சர்வதேச ஆதிவாசிகள் தினம்

உலக ஆதிவாசிகள் தினம்

சர்வதேச ஆதிவாசிகள் தினம்ஆகஸ்ட் 9

உலகில் பல மில்லியன் பழங்குடி மக்கள் பல நாடுகளில் வாழ்கின்றனர். இந்தியாவில் சுமார் 104 மில்லியன் ஆதிவாசி மக்கள் வாழ்கின்றார்கள்.

உலகிலேயே பல்வேறு நாடுகளில் வாழுகின்ற ஆதிவாசிகள் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் வாழுகின்ற ஆதிவாசிகள் செவ்விந்தியர்கள் என்றும், அவுஸ்திரேலியாவில் அபோர்ஜினஸ் என்றும், ஆபிரிக்காவில் பிக்மியர் என்றும், ஜப்பானில் ஐனியர் என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்றனர்.

காலனியாதிக்கத்தின் காரணமாக ஆதிவாசி மக்கள் தங்கள் கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் அவர்களின் நிலங்கள் மற்றும் இயற்கை வளங்களின் மீதான உரிமைக்காக பல பழங்குடி மக்கள் இன்றும் போராடி வருகின்றனர்.

ஆதிவாசிகள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் இவர்கள் வேடுவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

எனினும் அண்மைக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்குள் தம்மை மாற்றிக்கொண்டு ஏனைய சமுதாயத்தினரை போல வாழும் நிலைக்கு மாறியுள்ளனர். எனினும் இவர்கள் இன்றுவரை பல பிரச்சினைகளை எதிர்நோக்கியே வாழ்ந்து வருகின்றனர்.

சர்வதேச ஆதிவாசிகள் தினம்

உலக ஆதிவாசிகள் தினம் உருவான வரலாறு

1982 இல், ஜெனிவாவில் பழங்குடி மக்கள் தொகைக்கான ஐக்கிய நாடுகள் சபை பணிக்குழுவின் முதல் கூட்டம் இடம் பெற்றது. இத்தினத்தை நினைவு கூறும் வகையில்தான் உலக ஆதிவாசிகள் தினம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

23 டிசம்பர் 1994, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதன் தீர்மானம் 49/214 இல், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று உலக பழங்குடியின மக்களின் சர்வதேச தினம் அனுசரிக்கப்படும் என்று முடிவு செய்தது.

அதனடிப்படையில் உலகிலுள்ள பல நாடுகளும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதியை உலக ஆதிவாசிகள் தினமாகக் கொண்டாடி வருகின்றன.

உலக ஆதிவாசி தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கம்

இந்த நாளில் ஆதிவாசி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றினை மேற்கொள்வதற்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள பழங்குடியின மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் போராட்டங்களின் மீது உலகளாவிய கவனத்தை ஈர்ப்பது மற்றும் பழங்குடியினரின் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

மேலும் இவர்களது வறுமை, கல்வி, சுகாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்றவற்றை முன்னேற்றுவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.

முக்கியத்துவம்

ஆதிவாசிகள் எதிர்நோக்குகின்ற வறுமை, இடப்பிரச்சனை மற்றும் போசனை குறைபாடு போன்ற பிரச்சனைகளை உலகிற்கு வெளிப்படுத்தி இவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்தும் நாளாக உலக ஆதிவாசிகள் தினம் காணப்படுகின்றது.

உலகில் பல நாடுகளில், ஆதிவாசி மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர், அவர்களின் கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் இழிவுபடுத்தப்பட்டு, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

எனினும் ஆரம்ப காலத்தைவிட தற்போது முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், ஆதிவாசி சமூகங்கள் இன்றும் உலகளவில் தங்கள் நிலத்தில் மிகச் சிறிய சதவீதத்தை மட்டுமே சொந்தமாக, சட்டப்பூர்வமாகச் வைத்துள்ளனர்.

உலக அளவில் வறுமையில் வாழும் மக்கள் தொகையில் 15% ஆதிவாசிகளே ஆவர். ஆதிவாசி மக்களுக்காக இதுவரை என்ன செய்தோம் என்பதைவிட இனிமேல் அதிகமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதை இந்நாள் அனைவருக்கும் நினைவூட்டுகின்றது.

யுனெஸ்கோ ஆதிவாசி மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு துணை நிற்கின்றது. நாமும் ஆதிவாசி மக்களது உரிமைகளைப் பேணவும் பாதுகாக்கவும் துணைநிற்க வேண்டும்.

You May Also Like:
உலக தாய்ப்பால் தினம்
சர்வதேச மகளிர் தினம்