குழந்தைகள் தின விழா கட்டுரை

kulanthaigal thina villa katturai

இன்றைய குழந்தைகளே நாளைய எதிர்காலத்தின் திறவுகோள் ஆவார்கள். அந்தவகையில் எப்பொழுதும் பாராட்டப்படக்கூடியவர்களே குழந்தைகள் இத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகளுக்கான விழாவாக குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகின்றது.

குழந்தைகள் தின விழா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • குழந்தைகள் தின விழா
  • நேருவும் குழந்தைகளும்
  • குழந்தைகள் மீது எமக்குள்ள கடமைகள்
  • இன்றைய குழந்தைகளும் செல்பேசியும்
  • முடிவுரை

முன்னுரை

எமது கவலைகளுக்கு மருந்தாகத் திகழ்பவர்களே குழந்தைகள். அத்தகைய குழந்தைகள் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக் கூடியவர்களாக திகழ்கின்றார்கள். அவர்களை சிறந்த முறையில் வளர்ப்பதானது நாளை சிறந்த தலைவர்களாக உருவாக வழிவகுக்கும்.

குழந்தைகள் தின விழா

குழந்தைகள் விழாவானது இந்தியாவில் நவம்பர் 14ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதே போன்று ஒவ்வோர் நாட்டிலும் குழந்தைகள் தின விழாவானது இடம் பெற்று வருவது சிறப்பிற்குரியதாகும்.

ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தின விழாவானது குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துவதன் முகமாக இடம் பெறுகின்றது.

அந்த வகையில் இந்திய தேசத்தில் நவம்பர் 14ம் நாளன்று நேருவின் திருவுருப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அவர் பற்றிய சொற்பொழிவுகள் ஒவ்வோர் பள்ளியிலும் இடம் பெறுகின்றது.

மேலும் குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளுக்கான பல போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவதோடு பாராட்டுக்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அன்றைய நாளில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாகவே காணப்படுவார்கள். இவ்வாறாகவே குழந்தைகள் தின விழாவானது வெகு விமர்சையாக இடம் பெற்று வருகின்றது.

நேருவும் குழந்தைகளும்

மனிதருள் மாணிக்கமானவராக திகழ்பவரும் இந்தியாவில் முதல் பிரதமாரான நேரு அவர்கள் குழந்தைகள் மீது அதிக அன்புடனே நடந்து கொள்வார்கள். இதன் காரணமாக குழந்தைகள் இவரை நேரு மாமா என்றே அழைத்தனர்.

இது மாத்திரமல்லாது குழந்தைகளுக்கான இலவச உணவு வழங்கும் திட்டங்களை கொண்டு வந்தமையானது குழந்தைகள் மீது இவர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடே ஆகும்.

இவ்வாறான செயற்பாட்டினை முன்னிட்டு அவருடைய பிறந்த தினமான நவம்பர் 14ம் திகதி அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

குழந்தைகள் மீது எமக்குள்ள கடமைகள்

எம் சமூகத்தை மாற்றும் ஆற்றல் குழந்தைகளிடமே உள்ளது என்ற வகையில் குழந்தைகளை சரியான பாதையில் வழி நடத்துவது எமது கடமையாகும். அந்தவகையில் சில குழந்தைகள் தமது சிறுபராயத்திலிருந்து தனது வறுமையின் காரணமாக தொழில் செய்கின்ற நிலை காணப்படுகின்றது.

இத்தகைய குழந்தைகளை கல்வி நடவடிக்ககைகளில் ஈடுபடுத்த அனைவரும் ஒன்றினைந்து செயற்படல் வேண்டும்.

அத்தோடு ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வை ஒளிரச்செய்ய துணைநிற்றல், ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாத்தல், குழந்தைகள் மீது அன்புடன் நடத்தல் என குழந்தைகள் மீதான கடமையை நிறைவேற்றுவது அனைவரினதும் கடமையாகவே காணப்படுகின்றது.

இன்றைய குழந்தைகளும் செல்பேசியும்

இன்றைய குழந்தைகள் தனது செயற்பாடுகளை செல்பேசியுடனேயே மேற்கொள்கின்றது. இதன் காரணமாக உடல் ஆரோக்கியமானது பாதிப்படைக்கிறது.

அதாவது பாரதியாரின் கூற்றிற்கிணங்க ஓடி விளையாடு பாப்பா என்ற நிலை மாறி செல்பேசியுடன் விளையாடும் நிலை உருவாகியுள்ளமை குழந்தைகளின் மனநிலையை பாதிப்புள்ளாக்கும் ஒரு செயற்பாடாகும்.

ஒரு குழந்தை மண்ணில் விளையாடி, ஓடி ஆடி விளையாடுவதனூடாகவே உடல் ஆரோக்கியம் பேணப்படுமே தவிர செல்போனினால் அல்ல என்பதனை பெற்றோர்கள் உணர்ந்து செயற்படல் வேண்டும்.

முடிவுரை

குழந்தைகளானவர்கள் குழந்தைகள் தினத்தில் மட்டும் கொண்டாடப்படுபவர்கள் அல்ல மாறாக ஒவ்வொரு நாளிலும் கொண்டாடப்படுபவர்களே என்பதனை உணர்ந்து செயற்படுவதோடு நின்றுவிடாது குழந்தைகளது நலன்களை பேணுவதும் அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

மனிதருள் மாணிக்கம் நேரு கட்டுரை

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை