில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற எண்ணக்கருவானது தற்காலத்தில் பலமிக்க ஒன்றாக வளர்ச்சியடைந்து வருகின்றது. நமது குப்பைகளை நாமே முறையாக அகற்ற வேண்டும் என்பதே இந்த எண்ணக்கருவின் நோக்கமாகும்.

இதை செயற்பாட்டு ரீதியில் நடைமுறைபடுத்த வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன. சமீப காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் அமுலாக்கம் செய்வதை காணலாம்.

இதன் மூலம் பொது இடங்களில் உள்ள குப்பைகளை மாணவர்கள், தன்னார்வ தொண்டர்களை கொண்டு முறையாக அகற்றுவதற்காக தொண்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதை செய்திகள் மூலமாக அறிய கூடியதாக உள்ளது.

முடிவுரை

அரசினால் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டங்களுக்கு பொதுமக்களாகிய நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எமது கடமை ஆகும்.

அத்துடன் வீடுகளிலும், பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளை கண்டபடி வீசாமல் முறையாக அகற்ற வேண்டும். இது நம் நாட்டினுடைய அழகிய சூழலை பாதுகாப்பதோடு எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான சுகாதாரமான ஒரு சூழலை வழங்க உதவியாக இருக்கும்.

You May Also Like :
சுத்தம் பேணுவோம் கட்டுரை
சுற்றுப்புற தூய்மை கட்டுரை