குப்பை பற்றிய கட்டுரை

kuppai katturai in tamil

இந்த பதிவில் “குப்பை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

குப்பைகளை முறையாக அகற்றி எமது இயற்கை சூழலை பாதுகாத்து மனித சமூகத்திற்கு நன்மைகளை பெற முயற்சிக்க வேண்டும்.

குப்பை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வகைகள்
  • நன்மைகள்
  • தீமைகள்
  • கழிவு மேலாண்மை
  • முடிவுரை

முன்னுரை

மனிதனுடைய அன்றாட பயன்பாடுகள், கைத்தொழில் நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளின் போது எஞ்சுகின்ற கழிவுகளையே நாம் குப்பை என்கின்றோம்.

பொதுவாக குப்பை என்பது எவ்விதமான பயன்பாடும் அற்ற தேவையற்ற பொருட்களின் கூட்டு என எம்மில் பலர் நினைக்கின்றோம். அது முற்று முழுதும் தவறான விடயமாகும்.

ஏனெனில் குப்பைகளை கொண்டு சில பயன்களையும் கூட பெற்றுக்கொள்ள முடியும் என்பதே உண்மையாகும். இக்கட்டுரையில் குப்பை பற்றி நோக்கலாம்.

வகைகள்

குப்பைகளை அவற்றின் தன்மைக்கேற்ப பிரதானமாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு வகைப்படுத்தலாம். இவற்றை உலோகக் குப்பைகள், உலோகமற்ற குப்பைகள் எனவும் வகைப்படுத்தலாம்.

மேலும் குப்பைகள் வெளியிடப்படும் துறைகள் சார்பில் அவற்றை வீட்டுக்கழிவுகள், இலத்திரனியல் குப்பைகள், மருத்துவ குப்பைகள், இரசாயன குப்பைகள், கதிரியக்க கழிவுகள், பண்ணைக் கழிவுகள் எனவும் பல வகைப்பாட்டிற்கு உட்படுத்தலாம்.

இவ்வகையான குப்பைகளின் விளைவுகள் நன்மையையும் தீமையையும் எமக்கு தருவது நமது செயற்பாட்டை பொறுத்தவாறே ஆகும்.

நன்மைகள்

குப்பைகளில் மக்கும் குப்பைகளானவை பிரிகையாக்க செயற்பாட்டிற்கு உட்படுத்தப்படுவதன் ஊடாக எமக்கு பல நன்மைகளை தருகின்றன. இக்குப்பைகளை உக்கலடைய செய்வதன் மூலமாக விவசாயத்திற்கு தேவையான சேதன உரத்தினை உற்பத்தி செய்ய முடியும்.

சேதன விவசாய உற்பத்திகள் மனித உடலுக்கு தீங்கற்றவையாகும். மேலும் சேதன உர உற்பத்தியானது பல வேலைவாய்ப்புக்களை உருவாக்க கூடிய பொருளாதார நடவடிக்கையாகவும் காணப்படுகின்றது.

இதன் மூலம் குப்பைகளை குறைத்துக் கொள்ளவும் குப்பைகளை கொண்டு சூழல் நேய விவசாய முறையினையும் மேற்கொள்ள முடியும்.

தீமைகள்

பெரும்பாலும் உண்டாக்கப்படும் தீமைகளுக்கு மக்காத குப்பைகளே காரணமாக உள்ளன. ஏனெனில் இரசாயன பொருட்களின் சேர்வைகளினால் உருவாகிய பிளாஸ்டிக்கானது மக்குவதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளும் கண்ணாடி போன்ற பொருட்கள் மக்குவதற்கு அதற்கும் மேலான காலமும் தேவைப்படும்.

இவை சூழலின் சமநிலையை குழப்புவதாக அமைவதோடு இயற்கை வட்ட செயன்முறைகளையும் பாதிப்படைய செய்கின்றன.

நிலம், நீர், வளி என அனைத்தையும் மாசாக்கத்திற்கு உட்படுத்துகின்றன. மனிதனுக்கு உடலியல் ரீதியில் பல நோய்கள் ஏற்படவும் காராணமாகின்றன.

கழிவு மேலாண்மை

குப்பைகளை அகற்றும் செயன்முறையினை அனைத்து நாடுகளும் பல நிறுவன கட்டமைப்பின் கீழ் செய்து வருகின்றன. இன்னும் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட இதற்காக தொண்டுபணி ஆற்றி வருகின்றன.

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் வெளிவிடப்படும் குப்பைகளை சேகரித்தல், அவற்றை வகைப்படுத்தல், பொருத்தமான இடங்களில் அவற்றை சேமித்தல், கண்காணித்தல், மீள்சுழற்சிக்கு உட்படுத்தல் என்பன கழிவு மேலாண்மையில் உள்ளடங்கியுள்ளன.

மேலும் கழிவுகளை தேக்கி வைக்கும் இடத்தினை தெரிவு செய்தல் கழிவு மேலாண்மையில் சவால் மிக்க ஒன்றாக காணப்படுகின்றது.

முடிவுரை

குப்பைகள் கழிவுப் பொருட்களாக காணப்பட்டாலும் அவற்றை நன்மை விளைவிப்பவையாகவும் தீமை விளைவிப்பவையாகவும் மாற்றுவது எமது கைகளிலேயே தங்கியுள்ளது.

அதற்கு குடிமக்களாகிய எமக்கும் கழிவு மேலாண்மையில் பங்கு உள்ளது என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும். குப்பைகளை முறையாக அகற்றி எமது இயற்கை சூழலை பாதுகாத்து மனித சமூகத்திற்கு நன்மைகளை பெற முயற்சிக்க வேண்டும்.

You May Also Like:
சூழல் மாசடைதல் கட்டுரை
எனது குப்பை எனது பொறுப்பு கட்டுரை