விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

kalpana chawla katturai in tamil

இந்த பதிவில் “விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை” பதிவை காணலாம்.

சர்வதேச ரீதியில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்தக்காட்டாக விளங்கியவர் கல்பனா சாவ்லா ஆவார்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாழ்க்கை
  • கல்வி
  • விண்வெளி பயணம்
  • இறுதி விண்வெளி பயணம்
  • முடிவுரை

முன்னுரை

விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா பல பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றார் என்றால் அது மிகையாகாது.

ஒரு சாதாரண பள்ளியில் படித்து பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியியலாளராக வாழ்ந்து காட்டினார். இந்தக் கட்டுரையானது சாதனை பெண் கல்பனா சாவ்லா பற்றியதாக அமைந்துள்ளது.

வாழ்க்கை

கல்பனா சாவ்லா அவர்கள் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற இடத்தில் 1961 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதலாம் திகதி பனராஸ் லால் சாவ்லாவுக்கும் சன்யோகிதா தேவிக்கும் மகளாக பிறந்தார்.

இவரது குடும்பம் ஒரு பஞ்சாபி குடும்பமாகும். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும் சஞ்சய் என்ற ஒரு ஆண் சகோதரனும் இருந்தனர்.

கல்வி

இவர் தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். 1982இல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் கல்வி பயின்று இளங்களை பட்டமும் பெற்றார்.

1984இல் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

1986இல் பௌல் தேரில் உள்ள கொலராடோ பல்கலை கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு 1988இல் விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

விண்வெளி பயணம்

1988இல் நாசாவில் இணைந்த இவர் விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க தகுதி சான்றிதழ் பெற்றதோடு ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார்.

1995இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொலம்பிய விண்வெளி ஊர்தியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டு 1997 இல் மேற்கொண்ட பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகராமாக பூமிக்கு திரும்பினார்.

இறுதி விண்வெளி பயணம்

தனது முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த சாவ்லா தனது இரண்டாவது பயணத்திற்காக தயாராகினார்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16 இல் விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. சாவ்லா உட்பட 7 பேர் அதில் பயணித்தனர்.

16 நாட்கள் ஆய்வை வெற்றிகரமாக முடித்து பூமிக்கு திரும்பிய அந்த விண்கலம் டெக்ஸாஸ் மாநில வான் பரப்பில் வெடித்து சிதற சாவ்லா உட்பட அதில் பயணித்த அனைவரும் இறந்தனர்.

முடிவுரை

ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. சர்வதேச ரீதியில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்தக்காட்டாக விளங்கியவர்.

கனவுகளை கண்டு அவற்றை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும் முழுமனதோடும் செயற்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்மணியை நாமும் போற்றுவோம்.

You May Also Like :
தூய்மைக்கேடு கட்டுரை
விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா