உலக எழுத்தறிவு தினம்

ulaga elutharivu thinam

உலக எழுத்தறிவு தினம்செப்டம்பர் 8
International Literacy DaySeptember 8

ஏதாவது ஒரு மொழியில் புரிதலுடன் பேசவும், எழுதவும் தெரிந்தவர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் ஆவர். எழுத்தறிவு என்பது அடிப்படைக் கல்வியின் இதயம் போன்றது. இது ஒவ்வொருவரினதும் அப்படை உரிமையாகும்.

எழுத்தறிவு மனித வாழ்க்கையில் கல்வி, வாழ்க்கைத்தரம் மற்றும் மதிப்பையும் உயர்த்துகிறது. அதுமட்டுமன்றி மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு எழுத்தறிவு இன்றியமையாததாகும்.

இதனால்தான் “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என ஒளவையாரும், “எண்ணென்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என வள்ளுவரும் சங்ககாலத்திலேயே அறிவின் பெருமையை போற்றியுள்ளனர்.

உலக எழுத்தறிவு தினம்

உலக எழுத்தறிவு தினம் வரலாறு

கி.மு 8000 முற்பகுதியில் கணக்கிடும் கருவிகள் வந்த பின்பு எண்ணியல் வேகமாக வளர்ந்தது. அப்பொழுது எழுத்தறிவு பற்றிய சிந்தனை தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

1965 ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற கல்வியறிவின்மை ஒழிப்புக் குறித்த உலக கல்வி அமைச்சர்களின் மாநாட்டில் சர்வதேச எழுத்தறிவு தினம் என்ற யோசனை பிறந்தது.

இதில் தேச வளர்ச்சி, உடல் நலம் மற்றும் தரமுயர்ந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் எழுத்தறிவின்மை ஒரு பெருந்தடை என வலியுறுத்தப்பட்டது.

1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி, யுனெஸ்கோ உலக அளவில் கல்வியறிவின்மை பிரச்சினைகளை எதிர்த்துப் போராட செப்டம்பர் 8 ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவித்தது.

அன்று தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக உலகம் முழுவதும் சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகின்றது.

சர்வதேச எழுத்தறிவு தினத்தின் நோக்கம்

யுனெஸ்கோ அமைப்பு உலக மக்கள் அனைவருக்கும் எழுத்தறிவுவை மேம்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்பட்டதே உலக எழுத்தறிவு தினம் ஆகும்.

கல்வியறிவின்மையை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்ல, தனிநபர்கள் மற்றும் முழுச் சமூகங்களையும் மேம்படுத்தக்கூடிய ஒரு கருவியாக எழுத்தறிவை மேம்படுத்துவதும் அவசியம் என்பதை இந்த தினம் வலியுறுத்துகின்றது.

எழுத்தறிவு பெற்றுக்கொள்ள முடியாத வயது வந்த அதாவது வயதில் மூத்தவருக்கு முறைசாரா கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்குடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகின்றது.

உலக எழுத்தறிவு தினம் முக்கியத்துவம்

அறிவை விரிவாக்க, மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க, உலகோடு ஒட்டி வாழ அறிவு பெறல் இன்றியமையாததாகும். எனினும் உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர்.

தொடக்கக் கல்வியைப் பயில வேண்டிய பல கோடி குழந்தைகள் பாடசாலைகளில் சேர்க்கப்படாமல் இருக்கின்றனர்.

எழுத்தறிவு பெற வேண்டியதன் அவசியம் பற்றியும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகளாவிய ரீதியில் எழுத்தறிவை மேம்படுத்துவதற்கான ஒரு நாளாக இந்நாள் காணப்படுகின்றது.

இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து அவர்களின் வாழ்க்கை மேம்படும்.

எழுத்தறிவினை மேம்படுத்துவதன் மூலம் வறுமை, குழந்தைத் திருமணம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் போன்ற சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளைக் களைந்து சமூகத்தையும், நாட்டையும் ஏன் ஒட்டு மொத்த உலகையும் மேம்படுத்த முடியும்.

எழுத்தறிவு மூலம் அமைதி மற்றும் ஐனநாயகத்தை நிலைநாட்ட முடியும். எனவே இன, மத, மொழி வேறுபாடின்றி சமூகத்தில் அனைவரும் எழுத்தறிவு பெற உறுதி செய்ய வேண்டும்.

அடிப்படை எழுத்தறிவைக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போதும் தனி மனிதனுக்கும் தேசத்துக்கும் எழுத்தறிவு முக்கியம் என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.

எழுத்தறிவு தினத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு எம்மாலான பங்களிப்பினை மேற்கொள்ள வேண்டும்.

You May Also Like :
உலக புத்தக தினம்
அறிவு பற்றிய கட்டுரை