உலக தாய்ப்பால் தினம்

ulaga thaipal dhinam

உலக தாய்ப்பால் தினம்ஆகஸ்ட் 1 – 7
World Breastfeeding WeekAugust 1-7

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை “உலக தாய்ப்பால் வாரம்” கடைப்பிடிக்கப்படுகிறது.

தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரமாகும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.

உலகில் கலப்படம் செய்யாத ஒரேயொரு உணவு குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஆகும். தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கின்றது.

உலக சுகாதார அமைப்பு (WHO) தாய்ப்பாலை குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து ஆதாரமாக அங்கீகரித்துள்ளது.

WHO மற்றும் UNICEF ஆகிய அமைப்புகள் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குழந்தையின் வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களுக்கு தொடர வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றன.

தாய்க்கு, தாய்ப்பால் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. மற்றும் மகப்பேற்றுக்கு பின்னான மனச்சோர்வை உருவாக்கும் வாய்ப்புகளையும் குறைக்கிறது.

உலக தாய்ப்பால் தினம் உருவான வரலாறு

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (UNICEF) ஆகியவை தாய்ப்பாலை ஊக்குவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் 1989 இல், (WHO மற்றும் UNICEF)

“தாய்ப்பால் ஊட்டுவதைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் ஆதரித்தல் மகப்பேறு சேவைகளின் சிறப்புப் பங்கு”

என்ற தலைப்பில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது. இதிலிருந்தே உலக தாய்ப்பால் தின வரலாறு ஆரம்பமானது எனலாம்.

1991 ஆம் ஆண்டில், UNICEF மற்றும் WHO இன் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக உலக தாய்ப்பால் நடவடிக்கை சங்கம் உருவாக்கப்பட்டது. 1992ல் இந்தப் பிரச்சாரத்தை ஊக்குவிக்க ஒரு வாரம் முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டது.

அதனடிப்படையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில், சுமார் 70 நாடுகள் உலகத் தாய்ப்பால் தின கொண்டாட்டத்தைத் தொடங்கின. தற்போது உலகளாவிய ரீதியில், இந்த எண்ணிக்கை 170 நாடுகளாக வளர்ந்துள்ளது.

தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கம்

ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது ஒரு தாய்க்குக் கிடைக்கும் மிக பெரும் உன்னதமான அனுபவங்களில் ஒன்றாகும்.

ஒரு குழந்தைக்கும் தாய்க்கும் இது மிகவும் இன்றியமையாதது எனவே, இதன் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை உலக தாய்ப்பால் வாரத்தை உலக நாடுகள் கொண்டாடுகின்றன.

மேலும் குழந்தைகளின் முழு வளர்ச்சிக்காக தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.

உலக தாய்ப்பால் தினம் முக்கியத்தும்

இன்றைய தாய்மார்கள் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

மேலும் சிலர் தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போவதாக எண்ணி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கின்றனர்.

இத்தகைய நிலைமைகளில் உலக தாய்ப்பால் தினமானது விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும், தாய்ப்பால் கொடுப்பதின் அவசியத்தை நினைவூட்டுவதற்கும் முக்கியமாக அமைகின்றது.

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் குழந்தைக்கு மிகவும் சத்தானது மற்றும் அவசியமானதாகும்.

இது பல நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களான நீர், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், அமினோ அமிலங்கள், என்சைம்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் நிறைந்துள்ளன.

இது குழந்தைக்கு நன்மை அளிப்பது மட்டுமல்லாமல், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடையே புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.

You May Also Like:
சர்வதேச மகளிர் தினம்
உலக வறுமை ஒழிப்பு தினம்