அறிவு பற்றிய கட்டுரை

arivu patri katturai in tamil

இந்த பதிவில் “அறிவு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

அறிவினால் உண்டாகும் ஆற்றலானது எம்மை பிறரிடத்து மேன்மையுடையவராக காட்டக் கூடியதாகும்.

அறிவு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அறிவு பற்றிய கோட்பாடுகள்
  • வகைப்பாடு
  • அறிவுடைமை
  • அறிவின் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

அறிவு என்பது ஒரு பொருள் கோட்பாடு அல்லது நடைமுறை ரீதியான புரிதலைக் குறிக்கும். இது மறைமுகமானதாகவோ அல்லது வெளிப்படையானதாகவோ இருக்கலாம்.

அறிவானது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மரபு சார்ந்த பின்பற்றலாகவோ முறைப்படி திட்டமிட்டதாகவோ அமையலாம்.

உலகப் புகழ் பெற்ற மெய்யியலாளரான பிளாட்டோ அறிவென்பது “நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை” என வரையறை செய்கின்றார். இக்கட்டுரையில் அறிவு பற்றி நோக்கலாம்.

அறிவு பற்றிய கோட்பாடுகள்

அறிவு தொடர்பாக விளக்கங்களை முன் வைக்க பலர் பல கோட்பாடுகளை முன் வைக்கின்றனர். அவற்றுள் சில பின்வருமாறு. “அறிவு என்பது உண்மையை கண்காணிப்பது” என ராபரட் நோஸிக் கூறுகின்றார்.

“சான்றுகளை உறுதிப்படுத்தி நம்பிக்கை பெறுவதற்கு அவசியமானது அறிவு” என ரிச்சர்ட் கிர்க்கம் கூறுகின்றார்.

“ஒரு விடயத்தினை நியாயமானது, உண்மையானது மற்றும் நம்பிக்கையானது என்ற கூறுகளைக் அடிப்படையாக கொண்டு சிந்தித்து ஆராய்ந்து வெளிப்படுத்தல் அறிவாகும்” என கெட்டியர் என்பவர் கூறுகின்றார்.

வகைப்பாடு

அறிவானது பல வகைப்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. சூழ்நிலை அறிவு, இயற்கையறிவு, கல்வியறிவு, எழுத்தறிவு, ஆழ்மனப்பதிவறிவு, பட்டறிவு, மெய்யறிவு என்பவை அறிவினுடைய வகைப்பாடுகளாகும்.

இவற்றினுள் இயற்கை அறிவானது ஒரு குழந்தையானது பிறந்தவுடன் இயற்கையாக கிடைக்கப் பெறும் அறிவினைக் குறிப்பிடுகின்றது.

சூழ்நிலை அறிவென்பது சுற்றியுள்ள சூழலினால் உட்புகுத்தப்படும் அறிவாகும். ஏனைய அனைத்து வகையானவையும் மனிதர்களின் விருப்பத்தினால் அவன் தேடிப் பெற்றுக் கொள்ளும் அறிவாக காணப்படுகின்றன.

அறிவுடைமை

அறிவுடைமை என்பது ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும் சேகரித்துக் கொண்டவற்றை ஆராய்ந்து தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்தி கொள்ளுவது அதாவது வாழ்க்கையில் நேரிடுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப சொந்த அறிவோடு நடந்து கொள்வதாகும்.

அறிவுடைமை தொடர்பாக “திருவள்ளுவர்” அறிவுடையவர்கள், அறிவிலாதவர்கள் என்போரை முரண்நிலையில் அமைத்து அறிவுடையவர்கள் அனைத்தும் உடையவர்கள் எனவும் அறிவில்லாதவர்கள் எதுவுமே இல்லாதவர்கள் எனவும் அறிவுடமை என்ற அதிகாரத்தில் வெளிப்படுத்துகின்றார்.

அறிவின் பயன்கள்

பிற உயிரின் துன்பத்தை தமது துன்பம் போல கருதுவது அறிவினுடைய பயன் ஆகும். இவ்வாறு பிறர் துன்னபத்தை தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை.

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அறிவினை படைத்த இறைவன் பகுத்தறிவு என்பதை மனிதரிடத்து மட்டும் படைத்து ஏனைய விலங்குகளிடம் இருந்து மனிதனை வேறுபடுத்தியுள்ளார்.

பகுத்தறிவின் மூலம் நாம் நல்லவை எது தீயவை எது என பிரித்தறிய முடியும். அறிவுடையாரால் மாத்திரமே கல்வி, வீரம், செல்வம் என அனைத்தையும் தமதாக்கி கொள்ள முடியும்.

முடிவுரை

மனிதர்கள் தாம் கொண்டுள்ள அனைத்து செல்வங்களையும் ஏதாவது ஒரு வகையில் இழந்து விடக் கூடும். ஆனால் கல்வியினாலும், கேள்வியினாலும் அவரவர் கொண்டுள்ள அறிவு மாத்திரம் எக்காலத்திலும் எக்காரணத்தினாலும் அழித்துவிட முடியாது.

அறிவினால் தம்மையும் தாம் சார்ந்தவற்றையும் காத்திட முடியும் இழந்தவற்றை கூட மீளப் பெற முடியும். அறிவினால் உண்டாகும் ஆற்றலானது எம்மை பிறரிடத்து மேன்மையுடையவராக காட்டக் கூடியதாகும்.

You May Also Like:
கல்வியால் உயர்ந்தவர்கள் கட்டுரை
மூன்றாவது கண் கல்வி கட்டுரை