என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை

ennai ertha tamil alumai katturai in tamil

இந்த பதிவில் “என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை” பதிவை காணலாம்.

வரலாற்றில் போற்றப்படும் தமிழ் ஆளுமைகளில் என்னை ஈர்த்தவராக மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காணப்படுகின்றார்.

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாழ்க்கை
  • இலக்கியப் பணி
  • தேசப்பற்று
  • படைப்புக்கள்
  • முடிவுரை

முன்னுரை

வரலாற்றில் போற்றப்படும் தமிழ் ஆளுமைகளில் என்னை ஈர்த்தவராக மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காணப்படுகின்றார். தன் இலக்கிய அறிவாலும், தேசப்பற்றினாலும் இன்று வரை மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவராக காணப்படுகின்றார்.

தன் இலக்கியங்களின் வாயிலாக தனது தமிழ்ப்பற்றினையும் தேசப்பற்றினையும் வெளிப்படுத்தினார். பெண்ணியம் போற்றி அவர்களின் முன்னேற்றத்திற்கும் வழி வகுத்தவராக உள்ளார்.

வாழ்க்கை

சின்னசாமி ஐயர் இலக்குமி தம்பதியருக்கு மகனாக 1882 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர் சிறுபராயத்தில் சுப்பையா என அழைக்கப்பட்டார்.

தனது பதினொராம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897ம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தமது வாழ்நாள் முழுவதிலும் பல பத்திரிக்கைகளில் இதழாசிரியராக பணி புரிந்ததுடன் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி

தாய்மொழி தமிழ் மீது அளவு கடந்த அன்பு கொண்ட இவர் பன்மொழிப் புலமை பெற்று சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், மற்றும் ஆங்கிலத்திலும் தனிப்புலமை பெற்றதுடன் அம்மொழிகளின் சிறப்புடைய பல படைப்புக்களை தமிழாக்கம் செய்துள்ளார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் தனி ஈடுபாடு கொண்ட இவர் அழகியல் உணர்வும், தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவராக அறியப்படுகின்றார்.

தேசியக்கவி என்ற வகையில் தன் கவித்திறனால் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படக்கூடிய அளவிற்கு சிறப்பு பெற்ற பாரதியார் தமிழ் கவிஞர்களில் தன்னிரகற்ற கவிஞராகவும் உள்ளார்.

தேசப்பற்று

விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை தேசிய போராட்டத்திற்கு ஒருங்கிணைத்த காரணத்தினால் தேசியக்கவியாக போற்றப்படுகின்றார்.

பாரதியார் தான் பணிபுரிந்த பத்திரிக்கைகளான சுதேச மித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, சூர்யோதயம், கர்மயோகி, பால பாரதம் ஆகிய பத்திரிகைகளில்

தனது தேச உணர்வையும் ஆங்கிலேய காலணித்துவத்திற்கு எதிரான கருத்துக்களையும் பரப்பியதன் விளைவாக பல பத்திரிகைகள் தடை செய்யப்பட்டதுடன் இதற்காக சிறையிலும் அடைக்கப்பட்டார்.

பெண்ணிய விடுதலையின் ஊடாக சமூக மாற்றத்திற்கும் பாரியளவில் பங்கெடுத்தார்.

படைப்புக்கள்

இந்தியாவிலே தமிழ் நூல்களை நாட்டுடமையாக்கல் திட்டத்தின்கீழ் முதல் முதலாக நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புக்கள் பாரதியின் படைப்புக்களே ஆகும்.

இவரது படைப்புக்களாக குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாரதி அறுபத்தாறு, ஞானப்பாட்டு, விடுதலைப் பாடல்கள், பாரதியார் பகவத் கீதை, உத்தம வாழ்க்கை சுதந்திர சங்கு, ஞான ரதம், பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, விநாயகர் நான்மணி மாலை, நவதந்திரக் கதைகள் போன்றவற்றை கூறலாம்.

முடிவுரை

1921 ஆம் ஆண்டு திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டு 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

இவர் இந்திய தேசத்திற்கு சுதந்திரம் பெற்று தர தனது ஆயுதமாக தமிழையும் தனது இலக்கிய திறனையும் பயன்படுத்தியதன் விளைவாக இவரை பின் தொடர்ந்து பல கவிஞர்களும் தேப்பற்று மிக்க இலக்கியங்களை உருவாக்கி மக்களிடையே தேசப்பற்றினை விதைக்கத் தொடங்கினர்.

இதன் விளைவாகவே என்னை ஈர்த்த தமிழ் ஆளுடையாக இவர் காணப்படுகின்றார்.

You May Also Like:
கவிஞர் பாரதிதாசன் கட்டுரை
பாரதியின் விடுதலை உணர்வு கட்டுரை